பூந்தி செய்வது எப்படி?

பூந்தி மிகப் பிரபலமான இனிப்பு வகைகளுள் ஒன்று. தீபாவளி பலகாரங்களில் பூந்தி கட்டாயம் இடம் பெறும்.

பூப்போல மெத் மெத் என்று இருக்கும் பூந்தி இனிப்பு பிரியர்களின் விருப்பமான நொறுக்குத் தீனி என்பதில் ஐயம் இல்லை.

வாயில் பல் இல்லாத வயதானவர்களின் முதல் தேர்வு பூந்திதான். இனி சுவையான பூந்தியை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கடலை மாவு – 250 கிராம் (1 பங்கு)

பச்சரிசி மாவு – 25 கிராம்

சமையல் எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

பாகு காய்ச்ச

வெள்ளை சர்க்கரை – 300 கிராம் (1 பங்கிற்கும் சற்று கூடுதலாக)

தண்ணீர் – 1/3 பங்கு

உணவுக் கலர்ப்பொடி – சிறிதளவு

வறுத்துச் சேர்க்க

நெய் – 4 ஸ்பூன்

முந்திரிப் பருப்பு – 15 எண்ணம்

உலர் திராட்சை – 15 எண்ணம்

ஏலக்காய் – 4 எண்ணம் (மீடியம் சைஸ்)

பூந்தி செய்முறை

முதலில் கடலை மாவினை சலித்துக் கொள்ளவும்.

கடலை மாவினையும், அரிசி மாவினையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.

 

கடலை மாவு மற்றும் அரிசி மாவு
கடலை மாவு மற்றும் அரிசி மாவு

 

பின் அதனுடன் தேவையான அளவு தண்ணீரினைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கட்டியில்லாமல் கெட்டியாக தோசை மாவுப் பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

 

சரியான பதத்தில் பூந்திமாவு
சரியான பதத்தில் பூந்திமாவு

 

எண்ணெய் காய்ந்ததும் கரைத்த கடலை மாவினை பூந்திக் கரண்டியில் ஊற்றவும்.

 

மாவினை பூந்திகளாக ஊற்றும் போது
மாவினை பூந்திகளாக ஊற்றும் போது

 

பூந்திகள் வேகும் போது
பூந்திகள் வேகும் போது

 

அடுப்பினை மிதமான தீயில் வைத்து பூந்திகளை வேகவிடவும். பூந்திகள் சலசலவென வெந்ததும் வெளியே எடுத்து விடவும்.

பூந்திகளை மொறு மொறுப்பாக வேக விடக்கூடாது. இவ்வாறாக எல்லா மாவினையும் பூந்திகளாக சுட்டு எடுக்கவும்.

 

பூந்திகளை எடுக்கும் போது
பூந்திகளை எடுக்கும் போது

 

பாகு செய்முறை

பாத்திரத்தில் 1/3 பங்கு தண்ணீரை ஊற்றி அதில் வெள்ளைச் சர்க்கரையைப் போட்டு அடுப்பினை மிதமான தீயில் வைக்கவும்.

 

சர்க்கரை பாகினைத் தயார் செய்யும் போது
சர்க்கரை பாகினைத் தயார் செய்யும் போது

 

சர்க்கரை கரைந்து பிசுபிசுப்புப் பதம் வந்ததும் இறக்கிவிட வேண்டும். கம்பிப் பதம் தேவையில்லை.

சர்க்கரைப் பாகினை இறக்கும் முன் சிறிதளவு உணவுக் கலர்ப்பொடியைச் சேர்த்து கிளறி இறக்கவும்.

 

தயார் நிலையில் சர்க்கரை பாகு
தயார் நிலையில் சர்க்கரைப் பாகு

 

சர்க்கரைப் பாகினை சுட்டு வைத்துள்ள பூந்திகளுடன் சேர்த்துக் கிளறவும்.

 

பூந்தியில் சர்க்கரைப்பாகினைச் சேர்க்கும் போது
பூந்தியில் சர்க்கரைப்பாகினைச் சேர்க்கும் போது

 

சர்க்கரைப்பாகு பூந்திகளில் விரவினாற் போல இருக்கும். இதுவே சரியான பதம்.

வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய்யினை ஊற்றி அதில் முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை சேர்த்து வறுக்கவும்.

வறுத்த கலவையை பூந்தியில் சேர்க்கவும்.

 

வறுத்த முந்திரி, உலர் திராட்சை சேர்த்ததும்
வறுத்த முந்திரி, உலர் திராட்சை சேர்த்ததும்

 

ஏலக்காயை ஒன்றிரண்டாக உடைத்து பூந்தியில் சேர்த்து ஒரு சேரக் கிளறவும். பூந்தியை மூடி வைத்து விடவும்.

 

ஏலக்காயைச் சேர்த்ததும்
ஏலக்காயைச் சேர்த்ததும்

 

ஆறு மணி நேரம் கழித்துப் பார்த்தால் சர்க்கரைப் பாகு முழுவதும் பூந்தியால் இழுக்கப்பட்டு பொலபொலவென இருக்கும்.

சுவையான மணம் மிக்க பூந்தி தயார்.

 

சுவையான பூந்தி
சுவையான பூந்தி

 

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் சமையல் சோடாவினை கடலைமாவில் சேர்த்தும் பூந்தியினைத் தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் நெய்யில் வறுத்த கிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்த்து பூந்தியினைத் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

Comments are closed.