பூணூல் – ஓர் அறிமுகம்

பூணுகின்ற (அணிகின்ற‌) நூல் பூணூல் ஆனது. இந்தப் பூணூலை எல்லோரும் தரிக்கலாம். இன்னார்தான் தரிக்க வேண்டுமென எந்த நியதியுமில்லை.

அறிந்தவர்கள் முப்புரிநூலை அணிந்திருந்ததாக சங்க இலக்கியங்களில் காண்கின்றோம்.

“புரி நூல் மார்பீர்” என்று மணிமேகலையில் பேசக் காண்கின்றோம்.

நூலே கரகம் முக்கோல் மணையே

ஆயும் காலை அந்தணர்க்கு உரிய

என்கிறது தொல்காப்பியம்.

நம்மிடை பண்டைய காலம் முதல் கற்றறிந்தோர் முப்புரி நூலை அணிந்திருந்தனர் என்பதை அறிகின்றோம்.

ஒருவன் பிறந்தபோது சூத்திரனாக இருக்கின்றான்; உபநயநம் செய்து கொண்ட பின் இரண்டாவது பிறவி அடைந்தவனாகின்றான்; வேதங்களைப் படித்துணர்வதால் பண்டிதனாகின்றான்; இவற்றினால் ஞானத்தை உணர்ந்தவன் பிராமணன் ஆகின்றான்.

ஜன்மநா ஜாயதே ஸூத்ர, கர்மணா ஜாயதே த்விஜ

வேத பாடந்து விப்ராணாம், ப்ரஹ்மஜ்ஞாநந்து பிராஹ்மணா

(ஆதாரம்: ஜீவபிரம்மைக்கிய வேதாந்த இரகசியம்)

பூணூலை அறுப்பதை விட, அதன் தத்துவத்தை உணர்ந்து எல்லோரும் அணியச் செய்ய வேண்டும் என்பதே சிறந்த கொள்கையாகும்.

நாம் உயர வேண்டும் என் நினைக்கவேண்டுமே தவிர, மற்றவரைத் தாழ்த்த நினைத்தால் தாமே தாழ்வோம்.

நம் அறியாமையினால் நம் பிரதிநிதியாக நாமே சிலரை முன்னிறுத்தி, நாமே நம்மைத் தாழ்த்திக் கொண்டோம்.

அவசியமானவற்றை தெரிந்து கொள்ள வசதிகள் வந்தும், பொழுதுபோக்கு அம்சங்களில் காலத்தை கழிக்கின்றோம். யாரிடமும் இல்லா அறிவுச் செல்வங்களை அறிய தேடி எடுக்க முயலவில்லை; இனியாவது முயல்வோம்.

நமது உடலில் எழுபத்து ஈராயிரம் நாடிகள் இருக்கின்றன. அவற்றில் 108 நாடிகள் முக்கியமானவை.

அவைகளில் சுழுமுனை, இடைகலை, பிங்கலை, குஹூ, சரஸ்வதி, யசஸ்வநி, பூஷ, விசுவோதர, வருண, அஸ்திஜிம்ஹ, பயஸ்வநி, சங்கினி, காந்தாரி, அலம்புஸ என்னும் பதினான்கு நாடிகள் மிக‌முக்கியமானவை.

அவற்றில் இடைகலை, பிங்கலை, சுழுமுனை என்னும் மூன்று நாடிகள் மிகமிக‌முக்கியமானதாக இருக்கின்றன‌. இந்த மூன்று நாடிகளையும் ‘யக்ஞோபவீதம்’ என்று சொல்லுகின்றோம்.

ஜாதி குல பேதமில்லாமல் ஜனன காலம் முதல் மரண காலம் வரையில் மூக்கின் வழியே ஆடிக் கொண்டிருக்கும் சுவாசத்தையே ‘யக்ஞோபவீதம்’ என்பர்.

ஆவணி அவிட்டத்தில் கழற்றி மாட்டிக் கொள்வதையும், உபநயணமென்று சொல்லி நூலிழைகளை அணிந்து கொள்வதும் ‘யக்ஞோபவீதமன்று’.

இந்தப் பூணூலை தங்கத்தினாலும், தர்ப்பையினாலும், மரத்தின் நார்களினாலும் மற்றும் பருத்தியினாலும் செய்யலாம். உலகில் உயர்ந்த முறையென பருத்தியினால் செய்வதையே சிறப்பெனக் காண்கின்றோம்.

பூணூல் செய்யும் முறை

கன்னிப் பெண்கள் பருத்தி செடியிலிருந்து பருத்தியை பறித்து வந்து, அவர்களே அவற்றை பிரித்து, இராட்டிணத்தில் விதை நீக்கி நூலாக திரித்து, மூன்று இழைக் கொண்ட நூலாக முறுக்கி, தொண்ணூற்றாறு தத்துவங்களை குறிப்பதாகக் கொண்டு தொண்ணூற்றாறு பிடி நீளத்தில் தயார் செய்தனர்.

இடது கையின் ஆள்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல், சுண்டுவிரல் ஆக இந்நான்கு விரல்களில் சுற்றி அதை மூன்றாக மடித்து, முறுக்கி சாவித்திரி என்றும், பிரம்ம கிரந்தி என்றும், நாக பாசமென்றும் சொல்லப்பட்ட பெயரைக் கொண்டு முடிச்சு போடவேண்டும். இப்பூணூல் மூன்று இழையாய் முறுக்கி ஒன்றாய் மடிப்பதால் மொத்தம் ஒன்பது இழையாகின்றது.

