கருவறையில் சுமந்தவளே
எனைக் காப்பாற்றும் உமையவளே
உடம்புக்குள் என்னை வைத்து
உயிரோடு சேர்த்தணைத்து
உதிரத்தை பாலாக்கி
எனை உலகறிய தந்தவளே
தூக்கத்தை நீ தொலைத்து
துணிவுடனே இருந்திங்கே
எனைத் தோரணையாய் வளர்த்தவளே
எத்தனைதான் காப்பியத்தை நான் படைக்க
உன் தியாகம் இவ்வுலகுணர
அதை வார்த்தையிலே எழுதிவிட
என் வாழ்நாளும் போதாதே
பத்துமாசம் எனை சுமந்து
பட்டினிய தினம் சுமந்து
பக்கத்திலே நீ இருந்து
பக்குவமாய் தான் வளர்த்தாய்
எனக்காய் உன் வாழ்நாளை
எழுதி வைத்த பூங்கொடியே
உனக்காய் ஒரு கவிமழலை
நான் சொல்ல கேளடியே
என் உடலில் ஒரு துளி ரத்தம் ஊற
நீ சிந்திய வியர்வைத் துளிகள் எத்தனை
அம்மம்மா அதை எண்ணையிலே
அகிலம் யாவும் மிக சின்னதடி
எனை ஆளாக்கி விடுவதற்குள்
நீ பட்ட பெருந்துன்பம்
என் கண்முன்னே நிற்குதடி
எனை கண்கலங்க வைக்குதடி
பட்டங்கள் நான் பெறவே
பகலிரவாய் உழைத்தவளே
பாவி என்னை ஆளாக்க
பாதி வாழ்வைத் தொலைத்தவளே
நான் வாழும் வாழ்க்கை அது
நீ எனக்குத் தந்ததம்மா
நான் உண்ணும் ஒரு வாய் சோறும்
உன் வியர்வையால் வெந்ததம்மா
ஆண்டவனைக் கண்டதில்லை
ஆயிரம் உறவிருந்தும்
அது என்னை அணைக்கவில்லை
அம்மா உன்னை அன்றி உலகில்
வேறு ஒன்றும் சொந்தமில்லை
கால் கடுக்க வேலை செய்து
கடும் வெயில் உனை வாட்ட
களைப்புடனே வந்தாலும்
எனைக் கண்ட ஒரு நொடியில்
உன் கன்னக்குழி சிரிப்பதனில்
மின்னும் அன்பை நினைக்கையிலே
என் நெஞ்சம் கொஞ்சம் மெச்சுதடி
உன் கால் அடியில் கிடக்க கெஞ்சுதடி
தொப்புள்கொடியால் எனை
இணைத்த என் உலகே
தொல்லுலகம் முழுதும்
கைப்பிணைக்கும் என் அழகே
என் உயிர் இருக்கும் வரை
உன் முகம் காணும் வரம் வேண்டும்
நான் இறந்ததும்
உன் மடியில் மறுபிறவி பெற வேண்டும்
சி.பபினா B.Sc
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!