புளிக்குழம்பு செய்வது எப்படி?

புளிக்குழம்பு எலுமிச்சை சாதம், புளியோதரை, தயிர் சாதம் உள்ளிட்ட கலவைச் சாதம் மற்றும் வெள்ளை சாதத்துடன் சேர்த்து உண்ண மிகவும் பொருத்தமாக இருக்கும்.

புளிக்குழம்பிற்கு பொதுவாக கத்தரிக்காய், முருங்கைக்காய் சேர்த்து செய்யப்படுகிறது. இது தவிர வெண்டைக்காய், கொத்தவரங்காய் உள்ளிட்டவைகளையும் வைத்து புளிக்குழம்பு செய்யப்படுகிறது.

இனி எளிய வகையில் சுவையான புளிக்குழம்பு செய்யும்முறை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் – 150 கிராம்

தக்காளி – 50 கிராம்

முருங்கைக்காய் – 1 எண்ணம் (பெரியது)

புளி – சிறிய எலுமிச்சை அளவு (15 கிராம்)

கொத்தமல்லி இலை – ஒரு கொத்து

மசாலா பொடி ‍- 1&1/2 ஸ்பூன்

கொத்தமல்லி பொடி – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க

சின்ன வெங்காயம் – 2 எண்ணம்

நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்

கடுகு ‍- 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கீற்று

புளிக்குழம்பு செய்முறை

கத்தரிக்காயை சதுரத் துண்டுகளாக வெட்டி அசிரி களைந்த தண்ணீரில் போட்டு வைக்கவும்.

முருங்கைக்காயை சிறுதுண்டுகளாக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

நறுக்கிய கத்தரிக்காய்

தக்காளியை அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

புளியை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

கொத்தமல்லி இலையை அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

புளி ஊறும்போது

சின்ன வெங்காயத்தை தோலுரித்து சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.

க‌றிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

மிக்ஸியில் ஊற வைத்த புளி, மசாலாப் பொடி, மல்லிப் பொடி மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

தேவையானவற்றை மிக்சியில் சேர்த்ததும்
மசாலா விழுது

குக்கரை அடுப்பில் வைத்து அதில் கத்தரிக்காய், முருங்கைக்காய், தக்காளி மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலையைச் சேர்க்கவும்.

கத்தரிக்காய், முருங்கைக்காய், தக்காளி மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்ததும்

அதனுடன் அரைத்த மசாலா விழுது மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும்.

பின்னர் அதனுடன் 1&1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒருசேரக் கலந்து கொள்ளவும்.

உப்பு, மசாலா மற்றும் தண்ணீர் சேர்த்ததும்
அடுப்பில் வைக்கும் முன்

குக்கரை மூடி அடுப்பில் வைத்து ஒரு விசில் வந்ததும், அடுப்பினை சிம்மில் மூன்று நிமிடங்கள் வைத்து அடுப்பினை அணைத்து விடவும்.

குக்கரின் விசில் அடங்கியதும், திறந்து கரண்டியால் ஒருசேரக் கலந்து விடவும்.

அடுப்பிலிருந்து இறக்கிக் கிளறியதும்

வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கடுகு சேர்த்து தாளிதம் செய்து குழம்பில் கொட்டி கலந்து விடவும்.

தாளிதத்தைச் சேர்த்ததும்

சுவையான புளிக்குழம்பு தயார்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் மசாலா பொடிக்குப் பதிலாக கொத்தமல்லி பொடி, சீரக பொடி, மிளகாய் வற்றல் பொடி சேர்த்து குழம்பு தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.