ஞானத்தை குருவினால் பெற்று செயலாற்றும் விதமறிந்து, கடைபிடிக்கும் செயலை ஒருவட்டத்தில் அடக்கிவிட்டு, நாம் அறிந்து கொள்ளாதது, நம் தவறே அன்றி பிறர் குற்றமன்று.

தொண்ணூற்றாறு தத்துவங்களை காட்ட தொண்ணூற்றாறு விறற்கடை பூணூலை காட்டியும், நமது உடல் எண்ஜாணில் அடங்குவதால் இப்பூணூலை எண்ஜாணாய் மடித்து கழுத்தில் மாட்டி, குருவானவர் அதற்குண்டன வழிகளையும் முக்கியத்துவத்தையும் உணர்த்துவார்கள். இதனைத் தெரிந்து கொள்ளாதது நம் அறியாமை.

பூணூலுக்கு ஆதாரம் பருத்தி. முற்றி வெடித்த‌ பருத்திக்காயிலிருந்து விதையை நீக்கினால் பருத்தி சுத்தமான வெண்மையாய் திகழும்.

இதுபோல் பிறவிக்கு ஆதாரம் ஆசை என்னும் விதை. ஆசையென்னும் விதையை நீக்கினால், இந்த ஜீவன் பருத்தியைப் போல் சுத்தமாகி மோட்சத்தை அடையும். இதனால் அறிவது சகல ஆசையை ஒழித்தவன் சுத்தப் பிரம்மமாகின்றான்.

பூணூலை இணைக்கும் முடிக்கு ‘சுழுமுனை நாடி’ என்று பெயர். சுழுமுனை நாடி நாபியில் இருப்பதால் இம்முடியை நாபியிடம் வைக்கின்றார்கள்.

வாசியான இட‌கலை, பிங்கலையில் மூச்சை விடாமல் மூலாதார வழியாக சுழுமுனை நாடியில் செலுத்தி பிரம்ம கபாலத்தில் கொண்டு போய் நிறுத்த வேண்டும். இவ்வாறு நிறுத்த பழக்கப்பட்டவர் தானே பிரம்மமாகிவிடுவார் என்று பூணூல் வாயிலாக பிரம்மத்தை அறியும்படி காட்டி இருக்கின்றார்கள்.

சத்தியும் சிவமுமாகித் தாண்டவமாடும் வாசி

சுத்திய மூலநாடிச் சுழுமுனைக் கம்பத்துளே

புத்தியைச் செலுத்தி மேலாம் பொருடனை யெடுக்க வல்லார்

புத்திசெய் நாகை நாதர் பதிதனைப் பார்ப்பார் நெஞ்சே. (நெஞ்சறி விளக்கம்)

இப்படிப்பட்ட சில செய்திகளை, நூல்கள் வாயிலாகவும் குருவின் வாயிலாகவும் விருப்பமுடன் தெரிந்து கொள்ளாதது நம்முடைய தவறாகும்.

இதை பயன்படுத்தி சிலர் பூணூல் போட்டுக் கொண்டுள்ள தாமே உயர்ந்தவர்கள் எனக் காட்டிக் கொண்டனர். நாமும் நம்மை நாமே தாழ்த்திக் கொண்டோம்.

சந்தியா வந்தனம்

இந்த பூணூலைக் கொண்டே கணக்கிட்டு ‘சந்தியா வந்தனம்’ செய்வர் பெரியோர்.

சந்தியா வந்தனக் காலத்தில் காயத்ரி மந்திரம் ஜபம் செய்யும்போது பூணூலைப் பெருவிரல், ஆள்காட்டி விரல்களுக்கு நடுவே அந்நூலை கெட்டியாய் பிடித்து, அதைத் துணியால் மூடி, இதயத்திற்கு நேராய் நிறுத்தி, மெதுவாக காயத்ரி மந்திரம் சொல்வதே முறை.

இப்படி செய்வதற்கு காரணம் பூணூலே பரமாத்ம சொரூபம், விரல்களே மனது. ஆதலால் நமது இதய கமலத்தில் இருக்கும் பரமாத்ம சொரூபத்தில் மனதைச் சேர்க்க வேண்டும் என்று, பூணூலை விரல்களால் பிடித்து இதயத்திற்கு நேராக வைத்து காயத்ரி மந்திரம் ஜெபிப்பார்கள்.

அவ்வாறு ஜபிக்கும்போது பிராணவாயுவை நிறுத்தி ஸப்த வியாஹூருதிகள், காயத்ரி மந்திரம், சிரோ மந்திரங்களுடன் மூன்று முறை ஜபிப்பது ஒரு பிராணயாமம் ஆகும்.

இச்செயல்களைச் செய்ய ஆண், பெண், ஜாதி என்ற எந்தவிதமான பாகுபாடும் இல்லை.

மைத்ரேயி, சுலபசாரங்கி, சாண்டிலி, தபஸ்வினி முதலிய பெண்களும் இம்முறைகளைக் கடைப்பிடித்து மேலான பதவியை அடைந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இச்செய்தியை மேலோட்டமாக காட்டியுள்ளேன். மேலும் அறிய கடிகோட்டை ஸ்ரீ பரமஹம்ஸ சச்சிதானந்த யோகீஸ்வரரின் நூலினைப் பார்த்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்
திருநின்றவூர்-602024
கைபேசி: 94444104

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.