″வணக்கம் மனிதர்களே!
எப்படி இருக்கீங்க?
பல மாதங்கள் கழித்து மீண்டும் உங்கள் மத்தியில் பேசுவதில், நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
உங்களுக்கும் மகிழ்ச்சி தானே?
உம்ம்.. உங்கள் முகங்களை பார்க்கும் போதே தெரிகிறதே, நீங்கள் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பது!
ஓ இதை தான், ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்கிறீர்களோ!
மனிதர்களே நீங்கள் புத்திசாலிகள்! நீங்கள்தான் புத்திசாலிகள்.
நல்லது. இன்று நான் எதைப் பற்றி பேச வந்திருக்கிறேன் தெரியுமா?
புளோரின் வாயுவை பற்றி தான். உங்களில் சிலர் புளோரின் வாயு பற்றி அறிந்திருப்பீர்கள்.
சிலர் புளோரின் என்ற வாயுவை இப்போது தான் முதல் முறையாக கேள்விப்படலாம்.
காரணம், ஆக்சிஜன், காரியமில வாயு போன்று புளோரின் ஒன்றும் பிரபலமான வாயு இல்லையே!
இருக்கட்டும். இன்று புளோரின் வாயுவை பற்றிய சில தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று நான் முடிவு செய்ததற்கு காரணம், நான் வாசித்த அந்த வரலாற்று குறிப்பு தான்.
என்ன அது என்கிறீர்களா?
சொல்கிறேன்.
சில நாட்களுக்கு முன்பு வேதித்தனிமங்களின் கண்டுபிடிப்புகள் பற்றிய வரலாறுகளை வாசித்தேன். அப்போது தான் தற்செயலாக புளோரின் கண்டுபிடிப்பு பற்றி வாசிக்க நேர்ந்தது.
ஆம், ஆரம்பகாலத்தில், உலோக புளூரைடுகளில் அடையாளம் காணப்படாத ஒரு தனிமம் இருப்பதை வேதியியலாளர்கள் அறிந்திருந்தனர், என்பதையும், ஆனால் அவர்களால் அதை, அதாவது புளோரினை தனிமைப்படுத்த முடியவில்லை என்பதையும் வாசித்தேன்.
பின்னர், 1812 இல், பிரெஞ்சு விஞ்ஞானியான ஆண்ட்ரே ஆம்பியர் (André Ampère) ‘புளோரின்’ என்ற பெயரை உருவாக்கினார் என்றும் அறிந்துக் கொண்டேன்.
இருப்பினும், அக்காலத்தில் புளோரினை விஞ்ஞானிகளால் உற்பத்தி செய்ய முடியவில்லை. சுமார் ஐம்பத்தி ஏழு ஆண்டுகள் கழித்து, அதாவது 1869 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் வேதியியலாளர் ஜார்ஜ் கோர் திரவ ஹைட்ரோ புளூரிக் அமிலத்தின் ஊடே மின்சாரத்தை செலுத்தி ஆய்வகச் சோதனை நிகழ்த்தியதில், ஒரு புதுமையான வாயு வெளிவருவதை கண்டறிந்தார்.
அதுவே ‘புளோரின்’ வாயு என்று அவர் நம்பினார் என்பதையும் அறிந்துக்கொண்டேன். எனினும் அதுதான் புளோரின் வாயு என்று அவரால் நிரூபிக்க முடியவில்லையாம்.
சரி தான், அறிவியலில் வெறும் நம்பிக்கைக்கு இடம் இல்லை. ஆய்வக நிரூபணங்கள் தான் தேவை. ஆனால் எனக்கு இந்த கருத்தில் நூறு சதவிகிதம் உடன்பாடில்லை. ஏன் என்று கேட்கிறீர்களா?
ஆமாம், அறிவியலின் மீது நம்பிக்கை இருக்கும் போது, அறிவியலில் சில நம்பிக்கைகள் இருக்க கூடாதா, என்ன?
இதெல்லாம் ஒரு கருத்தா? என்கிறீர்களா? இல்லை தான் மனிதர்களே! நான் ஒன்றும் புத்திசாலி இல்லையே!
சரி, இதையும் வாசித்தேன். 1886 ஆம் ஆண்டில் பிரெஞ்சு வேதியியலாளர் ஹென்றி மொய்சன் தான் திரவ ஹைட்ரோ புளூரிக் அமிலத்தில் கரைக்கப்பட்ட பொட்டாசியம் பைஃப்ளோரைடை மின்னாற்பகுப்பு செய்ததன் மூலம் புளோரினை உற்பத்தி செய்தாராம்.
பல விஞ்ஞானிகளின், பல வருட கடின உழைப்பிற்கு பின் கண்டறியப்பட்ட புளோரின், அறை வெப்பநிலையில், ஈரணு மூலக்கூறு வாயுவாக இருக்கிறது.
தூய்மையான நிலையில் இதன் நிறம் வெளிர் மஞ்சள் அல்லது வெளிர் மஞ்சள்-பச்சை ஆகும். இதன் வாடையோ ஆபத்தான காரத்தன்மை வாய்ந்தது.
அறிவியல் வளர்ச்சியால், புளோரின் வாயுவை −188 °C வெப்பநிலையில் பிரகாசமான மஞ்சள் திரவமாக மாற்றியும் சாதனை படைத்துள்ளீர்கள், மனிதர்களே. வாழ்த்துகள்.
