பூசலார் நாயனார்

பூசலார் நாயனார் – மனதில் சிவாலயம் அமைத்தவர்

பூசலார் நாயனார் அன்பின் மிகுதியால் தம்முடைய மனதில் சிவாலயம் அமைத்து வழிபட்ட வேதியர்.

பண்டைய தொண்டை நாட்டில் திருநின்றவூரில் பூசலார் என்றொரு வேதியர் இருந்தார். அவர் சிவனாரின் மேல் மாறாத அன்பு கொண்டவர்.

நல்லொழுக்கத்தில் சிறந்தவரான அவர் முறையான வேதப்பயிற்சியும் பெற்றவர்.

சிவனடியாரின் மேல் பேரன்பு கொண்டு அவர்களுக்கு வேண்டியவற்றை வழங்குவதை தம்முடையக் கடமையாகக் கொண்டிருந்தார்.

பூசலார் மனதில் இறைவனுக்கு திருக்கோயில் ஒன்றை எழுப்ப வேண்டும் என்ற விருப்பம் உண்டானது. அதற்கு பெரும் பொருள் தேவைப்பட்டது. அவரால் அப்பெரும் பொருளை ஈட்ட இயலவில்லை.

‘புறத்தால் கோவில் கட்டத்தானே பொருள் தேவைப்படுகிறது. அதற்கு பிறரின் உதவியை நாட வேண்டியிருக்கிறது. ஆனால் மனதில் கோவில் கட்ட பிறருடைய உதவி தேவையில்லை. என்னுடைய மனம் விரும்பியபடி நான் என்னுடைய மனத்திலேயே பெரிய கோவிலைக் கட்டுகிறேன்’ என்று எண்ணினார் அவர்.

பின்னர் அவர் மனத்தில் திருக்கோவில் கட்டத் தேவையான இடம், பொருட்கள் மற்றும் தொழிலாளர்களை பாவனையில் கொண்டு வந்தார்.

நாள்தோறும் திருக்கோவில் எழுப்பத் தேவையான கட்டுமானங்களை மனத்தால் கட்டினார்.

புறத்தில் திருக்கோவில் அமைக்க எவ்வளவு நாட்கள் ஆகுமோ, அதே கால அளவுகளில் அகத்திலும் திருக்கோவிலின் ஒவ்வொரு பகுதியையும் எண்ணி எண்ணி கட்டினார்.

திருக்கோவில் கருவறை, தூண்கள், மண்டபங்கள், மதில் சுவர்கள், மேல் தளங்கள், கோபுரம், விமானம், தீர்த்தம், இறைஉருவம் ஆகியவற்றை அமைத்து மனக்கோவிலைக் கட்டினார். இறுதியில் மனக்கோவிலுக்கான குடமுழுக்கு நாளினைக் குறித்தார்.

புறக்கோவிலும் அகக்கோவிலும்

அதே சமயத்தில் காஞ்சியில் பல்லவ அரசன் சிவனாருக்கு கற்கோவில் ஒன்றைக் கட்டி முடித்தான்.

பூசலார் மனக்கோவில் குடமுழுக்கிற்கு குறித்திருந்த அதே நாளன்று அரசனும் புறக்கோவிலின் குடமுழுக்கிற்கு நாளினைக் குறித்திருந்தான்.

குடமுழுக்கிற்கு முதல்நாள் பல்லவ அரசனின் கனவில் தோன்றிய சிவனார் “திருநின்றவூரில் நம்முடைய அன்பனான பூசலார் பலநாட்கள் எண்ணிய செய்த ஆலயத்தில் நாளை குடமுழுக்கு நடைபெறுவதால் நாம் அங்கு செல்ல வேண்டும் என்பதால் நீ மற்றொரு நாள் குடமுழுக்கினை நடத்து” என்று கூறி மறைந்தார்.

திடுக்கிட்ட அரசன் விழித்து எழுந்து இறைவனின் கூற்றினை எண்ணி வியந்தான். தம்முடைய படையுடன் திருநின்றவூருக்குச் சென்றான்.

அவ்வூரில் குடமுழுக்கு நடைபெறும் கோவில் பற்றி விசாரித்தான். அங்கிருந்தோர் அவ்வூரில் எக்கோவிலும் அன்று குடமுழுக்கு நடைபெறவில்லை என்பதைத் தெரிவித்தனர்.

அப்போதுதான் அரசனுக்கு இறைவன் கூறிய பூசலார் என்ற பெயர் நினைவுக்கு வந்தது. உடனே அங்கிருந்தோரிடம் பூசலார் எங்கிருக்கிறார் என்பது பற்றி விசாரித்தார்.

பூசலார் இருக்கும் இடத்தைக் கூறவே, அரசன் பூசலாரைத் தேடி அவரின் இருப்பிடத்தை அடைந்தான்.

“ஐயா, தாங்கள் அமைத்திருக்கும் சிவாலயத்திற்கு நாளை குடமுழுக்கு என்பதை இறைவனார் என்னுடைய கனவில் தெரிவித்தார். நான் அக்கோவிலைக் காணும் ஆவலில் இங்கு வந்துள்ளேன். என்னை அத்திருக்கோவில் இருக்குமிடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.” என்று கூறினார்.

அதனைக் கேட்டதும் பூசலாருக்கு ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.

“இவ்வடியேன் மனதில் அமைத்த கோவிலுக்கான குடமுழுக்கு நடைபெறவிருப்பதை இறைவனார் ஏற்றுக் கொண்டு அடியேனுக்கு அருள்புரிந்துள்ளாரா?” என்று கூறி மகிழ்ச்சியில் கூத்தாடினார்.

பல்லவ அரசனுக்கு பூசலார் நாயனார் கூறியது ஏதும் புரியவில்லை. பூசலார் புறக்கோவில் அமைக்க போதிய நிதி இல்லாததால் தன்னுடைய மனதில் அகக்கோவிலை தீர்மானித்து அதற்கு குடமுழுக்கு செய்ய நாள் குறித்திருப்பதைப் பற்றிக் கூறினார்.

அதனைக் கேட்டதும் பல்லவ அரசன் அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கி “நான் அமைத்திருக்கும் புறக்கோவிலைவிட தாங்கள் அமைத்திருக்கும் அகக்கோவிலே இறைவனாருக்கு மிகவிருப்பம்.” என்று கூறி பூசலாரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி விடைபெற்றான்.

பூசலாரும் தான் குறித்த நாளில் தம்முடைய மனக்கோவில் இறைவனாருக்கு நிறைவாக குடமுழுக்கினைச் சிறப்பாக நடத்தினார்.

அதன்பின்னர் வந்த நாட்களில் தம்முடைய மனக்கோவில் இறைவனாருக்கு தினமும் முறைபடி பூசனைகள் செய்து வழிபட்டு இறுதியில் இறைபதம் பெற்றார்.

பூசலார் வாழ்ந்த திருநின்றவூரில் தற்போது இருதயலீஸ்சுவரர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

பூசலார் நாயனார் தம்முடைய இதயத்தில் எண்ணத்தால் சிவாலயம் அமைத்து வழிபாடு நடத்தியதால் 63 நாயன்மார்களுள் ஒருவராக திகழும் பாக்கியம் பெற்றார்.

பூசலார் நாயனார் குருபூஜை ஐப்பசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

பூசலார் நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘மன்னிசீர் மறைநாவன் நின்றவூர் பூசலார்க்கும் அடியேன்’ என்று புகழ்கிறார்.