பூந்தி லட்டு தித்திக்கும் இனிப்பு வகைகளுள் ஒன்று. முதன் முறையாக சமைப்பவர்களும் கூட எளிதில் செய்யக் கூடிய இனிப்பு வகை இது.
இதனை அசத்தலாகச் செய்வதற்கு ஒருசில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் மட்டும் போதும்.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களிலும் இதனை வீட்டிலேயே செய்து அசத்தலாம்.
இனி சுவையான பூந்தி லட்டு செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பூந்தி பொரிக்க
கடலை மாவு – 3 கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – மிகவும் சிறிதளவு
சோடா உப்பு – ஒரு சிட்டிகை
கடலை எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
பாகு செய்ய
வெள்ளை சர்க்கரை – 3 கப்
பாகு காய்ச்ச தண்ணீர் – 1 கப்
ஏலக்காய் – 3 எண்ணம்
கிராம்பு – 4 எண்ணம்
தாளித்துக் கொட்ட
முந்திரி பருப்பு – 15 எண்ணம்
கிஸ்மிஸ் – 15 எண்ணம்
நெய் – 4 ஸ்பூன்
பூந்தி லட்டு செய்முறை
பூந்தி தயார் செய்தல்
முதலில் கடலை மாவினை வாயகன்ற பாத்திரத்தில் எடுத்து, அதனுடன் உப்பு மற்றும் சோடா உப்பு சேர்த்து ஒருசேர நன்கு கலந்து கொள்ளவும்.
பின்னர் கடலை மாவு கலவையினை நன்கு சலித்துக் கொள்ளவும்.
சலித்த கடலை மாவுக் கலவையுடன் தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து, கட்டி இல்லாமல் படத்தில் காட்டியவாறு கட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
பின்னர் அதனுடன் தேவையான தண்ணீர் சேர்த்து, தோசை மாவின் பதத்திற்கும் சற்று நீர்மமாகக் கரைத்துக் கொள்ளவும்.
மாவினை கரண்டியால் மேலே இருந்து ஊற்றும்போது, படத்தில் உள்ளவாறு ஒரே சீராக விழ வேண்டும். இதுதான் சரியான பதம்.
மாவு மிகவும் நீர்த்து இருந்தால், மாவு பூந்தியாக விழும்போது உருண்டையாக விழாமல் வால் போல் நீண்டு விழும்.
மாவு கெட்டியாக இருந்தால், மாவு பூந்தியாக விழும்போது தட்டையாக விழும்.
மாவு விழுந்து பூந்தியாக மாறும் அளவினைப் பொறுத்து, தண்ணீரையோ அல்லது மாவினைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
மாவினை சரியான பதத்தில் கரைப்பதே சிறந்தது. ஏனெனில் மாவின் அளவிற்கு ஏற்றவாறே, வெள்ளை சர்க்கரை மற்றும் தண்ணீரின் அளவுகளை எடுத்துள்ளோம்.
வாணலியை அடுப்பில் வைத்து கடலை எண்ணெய் ஊற்றி காய விடவும். கரைத்து வைத்துள்ள மாவில் ஒருதுளியை எடுத்து எண்ணெயில் விடும்போது, மாவு உடனே மேலே எழுந்தால் எண்ணெய் சரியான சூட்டில் உள்ளது என்பது பொருள்.
இப்பொழுது பூந்திக் கரண்டியை எண்ணெயின் மேல் 10 செமீ உயரத்திற்கு வைத்து, ஒரு கரண்டி மாவினை மட்டும் எடுத்து ஊற்றவும். மாவு பூந்திகளாக எண்ணெயில் விழும்.
பூந்திக் கரண்டியை மாவு ஊற்றும்போதே, எண்ணெய் முழுவதும் பூந்திகள் விழும்படி லேசாக நகர்த்திக் கொண்டே இருக்கவும். இதனால் பூந்திகள் ஒன்றன் மேல் ஒன்று விழுவது தவிர்க்கப்படும்.
30 நொடிகள் மட்டும் பூந்திகளை எண்ணெயில் வேகவிட்டு எடுத்து விடவும். அதாவது வெந்த பூந்தியை விரல்களுக்கு இடையே வைத்து நசுக்கும்போது, பூந்திகள் உடையாமலும் அதே சமயம் மிருதுவாகவும் இருக்க வேண்டும்.
இவ்வாறு எல்லா மாவினையும் பூந்திகளாக பொரித்து, எண்ணெயை வடித்து விட்டு சேர்த்து வைக்கவும்.
