பூமி மாதா

கடலில் மூழ்கி முத்தெடுத்தான்
மனைவியின் முத்துப்பல் சிரிப்பைக் காண

மூட்டைகள் தூக்கினான் தன் பிள்ளைகள் புத்தக
மூட்டைகள் தூக்க வேண்டுமென

உப்பு மூட்டை தூக்கினான் தன் குழந்தை
உலகமெல்லாம் சுற்றிவர வேண்டுமென

பட்டுத்துணி, வெட்டுத்துணி என பாரபட்சனமின்றி தூக்கினான்
தன்மகள் திருமணத்திற்கு பட்டுச்சேலை கட்டுவதற்காக

இத்தனை தூக்கி நிம்மதியின்றி நித்தமும் அலைந்தான்
இன்னல் நீங்கத் தன்னைத் தாங்குவது யார் எனத் திகைத்தான்

உன்வியர்வைத் துளி படக் கண்டு என் கண்ணில்
உதிரம் கொட்டுதடா, சிறிது படுத்து ஓய்வெடு
என்று அணைத்து தூங்க வைத்தாள் பூமிமாதா

அப்பொழுதுதான் உணர்ந்தான் தன்னையும் சுமக்க
வாழ்நாள் முழுவதும் ஒருதாய் உண்டு
அவள்தான் பூமித்தாய் என்று நிம்மதி உணர்ந்தான்!

– ஸ்ருதி