தேனென்றும் மானென்றும் திங்கள் என்றும்
தேவதையும் திருமகளும் நீர்தாம் என்றும்
வானின்று பொழிகின்ற அமிழ்தம் என்றும்
வளப்படுத்தும் ஆறெல்லாம் பெண்தாம் என்றும்
ஆனென்றும் அழியாத ஆற்றல் என்றும்
அழகுகலை இலக்கியங்கள் தாய்மை என்றும்
மீனென்றும் நிலமென்றும் பைம்பொன் என்றும்
மிகவுயர்த்த மருளடைந்தாய் பேதைப் பெண்ணே!
கதைபேசி நெறிபேசி மானம் பேசிக்
கற்பனையாம் பொய்புளுகு கலைகள் பேசி
அதைபேசி இதைபேசி அல்லல் பட்டீர்
அணுவேனும் முன்னேற்றம் அடைந்தா விட்டீர்
வதைபட்டீர் வரைபட்டீர் அடிமைப் பட்டீர்
வழிநெடுக சிறைபட்டீர் ஆண்கள் காலில்
உதைபட்டீர் துயர்பட்டீர் உருப்பட் டீரா?
உலகத்தில் உம்போல உள்ளார் யாரோ?
கல்சுமந்தீர் மண்சுமந்தீர் காட்டில் மேட்டில்
கால்கிழிந்தீர் கைகிழிந்தீர் கழுத்தை நீட்டி
வில்போல முதுகெலும்பை வளைத்து விட்டீர்
விறகுக்குப் பதிலாக எரிந்தீர் அன்றிப்
பல்தோன்றிப் பால்தோன்றிப் பாடை தன்னில்
பஞ்சாடை யுடுத்தியுடற் படுக்கும் போதும்
சொல்சுமந்தீர் புண்சுமந்தீர் என்றைக் கேனும்
சுகமாக இருந்தீரா? கண்ணீர் அன்றோ!
புகைமண்டும் வரலாற்றின் இருட்டை விட்டுப்
புலர்காலை ஒளியெனவே புறப்ப டுங்கள்
நகைமண்டும் காவியத்தை இதிகா சத்தை
நச்சாமல் புதுப்பாடல் இசைக்கச் செய்வீர்
சிகைமாற்றம் ஆணினத்தை நகலெ டுத்தல்
சிக்காதீர் இதுவெல்லாம் புரட்சி இல்லை
குகைமாதர் இனியில்லை என்னு மாறு
குவலயத்தைப் புரட்டியெடு நானுன் ஆளே!
பேரினப் பாவலன்
ஆவடி, திருவள்ளூர்
கைபேசி: 8667043574