பூசாரி பொய்யும் புலவனார் பொய்யும் ஆசாரி பொய்க்கு அரை பொய்க்கு ஆகாது

குதிரை

பூசாரி பொய்யும் புலவனார் பொய்யும் ஆசாரி பொய்க்கு அரை பொய்க்கு ஆகாது என்ற பழமொழியை ஆசிரியர் மரத்தடியில் இருந்த மாணவர்களுக்கு கூறுவதை குதிரைக்குட்டி குணவதி கேட்டது.

புற்களை மேய்வதை விட்டுவிட்டு ஆசிரியர் கூறுவதைத் தொடர்ந்து ஆர்வத்துடன் கேட்கலானது.

உடனே சிறுவன் ஒருவன் எழுந்து “ஐயா இந்தப் பழமொழி குறிப்பிட்ட இனத்தவரை கேலி செய்வது போல் தோன்றுகிறது அல்லவா?” என்று கேட்டான்.

அதற்கு ஆசிரியர் “நம்முடைய முன்னோர்கள் ஒருபோதும் யாருடைய மனத்தினையும் புண்படுத்தும்படி பேச மாட்டார்கள். இப்பழமொழி பற்றிய உண்மையை அறிந்து கொண்டால் உங்களது சந்தேகம் தீர்ந்து விடும். நான் உங்களுக்கு இப்பழமொழியை ஒரு கதை மூலம் விளக்கிக் கூறுகிறேன்” என்றார் 

முறப்பநாடு என்ற நாட்டை மதியழகன் என்ற அரசன் ஆண்டு வந்தார். அவர் அந்நாட்டில் மிகப் பெரிய தேர் ஒன்றினைச் செய்து திருவிழா கொண்டாட எண்ணினார்.

அதன்படி ஒரு பெரிய தேரினை செய்யச் செய்து திருவிழாவை நடத்தினார். அந்த விழாவின் முடிவில் அரசன் பலருக்கும் பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கினார்.

முதலில் தேர்த்திருவிழாவில் சிறப்பாக பணியாற்றியப் பூசாரிக்கு கை நிறையப் பொற்காசுகள் தந்து பாராட்டு தெரிவித்தார். அந்தப் பூசாரியும் மிகவும் மகிழ்ந்து பரிசை வாங்கிக் கொண்டு திரும்பினார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த புலவரையும் தேர் உருவாக காரணமாக இருந்த ஆசாரியையும் ஏளனமாகப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சென்றார். இதைக் கண்ட புலவருக்கும் ஆசாரிக்கும் மன வருத்தம் உண்டானது.

இரண்டாவதாக அவைப் புலவர் அழைக்கப்பட்டார். அரசர் அவரின் பாடல்களை வெகுவாகப் புகழ்ந்து பூசாரிக்கு தந்ததைவிட அதிகமான பொற்காசுகளை தந்து அனுப்பி வைத்தார்.

அதை பெற்றுக் கொண்டு திரும்புகையில் புலவர் பூசாரியையும், ஆசாரியையும் கண்டு நகைத்தவாறே சென்றார்.

மூன்றாவதாக தேர் உருவாக்கித் தந்து விழாவிற்கு அடிப்படையாக இருந்த ஆசாரி அழைக்கப்பட்டார். அரசர் அவரை வெகுவாகப் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

அரசர் ஆசாரிக்கு அளித்த பரிசு புலவரின் பரிசைப் போல இருந்தது. உடனே ஆசாரி அரசரிடம் “அரசே பூசை வைக்கும் பூசாரியைவிட, பாடல் பாடிய புலவனாரை விட எனது பணி மிகச் சிறப்பானது. எனவே, எனக்கு அவர்களைவிட அதிகமான பரிசுகள் வேண்டும்!” என்று கேட்டார்.

உடனே அரசரும் அதற்கு ஒத்துக் கொண்டு, அதிகமான பரிசுகள் தந்து அனுப்பினார். பரிசுகளை பெற்றுக் கொண்ட ஆசாரி அங்கு ஏற்கனவே பரிசு பெற்று நின்று கொண்டு இருந்த பூசாரி மற்றும் புலவர் ஆகியோரைப் பார்த்தார்.

பின் அவ்விருவர்களின் காதுகளில்படுமாறு “பூசாரி பையும் புலவனார் பையும் ஆசாரி பையின் அரைப் பைக்கு ஆகாது” என்று கூறிவிட்டு அவர்களை கண்டு சிரித்துக் கொண்டே சென்றாராம்.

அன்றிலிருந்து இந்தப் பழமொழி உலா வரலாயிற்று.

பேச்சின் மூலம் பெறும் செல்வத்தைவிட உழைப்பின் மூலம் வரும் செல்வம் அதிகம் என்பதை இந்தப் பழமொழி உணர்த்துகின்றது.

இன்று இப்பழமொழியில் உள்ள ‘பையானது’ ‘பொய்யாக’ மாறி நம்மால் பேசப்பட்டு வருகிறது.” என்று கூறினார்.

இதனைக் கேட்ட குதிரைக்குட்டி குணவதி காட்டை நோக்கி ஓடியது. எல்லோரும் வட்டப்பாறையில் கூடியிருந்தனர். “இன்றைக்கு பழமொழியை கூறப்போவது யார்? என்று காக்கை கருங்காலன் கேட்பது குதிரைக்குட்டி குணவதி காதில் விழுந்தது.

ஒரே தாவலில் வட்டப்பாறையின் மையப்பகுதியில் குதித்தது. அதனைக் கண்ட காக்கை கருங்காலன் “குதிரைக்குட்டி குணவதி ஏன் இவ்வளவு அவசரம்?” என்று கேட்டது.

அதனைக் கேட்ட குதிரைக்குட்டி குணவதி “தா..த்..தா, இன்றைக்கான பழமொழியை நான் கூறுகிறேன்” என்றது. “சரி நிதானமாக நீ கேட்ட பழமொழி பற்றிக் கூறு” என்றது காக்கை கருங்காலன்.

குதிரைக்குட்டி குணவதியும் “நான் இன்றைக்கு பூசாரி பொய்யும் புலவனார் பொய்யும் ஆசாரி பொய்க்கு அரை பொய்க்கு ஆகாது என்ற பழமொழியைப் பற்றிக் கூறப்போகிறேன்” என்று கூறி ஆசிரியர் கூறிய விளக்கத்தையும் சரியாக எடுத்துரைத்தது.

அதனைக் கேட்ட காக்கை கருங்காலன் “குதிரைக்குட்டி குணவதி கூறிய பழமொழியில் வார்த்தைகளின் திரிபு அதன் பொருளை மாற்றி விட்டதை எல்லோரும் அறிந்தீர்கள் தானே. நாளை மற்றொரு பழமொழியைப் பற்றி அறிந்து கொள்வோம்” என்று கூறி எல்லோரையும் வழியனுப்பியது.

 இராசபாளையம் முருகேசன்     கைபேசி: 9865802942

 

Visited 1 times, 1 visit(s) today

Comments

“பூசாரி பொய்யும் புலவனார் பொய்யும் ஆசாரி பொய்க்கு அரை பொய்க்கு ஆகாது” மீது ஒரு மறுமொழி

  1. Dr.V.K.Kanniappan

    பூசாரி பொய்யும் புலவனார் பொய்யும் ஆசாரி பொய்க்கு அரை பொய்க்கு ஆகாது என்ற பழமொழியும், அதன் உண்மைப் பொருளும் அறிந்து கொண்டேன்.