ஒருமுறை பூந்தி ஊற்றி முடிந்ததும், பூந்திக் கரண்டியை நன்கு கழுவி துணியால் துடைத்துவிட்டு, அடுத்த முறை பூந்தியை ஊற்றவும். இவ்வாறு செய்தால் மட்டுமே உருண்டையான பூந்திகளைப் பெற முடியும்.
பாகு தயார் செய்தல்
ஏலக்காய் மற்றும் கிராம்பினை ஒன்றிரண்டாக தட்டி வைத்துக் கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில் வெள்ளைச் சர்க்கரையைச் சேர்த்து, அதில் தண்ணீர் ஊற்றி சர்க்கரையைக் காய்ச்சவும்.
முதலில் நுரைத்துப் பொங்கும். சர்க்கரை முழுவதும் கரைந்ததும் நுரை அடங்கி விடும்.
தற்போது சர்க்கரைக் கரைசலை பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரல்களுக்கு இடையே வைத்து, விரல்களை விரிக்கும்போது ஒரு கம்பிப் பதம் தோன்றும்.
அரை கம்பிப் பதத்திலிருந்து ஒரு கம்பி பதம் வரை சர்க்கரை கரைசல் வரும்போது அடுப்பினை அணைத்து விடவும்.
தட்டி வைத்துள்ள ஏலக்காய் மற்றும் கிராம்பினை சர்க்கரைப் பாகில் கலந்து விடவும்.
எக்காரணம் கொண்டும் ஒரு கம்பிப் பதத்தை சர்க்கரைக் கரைசல் தாண்டக் கூடாது. சர்க்கரைக் கரைசல் ஒரு கம்பிப் பதத்ததைத் தாண்டினால் பாகு முறுகி விடும். பாகு முறுகி விட்டால் சர்க்கரை கெட்டியாகி பூந்தியால் பாகினை உறிஞ்ச இயலாது.
இப்பொழுது பொரித்து வைத்துள்ள பூந்திகளை சர்க்கரைப் பாகுகில் கொட்டி நன்கு கலந்து விடவும்.
பத்து நிமிட இடைவெளியில் பூந்திகளை பாகில் ஒருசேர நன்கு கிளறி விடவும்.
இருபது நிமிடங்கள் கழித்து வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி உருகியதும், அதில் முந்திரிப் பருப்புகளை ஒன்றிரண்டாக உடைத்து சேர்க்கவும்.
முந்திரிப் பருப்புகள் லேசாக நிறம் மாறத் தொடங்கியதும் கிஸ்மிஸ் பழங்களைச் சேர்த்து வதக்கவும்.
கிஸ்மிஸ் பலூன் போல் உப்பியதும் அடுப்பினை அணைத்துவிட்டு, பூந்திக் கலவையில் கொட்டி நன்கு ஒருசேரக் கிளறவும்.
பூந்திகள் எல்லாம் சர்க்கரைப்பாகினை உறிஞ்சியதும் (அரை மணியிலிருந்து ஒரு மணி நேரம் வரை) வெது வெதுப்பான சூட்டில் பூந்திகள் ஒருசேர திரண்டு வரும். லட்டு பிடிக்க இதுவே சரியான பதம்.
விருப்பமிருந்தால் லட்டு பிடிப்பதற்கு முன்பு பூந்தியில் சிறிதளவை மிக்ஸியில் சேர்த்து அரைத்து பூந்தியில் கொட்டி ஒருசேர கிளறவும்.
வேண்டிய அளவு பூந்திகளை எடுத்து உருண்டையாக அழுத்திப் பிடிக்கவும்.
சுவையான பூந்தி லட்டு தயார்.
முதலில் லட்டுகளைப் பிடித்து ஒரு தட்டில் சிறிதளவு இடைவெளிவிட்டு வைக்கவும். சிறிது நேரத்தில் லட்டின் மேற்புறமும் உலர்ந்து விடும்.
லட்டுகள் நன்கு ஆறியதும் அதனை காற்று புகாத டப்பாவில் வைத்து இரண்டு வாரங்கள் வரை பயன்படுத்தலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் வெள்ளரி விதைகளை பூந்திக் கலவையில் கொட்டி பூந்தி லட்டு தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் உணவு கலர் பொடியை கடலை மாவில் கலந்து பூந்திகள் தயார் செய்து லட்டு பிடிக்கலாம்.
விருப்பமுள்ளவர்கள் பச்சை கற்பூரம் சிறிதளவு கடலை மாவில் கலந்து பூந்திகள் தயார் செய்து லட்டு பிடிக்கலாம்.