புவி வெப்பமடைதல் (Global Warming) என்பது தற்போது மிகப் பெரிய அச்சுறுத்தலாக ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. மனித செயல்பாடுகளால் புவியின் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
தற்போது உலகளாவிய வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்துள்ளது.
இவ்வாறு புவியின் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே சென்றால், கிபி 2100-க்குள் உலக வெப்பநிலை 2.7 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயர்ந்து விடும் என அறிவியல் அறிஞர்கள் எச்சரித்துள்ளனர். அதனால் மனித இனமே அழிய நேரிடலாம்.
ஐக்கிய ராஜ்ஜியத்தின் கிளாஸ்கோ நகரில் நவம்பர் 2021-ல் நடைபெற்ற காலநிலை மாநாட்டில், புவியின் வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம் என்று உலக நாடுகளின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிசம்பர் 2015-ல் பாரிஸ் நகரில் நடைபெற்ற காலநிலை மாநாட்டில், புவி வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியசுக்கு குறைவாக, 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்துவதே குறிக்கோளாக வைக்கப்பட்டது.
புவி வெப்பமடைதல் 1.5 டிகிரி செல்சியஸைத் தாண்டும்போது, மனிதர்கள் மற்றும் வனவிலங்குகளுக்கு மிகக் கடுமையான அபாயங்கள் இருப்பதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
புவி வெப்பநிலை உயர்வைத் தடுக்க 2030-க்குள் உலகளாவிய கார்பன்-டை-ஆக்ஸைடு உமிழ்வை பாதியாகக் குறைத்து, 2050-க்குள் நிகர பூஜ்ஜியமாகக் குறைக்க வேண்டும் என்ற முடிவு கிளாஸ்கோ மாநாட்டில் எடுக்கப்பட்டுள்ளது.
புவி வெப்பநிலை உயர்வுக்கு பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களைப் பயன்படுத்துவதே முக்கிய காரணம் ஆகும்.
புவி வெப்பமடைதல் 2 டிகிரி செல்சியசுக்கு உயர்ந்தால் நாம் எவ்வாறான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்பது பற்றிய அறிவியலாளர்களின் கருத்துக்களைப் பார்ப்போம்.
தற்போது புவி வெப்பநிலையானது தொழில்துறைக்கு முந்தைய நிலையை விட 1.1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த நாற்பதாண்டுகளாக புவியின் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஜெர்மனியின் காலநிலை சேவை மையத்தின் விஞ்ஞானியான டேனிலா ஜேக்கப் ‘கடந்த சில பத்தாண்டுகளில் உண்டான புவி வெப்பமயமாதலைப் போன்று பூமி இதுவரை சந்தித்ததில்லை.” என்று கூறுகிறார்.
மேலும் அவர் “அரை டிகிரி வெப்பநிலை உயர்வு என்பது மிகத்தீவிரமான வானிலை என்று பொருள்படும்.” என்கிறார்.
காலநிலை மாற்றத்தால் இவ்வருடத்தில் சீனா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் பெய்த மழை, வெள்ளம் நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றுள்ளது.
வடமேற்கு பசிபிக்கில் வெப்பநிலை உச்சத்தைத் தொட்டபோது நூற்றுக்கணக்கானோர் இறந்தனர்.
கிரீன்லாந்தில் பனிப்பாறைகள் அதிகளவு உருகின.
மத்திய தரைக்கடல் மற்றும் சைபீரியாவில் காட்டுத்தீ பெரிய அளவு துன்புறுத்தியது.
மேலும் பிரேசிலின் சில பகுதிகளை வறட்சி தாக்கியது.
“பருவநிலை மாற்றம் ஏற்கனவே உலகம் முழுவதும் இருக்கும் ஒவ்வொரு பகுதியையும் பாதிக்கிறது” என்று கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் காலநிலை விஞ்ஞானி ரேச்சல் வாரன் கூறியுள்ளார்.
அதிக மழைப்பொழிவு மற்றும் கடுமையான வறட்சி
1.5 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கும் அதிகமாக பூமி வெப்பமடைந்தால் மிகவும் மோசமான நிகழ்வுகளை நாம் சந்திக்க நேரிடும்.
“புவி வெப்பமடைதலின் ஒவ்வொரு அதிகரிப்பும், பெரிதான உச்ச நிலை மாற்றங்களை உருவாக்குகின்றன.” என்று காலநிலை விஞ்ஞானியான சோனியா செனவிரத்ன கூறுகிறார்.
எடுத்துக்காட்டாக வெப்ப அலைகள் உருவாதல் (Heat Wave) என்பது அடிக்கடி இருக்கும் மற்றும் கடுமையானதாக இருக்கும்.
