புளியோதரை என்பது பழங்காலத்திலிருந்து மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் உணவு வகைகளில் ஒன்றாகும். இன்றைக்கு புளியோதரை தயாரிப்பதற்குத் தேவையான (புளிக்காய்ச்சல்) ரெடிமேடாக எல்லாகடைகளிலும் கிடைக்கிறது. இருந்தாலும் வீட்டில் புளிக்காய்ச்சல் தயார் செய்து புளியோதரை ரெடி பண்ண 40 நிமிடங்கள் போதும்.
புளியோதரை சாதத்தை முன்பு பயணங்களின் போது சாப்பிடுவதற்கு துணி மூடையில் கட்டி எடுத்துச் சென்றுள்ளனர். எனவே புளியோதரை சாதத்தை கட்டு சாதம் என்று அழைப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. பெரும்பாலான கோயில்களில் பிரசாதமாக புளியோதரை வழங்கப்படுகிறது.
இனி சுவையான புளியோதரை செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
அரிசி – 1 கிலோ
புளி – 120 கிராம்
மஞ்சள்பொடி – 3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 250 மிலி.
மிளகு – 2 ஸ்பூன்
தாளிக்கத் தேவையான பொருட்கள்
கடுகு – 1 ஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கொத்து
உளுந்தம்பருப்பு – 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்
வத்தல் – 8
வறுக்க தேவையான பொருட்கள்
வெந்தயம் – 2 ஸ்பூன்
கொத்தமல்லி விதை – 2 ஸ்பூன்
கறுப்பு எள் – 2 ஸ்பூன்
செய்முறை
அரிசியை சாதமாக உதிரி உதிரியாக வடித்துக்கொள்ள வேண்டும். வாணலியில் வெந்தயம், எள், மல்லி விதை ஆகியவற்றை தனித்தனியே எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ளவும்.
எள், மல்லிவிதை ஆகியவற்றை பொடியாக திரித்துக் கொள்ளவும். மிளகை மட்டும் ஒன்றிண்டாக திரித்துக் கொள்ளவும். வத்தலை இரண்டாக ஒடித்துக் கொள்ளவும்.
புளியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை, வத்தல் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பின் அதனுடன் புளிக்கரைசல் மஞ்சள்பொடி ஆகியவற்றைச் சேர்க்கவும். ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை சிம்மில் வைக்கவும். அதனுடன் வறுத்த வெந்தயம்,மல்லிப்பொடி, எள்பொடி தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
புளிக்கரைசல் கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வந்தவுடன் இறக்கி விடவும். இந்த புளிக்காய்ச்சல், மிளகுத்தூள் ஆகியவற்றை சாதத்துடன் நன்கு கிளறவும். சுவையான புளியோதரை தயார்.
குறிப்பு
1) புளிக்காய்ச்சலை மட்டும் தயார் செய்து பிரிட்ஜில் வைத்துக் கொண்டு, தேவையான பொழுது சாதத்தில் கலந்து புளியோதரை தயார் செய்யலாம்.
2) விருப்பமுள்ளவர்கள் முந்திரிப் பருப்பையும் தாளிக்கும் போது சேர்த்து புளியோதரை தயார் செய்யலாம்.
3) புளியை 20 நிமிடமாவது தண்ணீரில் ஊறவிடவும்.வெந்நீரில் புளியை நனைய வைத்தால் புளிச்சாறு(எசன்சு) நன்றாக இறங்கி விடும்.
Comments
“புளியோதரை செய்வது எப்படி?” அதற்கு 2 மறுமொழிகள்