பூண்டு

பூண்டு – மருத்துவ பயன்கள்

பூண்டு சிறுகட்டிகள், காது மந்தம், நாட்பட்ட இருமல், இரைப்பு, வயிற்றுப் புழுக்கள், வாத நோய்கள், வாய்வு தொல்லை, தலைவலி, ஜலதோஷம், வாய் நோய், சீதக் கழிச்சல் போன்றவற்றை குணமாக்கும்.

பூண்டு குமிழ் போன்ற பருத்த தண்டுகளைக் கொண்ட சிறுசெடி. இலைகள் தட்டையானவை. நீண்டு மெலிந்தவை. இலையின் அடிப் பகுதி உறை போன்று காணப்படும்.

பூ, பாளை போன்ற வட்ட அமைப்பில் தொகுப்பாக காணப்படும். பூ இதழ்களுக்குள் ஒடுங்கி இருக்கும். ஒரு கனியில் 6 விதைகள் வரை காணப்படும். வேரின் கீழிருந்து வளரும் மலர்க்கொத்து தடித்தது. கெட்டியானது.

மத்திய ஆசியா முழுவதும் உணவு உபயோகங்களுக்காக பூண்டு பயிரிடப்படுகின்றது. வெள்ளைப்பூண்டு, உள்ளி, வெள்ளுள்ளி, வெள் வெங்காயம், காயம் போன்ற மாற்றுப் பெயர்களும் உண்டு. காய்ந்த பூண்டானது மளிகைக் கடை, நாட்டு மருந்து கடைகளிலும் எப்போதும் கிடைக்கும்.

பூண்டை நசுக்கி பிழிந்த சாறு 2 துளி அளவு காதில் விடவேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் 3 நாள்கள் வரை செய்தால் காதுவலி குணமாகும்.

பூண்டு, மிளகு, கரிசாலை இலைகள் இந்த மூன்றையும் சம எடையாக எடுத்துக் கொண்டு அரைத்து பசையாக்கி எலுமிச்சம் பழ அளவு ஒவ்வொரு வேளை உணவுக்குப் பின்னர் சாப்பிட வயிற்று உப்புசம் சரியாகும்.

100கிராம் உரித்த பூண்டை நசுக்கி 1 ½ லிட்டர் தேங்காய் எண்ணெயில் இட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு அந்த எண்ணெயை வலியுள்ள இடத்தில் தேய்த்து வர வாதநோய்கள் குணமாகும்.

பூண்டின் சாறு 10 துளிகள் அளவு இரவு உணவுக்குப் பின்னர் சாப்பிட வயிற்றுப் புழுக்கள் வெளியாகும்.

பூண்டின் மருத்துவப் பயன்கள் பல. மருந்துகளை விட உணவில் அதிகமாகச் சேர்கின்றது. பூண்டை உணவில் முறையாக சேர்த்து வர வாத நோய்கள், சீதபேதி, வாய்வுத் தொல்லை, குன்மம் போன்றவை குணமாகும். மேலும் இதய நோய் வராமல் காக்கும்.

பூண்டு எண்ணெய் கக்குவான், குடல் புண், மலேரியா, யானைக்கால், ஆஸ்துமா ஆகியவற்றைக் கட்டுப் படுத்தும் திறன் கொண்டது. மேலும் இது இரத்த அழுத்த நோயையும் குணப்படுத்தும். கீல் பிடிப்புக்கான பூசு மருந்தாகவும் பயன்படும்.

பூண்டும், பூண்டு எண்ணெயும் பல மேல் நாட்டு மருந்துகளிலும், இலேகியங்களிலும் மாத்திரைகளிலும் சேர்க்கப்படுகின்றன.