மலர்வனம் என்றொரு காட்டில் வயதான புலி ஒன்று வசித்து வந்தது. அது தங்கி இருந்த இடத்தில் நிறைய எலிகள் இருந்தன.
புலி உணவினை உண்பதற்கு முன் எலிகள் புலியின் உணவினை உண்பதும், புலி உறங்கும்போது அதன் மீது விளையாடுவதுமாக நிறைய தொல்லைகளை எலிகள் செய்து வந்தன.
எலிகளின் தொல்லைகளுக்கு ஆளான புலியானது எலிகளை அடக்க எண்ணியது. எனவே புலி நரியிடம் சென்று யோசனை கேட்டது.
நரியும் பூனை ஒன்றை வேலைக்கு வைத்துக் கொண்டால் எலிகளின் தொந்தரவிலிருந்து தப்பிக்கலாம் என யோசனை கூறியது.
அதன்படி புலி பூனை ஒன்றை அழைத்தது. “எலிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆதலால் நீ என்னுடனே இருந்து எலிகளின் தொல்லையிலிருந்து என்னைப் பாதுகாக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டது.
பூனை உடனே சூழ்ச்சி செய்தது. ‘புலியின் அருகில் இருப்பதுதான் எனக்கு சிறப்பு. அது எப்போதும் நிலைத்து இருக்க வேண்டும். எனவே எலிகளை விரட்ட வேண்டுமே தவிர அவற்றைக் கொல்லக் கூடாது. எலிகள் இருக்கும் வரையில் புலியும் தன்னை அருகில் வைத்திருக்கும்’ என்று மனதிற்குள் எண்ணியது.
பின்னர் புலியிடம் எலிகளை நெருங்க விடாமல் விரட்டியதே தவிர அவைகளைக் கொல்லவில்லை. இப்படியே பல நாட்கள் சென்றன.
ஒரு நாள் பூனை புலியிடம் “ஐயா, எனக்கு நாளை விடுமுறை வேண்டும். எனக்குப் பதில் என்னுடைய குட்டிகள் எலிகளை உங்களிடம் நெருங்காமல் பார்த்துக் கொள்ளும்” என்றது.
அதற்கு புலி “எலித் தொல்லை இருக்கக் கூடாது. அதனை நீ பார்த்தால் என்ன?. உன்னுடைய குட்டிகள் பார்த்தால் என்ன?” என்று கூறியது.
உடனே பூனை தன்னுடைய குட்டிகளை புலியிடம் விட்டுவிட்டுச் சென்றது.
வழக்கம் போல எலிகள் புலியின் அருகே வந்தன. உடனே பூனைக் குட்டிகள் பாய்ந்து சென்று ஒரு எலியைக் கூட விடாமல் அனைத்தையும் கொன்று போட்டன.
மறுநாள் அங்கு வந்த பூனை எல்லா எலிகளும் இறந்து கிடப்பதைக் கண்டு திகைத்தது.
“என்ன வேலை செய்து விட்டீர்கள். உங்களால் என்னுடைய வேலை போய்விட்டதே” என்று கத்தியது.
தாயிடம் தங்கள் செயலுக்கு பாராட்டுக் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த பூனைக் குட்டிகள் மிகுந்த வருத்தம் கொண்டன.
நடந்தவற்றைப் பார்த்த புலி “எலிகளின் தொல்லை நீங்கி விட்டது. இனி உங்கள் உதவி எனக்கு தேவையில்லை. நீங்கள் போகலாம்” என்றது.
பூனையும் அதன் குட்டிகளும் வருத்தத்துடன் அங்கிருந்து சென்றன.
பூனையின் சூழ்ச்சி கதையின் கருத்து
பலநாள் சூழ்ச்சி ஒருநாள் எப்படியும் தோற்கும் என்பதை பூனையின் சூழ்ச்சி என்ற இக்கதை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மறுமொழி இடவும்