புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை என்ற பாடல் ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவையின் பதின்மூன்றாவது பாசுரம் ஆகும்.
கண்ணழகு படைத்த பெண் ஒருத்தி இப்பாடலில் எழுப்பப்படுகிறாள். விடியற்காலையில் நிகழும் நிகழ்வுகள் சில இப்பாசுரத்தில் கூறப்படுகின்றன.
திருப்பாவை பாடல் 13
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக்களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதாரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய் நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்
விளக்கம்
மலரில் உள்ள தேனினை உண்ணும் வண்டுகளைப் போன்ற கண்களை உடையவளே.
கம்சனின் ஆணைக்கு இணங்க, கொக்கு வடிவம் கொண்டு தன்னை அழிக்க வந்த பகாசுரனை அழித்தவன் கண்ணன்.
தனது மனைவியை கவர்ந்து சென்ற கொடியவனான இராவணனை அழித்தவன் இராமன்.
இவர்களது இருவரின் புகழினைப் பாடிக் கொண்டு இளம்பெண்கள் பாவை நோன்பு நோற்கும் இடத்திற்கு எப்போதோ சென்று விட்டனர்.
வானத்தில் வியாழன் மறைந்து வெள்ளிக் கிரகம் முளைத்து விட்டது. பறவைகள் எல்லாம் விடிவதை எண்ணி ஆரவாரம் செய்கின்றன.
இந்த மார்கழியில் விடியும் முன்பே உடல் குளிரும்படி மடுவில் இறங்கி நீராட வராமல் இன்னும் படுக்கையில் சுருண்டு கிடக்கலாமா?
ஒவ்வொரு நாளும் இறைவனை வழிபட நல்ல நாளே. அதுவும் மார்கழியில் நீராடி இறைவனை வழிபடுவது இன்னும் சிறப்பு.
ஆதலால் நீ தூக்கம் என்னும் கள்ளத்தன்மையை விடுத்து எங்களுடன் நீராட வா.
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை என்ற பாடலை நாமும் பாடி அந்த மாயக்கண்ணனை வணங்குவோம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!