புலி மீசை என்பது அன்பை விளக்கும் ஓர் அற்புத கொரியக் கதை.
மானூர் என்ற ஊரில் இருந்த மலையில் முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அவ்வூர் மற்றும் அருகில் இருந்த ஊர் மக்களுக்கும் அறிவுரைகள் மற்றும் ஆலோசனை வழங்கி வந்தார்.
அவரிடம் அற்புத சக்திகள் இருப்பதாக அவரிடம் அறிவுரை பெறவரும் மக்கள் எல்லோரும் கருதினர்.
அன்பிலாக் கணவர்
ஒருநாள் அவ்வூரைச் சார்ந்த பெண் ஒருவர் முனிவரைக் காண வந்தாள். அவள் முனிவரிடம் “என் கணவர் தொழில் நிமித்தமாக வெளியூர் சென்றுவிட்டு மூன்று ஆண்டுகள் கழித்து தற்போதுதான் ஊர் திரும்பி உள்ளார்.
ஆனால் அவர் என்னிடம் முன்போல் பாசமாக இருப்பதில்லை. எப்போதும் என் மீது கோபப்படுகிறார். அவர் என்மேல் பழையபடி அன்புடன் இருக்க நீங்கள்தான் வழிகாட்ட வேண்டும்” என்று கூறினாள்.
அதற்கு அம்முனிவர் “தொழிலில் உண்டாகும் பிரச்சினைகள் மற்றும் அதனை சமாளிக்கும் விதங்கள் பற்றிய சிந்தனையால் அவர் உன்னிடம் அன்பு காட்டாமல் இருந்திருக்கலாம். அதிலிருந்து அவர்மீள சிலநாட்கள் ஆகலாம். அதுவரை நீ பொறுமையாக இரு” என்று கூறினார்.
ஆனால் அந்தப்பெண் அதனை ஏற்கவில்லை. “உங்களிடம் அபூர்வ சக்திகள் இருப்பதாக எல்லோரும் கூறுகிறார்கள். ஆதலால் நீங்கள் அதனைப் பயன்படுத்தி என் கணவரை என்னிடம் அன்பு காட்டச் செய்யுங்கள்” என்று கூறினாள்.
அதற்கு முனிவர் அப்பெண்ணிடம் “உன்னுடைய பிரச்சினையை தீர்க்கக்கூடிய மருந்து ஒன்று உண்டு. அதனை தயார் செய்ய புலி மீசை தேவை. ஆனால் என்னிடம் இப்போது புலி மீசை இல்லை. உன்னால் அதனைக் கொண்டு வரமுடியுமா?” என்று கேட்டார்.
அதற்கு அப்பெண் “எப்படியாவது புலி மீசையைக் கொண்டு வந்தே தீருவேன்” என்று கூறிவிட்டுச் சென்றாள்.
கிடைத்தது புலி மீசை
மறுநாள் அவள் காட்டிற்கு புலியைத் தேடிச் சென்றாள். அடர்ந்த காட்டினுள் ஆற்றின் கரையில் புலியை அப்பெண் கண்டாள். அவளைக் கண்டதும் புலி உறுமியது. அவள் பயந்துபோய் வீட்டிற்கு திரும்பி விட்டாள்.
ஆனால் மறுநாளும் புலியைத் தேடி காட்டிற்குச் சென்றாள். புலியை அதே ஆற்றின் கரையில் அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். இம்முறையும் பயந்து வீட்டிற்கு திரும்பினாள்.
இப்படியாக தினமும் காட்டிற்குச் சென்று புலியைப் பார்ப்பதை வழக்கமாகச் செய்தாள். தினமும் அப்பெண்ணைப் பார்த்து பழகிய புலி அவளைப் பார்த்து உறுமுவதை நிறுத்தியது.
இதனால் அப்பெண்ணிற்கு சிறிது தைரியம் வந்தது. அதன்பின்னர் தினமும் அப்புலிக்கு இறைச்சியைக் கொண்டு போய் போட்டாள். புலியும் அதனைத் தின்றுவிட்டு சிறிது சிறிதாக அவளுடன் பழகத் தொடங்கியது.
இதனால் அவளுக்கு தைரியம் வந்தது. புலியின் தலையை அன்புடன் வருடிக் கொடுத்தாள். புலி அவளை ஏதும் செய்யவில்லை. அவள் சட்டென்று புலியின் முகத்திலிருந்த மீசையைப் பிடுங்கினாள்.
பிடுங்கியவுடன் சற்று தாமதிக்காமல் நேரே முனிவரை காண ஓடினாள். முனிவரிடம் புலி மீசையைக் கொடுத்தாள். “இதனைக் கொண்டு எனக்கு மருந்து தயாரித்துக் கொடுங்கள்” என்று கூறினாள்.
புலி மீசையை வாங்கிய முனிவர் அதனை புலியின் முடிதான் என்பதை உறுதிசெய்து கொண்டு சட்டென அருகில் இருந்த நெருப்பில் போட்டார்.
இதனைக் கண்ட அப்பெண் திகைத்தாள்.
அதனைக் கண்ட முனிவர் அவளிடம் “புலியின் மீசையைப் பிடுங்கும் அளவுக்கு அதனுடைய அன்பை எப்படி பெற்றாய்?.
கொடூர விலங்கையே உன் அன்புக்குக் கட்டுப்படச் செய்துவிட்டாய். அப்படி இருக்கையில் உன் கணவனின் அன்பைப் பெறுவது கடினமா என்ன?” என்று கேட்டார். இதனைக் கேட்டதும் அப்பெண் தெளிவாகி மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினாள்.
பொறுமை மற்றும் அக்கறை இருந்தால் எப்படிப் பட்டவர்களிடமிருந்தும் நாம் அன்பைப் பெறலாம் என்பதைப் புலி மீசை கதையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
மறுமொழி இடவும்