புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் என்ற பாடல், பெண் ஆழ்வாரான ஆண்டாள் அருளிய, கொஞ்சும் தமிழ் என போற்றப்படும் திருப்பாவையின் ஆறாவது பாசுரம் ஆகும்.
உறக்கத்தில் இருக்கும் பெண், திருமாலின் பெருமைகளைக் கேட்டு, குளிர்ந்த உள்ளத்துடன் எழுவதற்காக பாடப்படும் பாசுரம் இது.
பாம்பணையில் பள்ளி கொண்டு, முனிவர்களாலும் யோகிகளாலும் போற்றப்படும், அரி எனப்படும் திருமாலின் பெயரினைக் கேட்டு உள்ளம் குளிர, பாவையை அழைக்கும் பைந்தமிழ் பாசுரம்.
திருப்பாவை பாடல் 6
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிச்சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
விளக்கம்
பிள்ளைத் தன்மையை உடைய நங்கையே நீ எழுந்திரு.
காலை நேரம் ஆகிவிட்டதால் பறவைகள் கூட்டிலிருந்து உண்டாக்கும் சத்தத்தைக் கேள்.
பறவைகளின் அரசனான கருடனை வாகனமாகக் கொண்ட திருமாலின் கோவிலில் வழிபாட்டிற்காக ஊதப்படும் வெள்ளைநிறச் சங்கின் பேரொலியை நீ கேட்கவில்லையா?
உடனே எழுந்திருப்பாயாக.
தனக்கு விசப்பால் ஊட்டிய அரக்கி பூதனையின் உயிரினைக் குடித்து அவளுக்கு மோட்சத்தை அருளியவன்.
வஞ்சகமாக வண்டிச் சக்கரம் வடிவில் தன்னைக் கொல்ல வந்த சகடாசுரனை காலால் உதைத்து அழித்தவன்.
திருபாற்கடலில் ஆதிசேசனாகிய பாம்பணையில் யோக நித்திரை கொள்பவன்.
உலகம் தோன்ற காரணமானவன்.
இத்தகைய பெருமைகளைக் கொண்ட பரந்தாமனை முனிவர்களும், யோகிகளும் ‘அரி, அரி’ என்று போற்றி வழிபடும் பேரொலியைக் கேட்டு உள்ளம் குளிர உடனே எழுந்து வா என்று ஆண்டாள் இப்பாசுரத்தில் அழைக்கிறார்.
உலக மக்களே, அறியாமை என்னும் பேருறக்கத்திலிருந்து எழுந்து இறைவனின் திருப்பெயர்களைக் கேட்டு உள்ளம் குளிருங்கள் என்று ஆண்டாள் அழைக்கிறார்.
உலகைப் படைத்தவன் இறைவன். அதனை இயக்குவதும் அவனே. ஆனால் நாம் இந்த உண்மையை எப்போதும் மனதில் வைத்திருக்காமல், அறியாமை என்னும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றோம்.
அந்த அஞ்ஞானம் நீங்கி, நாம் நல்ல விதமாக வாழ்வை அமைக்க, இறைவனின் திருப்பெயர் நமக்கு வழிகாட்டுகின்றது.
எப்போதும் இறைவனின் திருப்பெயர் நம் மனதை விட்டு நீங்காது இருந்தால், நமது மனம் நற்குணங்கள் நிறைந்து குளிர்ந்து இருக்கும் என்பதை ஆண்டாள் இப்பாசுரத்தில் கூறுகிறார்.
Comments
“புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்” மீது ஒரு மறுமொழி