மனித செல்வாக்கு இல்லாத காலநிலையில் பத்தாண்டுக்கு ஒருமுறை நிகழும் தீவர வெப்ப நிகழ்வு, இனிமேல் 4 அல்லது 5 முறை நிகழும் என ஐ.நா. சபையின் காலநிலை அறிவியல் குழு (ஐபிசிசி) தெரிவிக்கிறது.
வெப்ப உயர்வு 4 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும்போது தீவிர வெப்ப நிகழ்வு ஒரு பத்தாண்டுகளில் 9 முறை நிகழலாம்.
வெப்பமான வளிமண்டலம் அதிக ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். இதனால் அதிக மழைப்பொழிவு உண்டாகி வெள்ள அபாயம் ஏற்படும். அதே சமயம் ஒருசில இடங்களில் ஆவியாதல் அதிகரிப்பால் கடுமையான வறட்சிக்கு வழிவகுக்கும்.
தமிழ் நாட்டிலும் நாம் இயல்பை விட அதிகமான மழையை தற்போது உணர்கிறோம். கோடை எப்படி இருக்கப் போகிறதோ? தெரியவில்லை.
கடலில் உண்டாகும் பாதிப்புக்கள்
2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வால் புவியின் பெருங்கடல்கள் மற்றும் பனி சூழ்ந்த பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றன.
“1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பெரும்பாலான கிரீன்லாந்து மற்றும் மேற்கு அன்டார்டிக் பனிக்கட்டிகள் இடிந்து விழுவதைத் தடுக்க ஒருநல்ல வாய்ப்பு உள்ளது.” என்று பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் காலநிலை விஞ்ஞானி மைக்கேல் மான் கூறியுள்ளார்.
மேலும் அவர் “இது இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்ட உயர்வை சில அடிகளுக்குக் கட்டுப்படுத்த உதவும். இருப்பினும் கடற்கரையோரங்கள் அரிக்கப்பட்டு சில சிறிய தீவு மாநிலங்கள் மற்றும் கடலோர நகரங்கள் மூழ்கும் அபாயம் இருக்கிறது.
ஆனால் 2 டிகிரி செல்சியஸைக் கடந்தால் பனிக்கட்டிகள் இடிந்து விழும். கடல் மட்டம் 10 மீட்டர் வரை உயரும்” என்றார்.
1.5 டிகிரி வெப்பமயமாதலால் 75 சதவீதம் பவளப்பாறைகளை அழியும். அதேசமயம் 2 டிகிரி வெப்பமயமாதல் 90 சதவீத பவளப்பாறைகளை அழிக்கும்.
இந்நிகழ்வால் பவளப்பாறைகளை உணவு மற்றும் உறைவிடமாகக் கொண்டுள்ள மீனினங்கள் அழிவதோடு, மீன்களை நம்பியிருக்கும் சமூகங்களையும் பாதிக்கும். இதனால் கடல் சூழல் மண்டலம் பெரிதும் பாதிக்கப்படும்.
உணவு உற்பத்தியில் ஏற்படும் பாதிப்பு
2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உண்டாக்கும் கடுமையான வறட்சி மற்றும் பெரு வெள்ளத்தால் உணவு உற்பத்தியிலும் பாதிப்பு உண்டாகிறது.
உணவுப் பொருட்களின் உற்பத்தியில் ஏற்படும் பெரும் பாதிப்பால் விலைவாசி உயர்வு, பசி மற்றும் பட்டினி ஆகியவை உண்டாகும்.
உயிரிகளுக்கு உண்டாகும் பாதிப்பு
வெப்பநிலை உயர்வால் மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.
வெப்பநிலை உயர்வு பூச்சிகள் மற்றும் சிறுவிலங்குகளின் வாழிடத்தை அழிக்கும். காட்டுத் தீ அதிகரிப்பால் வனவிலங்குகளுக்கு வாழிட இழப்பு, உயிரிழப்பு போன்றவை உண்டாகும்.
புவி வெப்பமடைதலால் வறட்சி, குறைந்த மழைப் பொழிவு, காட்டுத்தீ, பெருவெள்ளம், வாழிடங்களில் மாற்றம், கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு வளிமண்டலத்தில் அதிகரிப்பு உள்ளிட்டவைகள் ஏற்பட்டு புவியில் உயிர்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கும்.
காற்று மாசுபாடு புவி வெப்பமடைவதற்கான முக்கிய காரணமாகும்.
புவியில் உயிரினங்கள் நிலைத்திருக்க புவிவெப்பமடைதலைத் தடுப்பது ஒவ்வொரு மனிதனின் தலையாய கடமையாகும்.
மக்கள் தொகை குறைந்தால் அனைத்தும் மாறிவிடும்