பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்

பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால் என்று தொடங்கும் இப்பாடல், திருவாசகத்தில் வைக்கப்பட்டுள்ள திருப்பள்ளியெழுச்சியின் ஐந்தாவது பாடலாகும்.

சைவ சமயக் குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர், அடியவர்களுக்கு எளியவராகத் திகழும் சிவபெருமானின் மீது, திருவாசக திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களைப் பாடினார்.

திருவெம்பாவை பாடல்கள் 20, திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் 10 சேர்த்து மொத்தம் 30 பாடல்கள் மார்கழி மாத இறைவழிபாட்டில் பாடப்படுகின்றன.

திருப்பள்ளியெழுச்சி தமிழின் தொண்ணூற்றாறு பிரபந்தங்களின் வகைகளுள் ஒன்று. உயிரினங்களைப் போன்று இறைவனும் இரவில் உறங்கிக் கொண்டிருப்பதாகக் கருதி, துயில் எழுப்புவதாக இப்பாடல்கள் அமையப் பெற்றுள்ளன.

அதாவது நம் உள்ளத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் இறைஞானத்தை தட்டி எழுப்ப எனப் பொருள் கொள்ளலாம்.

பொதுவாக திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களில், அதிகாலைப் பொழுதில் சுற்றுப்புறத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன.

திருப்பெருந்துறையில் இருக்கும் சிவபெருமானின் மீது, மாணிக்கவாசகர் பாடிய திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களும், ரங்கநாதப் பெருமானின் மீது, தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடிய திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களும் புகழ் பெற்றவை.

பஞ்சபூதங்கள் எல்லாவற்றிலும் நிறைந்தும், பிறப்பு, இறப்புகளைக் கடந்தும், அடியவர்களுக்கு எளியவராகவும், ஏனையோருக்கு அரியவனாகவும் இருக்கின்ற இறைவரே, எங்களுடைய குற்றங்களை நீக்கி அருள்புரியவரே, பள்ளியிலிருந்து எழுந்து அருள்வாயாக.

இறைவா நீ பிறப்பு, இறப்புகளைக் கடந்து ஐம்பூதங்களிலும் நிலைத்து இருப்பதாக இசைப்பாடல்கள் கூறுகின்றன. நீ உன்னுடைய அடியவர்களுக்கு எளியவராகவும், ஏனையோருக்கு அரியவனாகவும் இருக்கின்றாய்.

எங்களுடைய குற்றங்களை எல்லாம் நீக்கி அருள்புரிபவரே, பள்ளியிலிருந்து எழுந்து அருள்வாயாக என்று மாணிக்கவாசகர் இப்பாடலில் வேண்டுகோள் விடுக்கிறார்.

நிரந்தரமாக இருக்கின்ற இறைவனின் அருளினைப் பெற அவனின் அடியவராக மாறுதலே வழியாகும் என்பதை இப்பாடல் எடுத்துரைக்கிறது.

இனி திருப்பள்ளியெழுச்சி ஐந்தாவது பாடலைக் காண்போம்.

திருப்பள்ளியெழுச்சி பாடல் 5

பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்

போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்

கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்

கேட்டறியோம் உன்னை கண்டறிவாரைச்

சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா

சிந்தனைக்கு அரியாய் எங்கள் முன்வந்து

ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்

எம்பெருமான் பள்ளி எழந்தருளாயே!

விளக்கம்

சிவஞானத்தில் திளைத்து இன்புற வேண்டும் என்பதை உலக உயிர்கள் விரும்பின என இப்பாடல் உணர்த்துகிறது.

குளிர்ச்சியான வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் அரசனே, நீ நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் உள்ளிட்ட பஞ்சபூதங்களிலும் நிலைத்திருப்பதாக ஞானியர்கள் கூறுகின்றனர்.

நீ பிறப்பு, இறப்புக்களைக் கடந்து நிலையாவன் என்று இசைப்பாடல்களால் பாடுகின்றனர், ஆடகின்றனர். ஆனால் உன்னை நேரே கண்டு அறிந்தவர்களை நாங்கள் காதால் கேட்டு அறிந்திலோம்.

நீ உன்னுடைய அடியர்களுக்கு எளியவனாகவும், ஏனையோருக்கு அரியவனாகவும் நிற்கின்றாய். எங்கள் குற்றங்களை எல்லாம் நீக்க எங்கள் முன்னே வந்து திருக்காட்சி தந்து அருள்கின்ற எம்பெருமானே, பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக.

நிலைத்த இன்பமாகிய சிவஞானத்தில் திளைக்க இறைவனின் அடியவராதலே வழி என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.