புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம் என்று தொடங்கும் இப்பாடல், திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள திருப்பள்ளியெழுச்சியின் பத்தாவது பாடலாகும்.
பரந்த கருணையினால் உலக உயிர்களை ஆட்கொள்ளும் இறைவனான சிவபெருமானின் மீது, வாதவூர அடிகளாகிய மாணிக்கவாசகர் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களைப் பாடினார்.
மார்கழி மாத இறைவழிபாட்டின் போது திருவெம்பாவை பாடல்கள் 20, திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் 10 சேர்த்து மொத்தம் 30 பாடல்கள் பாடப்படுகின்றன.
தமிழின் தொண்ணூற்றாறு பிரபந்தங்களின் வகைகளுள் திருப்பள்ளியெழுச்சியும் ஒன்று. உயிரினங்களைப் போன்று இறைவனும் இரவில் உறங்கிக் கொண்டிருப்பதாகக் கருதி, துயில் எழுப்புவதாக இப்பாடல்கள் அமையப் பெற்றுள்ளன.
அதாவது நம் உள்ளத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் இறைஞானத்தை தட்டி எழுப்ப எனப் பொருள் கொள்ளலாம்.
பொதுவாக திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களில், அதிகாலைப் பொழுதில் சுற்றுப்புறத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன.
திருப்பெருந்துறையில் இருக்கும் சிவபெருமானின் மீது மாணிக்கவாசகர் பாடிய திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களும், ரங்கநாதப் பெருமானின் மீது தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடிய திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களும் புகழ் பெற்றவை.
திருமாலும், நான்முகனும் சிவனருள் நிறைந்த இப்புவியில் பிறக்காமல் வாழ்நாட்களைக் கழிப்பதாக வருந்துகின்றனர். நீயே உன்னுடைய பரந்த கருணையால் இப்புவியின் உயிரினங்களை ஆட்கொள்கிறாய். அமுதம் போன்றவனே, அருளுவாயாக என மாணிக்கவாசகர் இறைவனிடம் வேண்டுகிறார்.
இறைவனை வழிபடத் தக்க சிறந்த இடம் இப்பூமி என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.
இனி திருப்பள்ளியெழுச்சி பத்தாவது பாடலைக் காண்போம்.
திருப்பள்ளியெழுச்சி பாடல் 10
புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்த பூமி
சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந்துறையுறை வாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே
விளக்கம்
இறைவன் நிறைந்த இடத்தினையும், உயிரினங்களுக்கு அருளும் அவர்தம் கருணையையும் இப்பாடல் எடுத்துரைக்கிறது.
திருப்பெருந்துறையில் நிறைந்துள்ள சிவபெருமானே, நீ உலக உயிர்களுக்கு எல்லாம் ஈடேற்றம் வழங்கி ஏற்று கொள்வது இப்புவியின் வழியாகவே என்னும் உண்மையைத் திருமாலும், நான்முகனும் அறிந்து கொண்டனர்.
இறைவனின் அருள் நிறைந்த மண்ணுலகத்திற்குச் சென்று நாம் பிறக்காததால், நம்முடைய வாழ்நாட்களை எல்லாம் வீணாக்குகின்றோமே என்று அவர்கள் இருவரும் ஏங்குகின்றனர்.
இவ்வாறு திருமால் விரும்பும் படியாகவும், நான்முகன் ஆசைப்படும் படியாகவும் நீ உன்னுடைய பரந்த கருணையினால் இம்மண்ணுலகத்திற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனே.
உலக உயிர்களுக்கு பிறவாமை என்னும் வீடுபேறாகிய அமுதத்தை அருளுபவனே, நீ பள்ளியிலிருந்து எழுந்து அருள்வாயாக.
இறைவனை நினைக்காத நாள் வீணான நாள். அவனை வழிபடச் சிறந்த இடம் நாம் இருக்கும் இந்தப் பூமியே என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.