புழுங்கல் அரிசி புட்டு அருமையான சிற்றுண்டி ஆகும். இது உண்பதற்கு மிகவும் மென்மையாக இருக்கும்.
எங்கள் பாட்டி வீட்டிற்கு நாங்கள் சிறுவயதில் விருந்தினர்களாகச் செல்லும் போது, இதனை செய்து உண்ணக் கொடுப்பார்கள்.
சிறுவயது முதலே எனக்கு இப்புட்டு மிகவும் பிடிக்கும். நீங்களும் இதனை செய்து அசத்தலாம். உங்களின் குழந்தைகளுக்கு இதனை நொறுக்குத் தீனியாகவும் பள்ளிக்கு கொடுத்து அனுப்பலாம்.
இப்புட்டு செய்வதற்கு இரண்டு வழிகளில் மாவினை தயார் செய்யலாம். நான் இந்த பதிவில் அரிசியை நனைய வைத்து மாவினை செய்துள்ளேன்.
மற்றொரு முறையில் மாவினை தயார் செய்யும் முறையையும் உங்களுக்கு இப்பதிவிலேயே பதிவிடுகிறேன்.
வாருங்கள், சுவையான புழுங்கல் அரிசி புட்டு தயார் செய்யும் முறை பற்றிப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி – 1 பங்கு
சர்க்கரை – 1/2 பங்கு
தேங்காய் துருவல் – 1/2 பங்கு
புட்டு மாவு தயார் செய்யும் முறை
புழுங்கல் அரிசியை கழுவி முழுவதும் மூழ்குமாறு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு அரிசியை வடிதட்டில் போட்டு தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
பின்னர் காய்ந்த துணியில் ஈரஅரிசியை தட்டி விரித்து விடவும்.
ஐந்து நிமிடங்கள் கழித்து மிக்ஸியில் அல்லது மிசினில் கொடுத்து இடித்துக் கொள்ளவும்.
இடித்த மாவினை சல்லடையில் போட்டு சலித்துக் கொள்ளவும்.
கப்பி இருந்தால் மிக்ஸியில் போட்டு மீண்டும் சலித்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சலித்த மாவினைச் சேர்க்கவும்.
அதனுடன் சர்க்கரை மற்றும் தேங்காய் துருவலைச் சேர்த்து ஒருசேரக் கிளறவும்.
பின்னர் புட்டு மாவுக் கலவையை பாத்திரத்தில் அழுத்தி வைக்கவும்.
ஐந்து நிமிடங்கள் கழித்து ஏதேனும் அச்சில் (சிறுகிண்ணம், டம்ளர்) வைத்து விரும்பிய வடிவில் அச்சாக எடுக்கவும்.
இவ்வாறு எல்லா மாவினையும் விரும்பிய வடிவில் அச்சு எடுத்துக் கொள்ளவும்.
இடித்த உடனே புட்டு மாவுடன் சர்க்கரையையும், தேங்காய் துருவலையும் சேர்க்கவும்.
இட்லிப் பானையில் அச்சுப் புட்டுக்களை வைத்து ஐந்து நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
சுவையான புழுங்கல் அரிசி புட்டு தயார்.
விருப்பமுள்ளவர்கள் புட்டு மாவுக் கலவையை, அச்சு எடுக்காமல் உதிரியாகவே இட்லி பானையில் வேக வைத்து எடுக்கலாம்.
அச்சில் வைத்து புட்டு தயார் செய்வதால், சிறுபிள்ளைகளுக்கு கொடுக்கும்போது புட்டு கீழே சிந்தி வீணாகாமல் இருக்கும்.
புட்டு மாவு தயார் செய்யும் மற்றொரு முறை
புழுங்கல் அரிசியை காய்ந்த நிலையிலேயே மிசினில் அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் அதனுடன் தேவையான நீரினை சிறிது சிறிதாக தெளித்து, எல்லா மாவிலும் ஈரப்பதம் இருக்குமாறு பிசையவும்.
மாவினை கையில் பிடித்தால் கொழுக்கட்டை போலவும், உதிர்த்தால் உதிரவும் செய்ய வேண்டும். இதுவே பதம் ஆகும்.
இதனுடன் சர்க்கரை, தேங்காய் துருவல் சேர்த்து, சிறிது நேரம் அழுத்தி வைத்திருந்து பின்னர் இட்லி பானையில் வைத்து அவித்து எடுக்கவும்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் சர்க்கரைக்குப் பதிலாக மண்டை வெல்லம் சேர்த்து புட்டு தயார் செய்யலாம்.