அறிவாலும், உழைப்பாலும் உருவாக்கப்பட்ட புளோரின், குறைக்கடத்தி, தட்டைப் பலகக் காட்சி முதலியவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்படுவதை அறிந்து மகிழ்கிறேன்.
இதுமட்டுமா, டெஃப்ளான் (teflon) போன்ற நெகிழி உற்பத்தியிலும், யுரேனியம் பிரித்தெடுப்பதிலும் புளோரின் பயன்படுத்தப்படுவதாக கேள்விப்பட்டேன்.
நல்லது. மற்றொரு தகவல் சொல்கிறேன். புளோரின் வாயு வளிமண்டலத்தில் குறிப்பிடத்தக்க அளவில் இயற்கையாகவே இல்லையாம். ஏன் தெரியுமா?
புளோரின் வாயுவின் தீவிர வினைத்திறன் தானாம்!
ஆம், புளோரின், உலோகங்கள், உலோகமல்லாதவை, உலோகப் போலிகள் மற்றும் பெரும்பாலான மந்த வாயுக்களுடன் எளிதில் வினைபுரிகிறது. ஒரு சில உதாரணங்களை இங்கு சொல்ல விரும்புகிறேன்.
சீசியம் (cesium) உலோகத்துடன் புளோரின் வினையில் ஈடுபட்டு சீசியம் ஃப்ளோரைடு உருவாவதோடு, அதிக வெப்பமும், ஒளியும் வெளிவருகிறது.
மந்த வாயுக்களான கிரிப்டான், செனான் மற்றும் ரேடானுடன் கூட, புளோரின் வினைபுரிந்து ’புளோரின் சேர்மங்களை’ உருவாக்குகிறது.
கண்ணாடியுடன் புளோரின் வாயு வினைப்பட்டு சிலிக்கான் டெட்ரா புளோரைடை உருவாக்குகிறது.
இங்கு ஒன்றை பதிவு செய்ய விரும்புகிறேன்.
முன்னர் சொன்னது போல், புளோரின் வாயுவின் அதீத வினைதிறனால் தான், வளிமண்டலத்தில் இதன் அளவு இயற்கையாகவே, பெரிதாக இல்லை என்று அறிந்தாலும், இதற்கு மற்றொரு காரணமும் இருக்கலாம். சொல்லட்டுமா?
புளோரின் வாயுவின் அதீத நச்சுத்தன்மை தான்.
ஆம். மீண்டும் சொல்கிறேன். புளோரின் வாயுவின் அதீத நச்சுத்தன்மை காரணமாகவே இயற்கை இதனை வளிமண்டலத்தில் வைத்திருக்கவில்லை என்று கருதுகிறேன். இது எனது நம்பிக்கையே.
ஆனால், இயற்கை புளோரினை எப்படி பூமியில் வைத்திருக்கிறது?
புளோரின் சேர்மங்களாகத்தான். ஆம், பூமியின் மேலடுக்கில் இருக்கும் தனிமங்களின் வரிசையில், பதின்மூன்றாவது இடத்தில் இருக்கும் புளோரின், பெரும்பாலும் புளோரைட் (Fluorite), புளோராபடைட் (fluorapatite) மற்றும் கிரையோலைட் (cryolite) போன்ற புளூரைடு தாதுக்களாகவே பூமியில் உள்ளது.
இந்த தாதுக்கள், மனிதர்களே, உங்களால் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. அதே சமயத்தில், மனிதர்களாலும், புளூரைடு சேர்மங்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை அறியும் பொழுது மகிழ்ச்சி அடைகிறேன்.
குறிப்பாக, ஹைட்ரோபுளூரிக் அமிலம் கண்ணாடியை அரிச்சித்திரம் (Etching) செய்ய பயன்படுத்தப்படுவதை சொல்லலாம்.
ஆனால் ஒரு எனக்கு வருத்தம்.
ஏன் தெரியுமா?
செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு சில வாயுநிலையில் இருக்கும் புளோரின் சேர்மங்களால் தீமையும் ஏற்படுவதாக அறிகிறேன்.
குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், ஹைட்ரோ புளூரோகார்பன்கள், பெர்புளூரோகார்பன்கள் முதலிய செயற்கை வாயுக்கள் பசுமை இல்ல வாயுக்களாகக் செயல்படுவதன் மூலம், புவி வெப்பமடைதலை ஊக்குவிக்கிறதாம்.
அத்தோடு, பல்வேறு வழிகளின் மூலமாக, வளிமண்டலத்தில் சேரும் ஹைட்ரஜன் புளூரைடுவால் அமில மழை, சில இடங்களில் அமில மூடுபனி பொழிவும் நிகழ்கின்றன.
இது இத்தோடு நிற்பதில்லை. அமில மழை நீர், நீர் சுற்றுச்சூழலில் கலந்து அங்கிருக்கும் நீர்வாழ் உயிரினக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அல்லவா?
என் அன்பிற்கினிய மனிதர்களே,
உங்களிடம் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். உங்களின் அறிவால், நன்மை மட்டுமே செய்யும் வேதிச்சேர்மங்களை உருவாக்கி பயன்படுத்துங்கள். இது எளிதானது அல்ல என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால் ‘முயன்றால் முடியாது ஒன்றும் இல்லை’ என்பதை நான் மட்டும் அல்ல, நீங்களும் நம்புகிறீர்கள் தானே?
நல்லது. நான் உடனடியாக ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும். விரைவில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.
நன்றி.
(குரல் ஒலிக்கும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com
கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!