புயல் என்பது தாழ்வழுத்தப் பகுதியில் வெப்ப மற்றும் குளிர் காற்று முகங்கள் சந்திப்பதால் உருவாகும் பலத்த காற்று ஆகும்.
புயலின் போது கடல் மற்றும் பேராழிகளில் தோன்றும் அலைகள் தீவிரமாக இருக்கும். அப்பகுதியில் புயல் காற்றினை தடை செய்ய எவ்வித தடுப்பும் இல்லாததே இதற்கு காரணமாகும்.
உலகில் புயலால் பாதிக்கப்படக் கூடிய 6 முக்கிய பகுதிகளில் இந்திய கடற்கரைப் பகுதியும் ஒன்று. உலக முழுவதிலும் ஒரு வருடத்திற்கு சுமார் 80 புயல் காற்று நிகழ்வுகள் ஏற்படுகின்றன.
தென்னிந்திய கடற்கரைப்பகுதிகள் புயலால் பாதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் சோழ மண்டலக் கடற்கரைப்பகுதிகளான ஒரிஸா மற்றும் ஆந்திரபிரதேசம் மாநிலங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
புயல் எப்படி உருவாகிறது?
புவியானது 23½ டிகிரி சாய்வில் தனது அச்சில் சுழலுகிறது. இதனால் சூரியனிடமிருந்து பெறப்படும் வெப்பமானது ஒரே சீராக புவியின் எல்லா இடங்களிலும் இருப்பதில்லை.
சூரிய வெப்பம் மிகுதியாக உள்ள புவிப்பகுதியில் உள்ள காற்று வேகமாக வெப்பமடைகிறது. வெப்பமடைந்த காற்றானது மேல் நோக்கி பயணிக்கிறது. அதனால் அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்து வெற்றிடம் உருவாகிறது.
அப்பொழுது காற்றின் அழுத்தம் அதிகம் உள்ள பகுதியிலிருந்து வெற்றிடத்தை நோக்கி காற்று வீச ஆரம்பிக்கிறது.
அப்போது மேலே செல்லும் வெப்பக்காற்றானது குளிர்ச்சியடைந்து வானில் தாழ்நிலையில் தங்குகிறது. இதனால் தாழ்வுநிலை உருவாகிறது.
தாழ்வுநிலையின் காரணமாக அவ்விடத்தில் காற்றின் அழுத்தம் அதிகரிக்கிறது. இதுவே காற்றழுத்த தாழ்வுநிலையாகும்.
பூமியின் சுழற்சியினால் காற்றானது அலைகழிக்கப்பட்டு வேகம் அதிகரித்து புயலாக மாறுகிறது.
காற்றழுத்த தாழ்வுநிலையின் போது காற்றானது மணிக்கு 31 கி.மீ வேகத்தில் வீசினால் அது குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையாகும்.
காற்றானது மணிக்கு 32-51வரை கி.மீ வேகத்தில் வீசினால் அது மிதமான காற்றழுத்த தாழ்வுநிலையாகும்.
காற்றானது மணிக்கு 52-61 வரை கி.மீ வேகத்தில் வீசினால் அது தீவிர காற்றழுத்த தாழ்வுநிலையாகும்.
காற்றானது மணிக்கு 62-88 வரை கி.மீ வேகத்தில் வீசினால் அது புயல்.
காற்றானது மணிக்கு 89-118 வரை கி.மீ வேகத்தில் வீசினால் அது மேல் கடும்புயல்.
காற்றானது மணிக்கு 119-221 வரை கி.மீ வேகத்தில் வீசினால் அது மிகக் கடும்புயல்.
காற்றானது மணிக்கு 222 கி.மீ-க்கு மேல் வீசினால் அது சூப்பர் புயல்.
புயலின் விளைவுகள்
புயல் எப்பொழுதும் பலத்த காற்றுடன் பெரும் மழையையும், வெள்ளப் பெருக்கையும் ஏற்படுத்துகின்றது.
மரங்கள் வேருடன் சாய்தல், வடிகால் அமைப்புகளைப் பாதித்தல், மின்சாரத் துண்டிப்பு, போக்குவரத்து துண்டிப்பு, நீர்த் தேங்குதல், நோய்கள் பரவுதல், பயிர்கள் அழிவு, மண் அரிப்பு, பழைய கட்டிடங்கள் சிதைவடைதல் மற்றும் உயிர் சேதங்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
1999 அக்டோபர் 29-ல் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழ்வழுத்தத்தினால் ஒரிஸாவில் மாபெரும் புயல் மணிக்கு 260-300 கி.மீ வேகத்தில் வீசியது.
இது ஒரிஸா கடற்கரையை ஏறத்தாழ 144 கி.மீ வரைப் பாதித்தது. இப்புயலால் கடல் நீர்மட்டம் இயல்பை விட 12மீட்டர் உயர்ந்தது.
இது உள்நாட்டுப் பகுதியில் 36 மணி நேரத்தில் 250 கி.மீ மேல் பயணித்தது.
இதனால் 20 மில்லியன் ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன. மரங்கள் மற்றும் தாவரங்கள் வேருடன் சாய்ந்தன. இப்புயல் அதிக சேதங்களை ஏற்படுத்திச் சென்றது.
மேலும் இது மக்களின் வாழ்வாதாரங்களையும் சிதைத்தது. இதனால் ஆயிரக்கணக்கான இறப்புகள், பல மில்லியன் மதிப்புள்ள பொருட் சேதங்கள் ஏற்பட்டன.
பேரிடர் தணித்தல்
மக்களை தாழ்வான பகுதிகளிலிருந்து அருகில் உள்ள உயரமான பகுதிகளுக்குச் செல்ல வலியுறுத்த வேண்டும்.
நீர் தேங்கியுள்ள பகுதிகளில் நீர் வடிய தற்காலிக கால்வாய் அமைக்கப்பட வேண்டும்.
பழைய கட்டிடங்களில் வசிக்கும் மக்களை தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும்.
குடிநீர் குழாய்களை பாதுகாப்பது அவசியமாகும்.
மக்கள் அருகில் உள்ள மின்சார கம்பிகளிலிருந்து ஏதாவது கம்பி அறுபட்டு மின் கசிவுகள் உள்ளதா என கவனிக்க வேண்டும்.
மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்த்தல் வேண்டும்.
நோய்கள் பரவுவதைத் தடுக்க அனைவரும் கொதிக்க வைத்த நீரை பருக வேண்டும்.
உள்ளுர் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் சொல்லப்படும் குறிப்புகளை அனைவரும் கவனிக்க வேண்டும்.
மறுமொழி இடவும்