பூம்பருப்பு சுண்டல் நவராத்திரி வழிபாடு, விநாயகர் சதுர்த்தி வழிபாடு, ஐயப்பன் வழிபாடு உள்ளிட்ட எல்லா தெய்வங்களின் வழிபாட்டிலும் சமைத்து படைத்து வழிபட ஏற்றது.
என்னுடைய சிறுவயதில் ஐயப்பன் வழிபாட்டில் பஜனைக் கூட்டம் முடிந்ததும் இதனை சாப்பிட்ட ஞாபகம் இருக்கிறது. அதனுடைய சுவையும் மணமும் இன்றைக்கும் என் நினைவில் நிற்கிறது.
இனி சுவையான பூம்பருப்பு சுண்டல் செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு – 200 கிராம்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
தேங்காய் – ¼ மூடி (மீடியம் சைஸ்)
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்
சீரகம் – ½ ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 3 எண்ணம்
கடுகு – ½ ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – 3 கீற்று
பெருங்காயப் பொடி – சிறிதளவு
பூம்பருப்பு சுண்டல் செய்முறை
கடலைப் பருப்பை கழுவி பின் இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
மிளகாய் வற்றலை காம்பு நீக்கி இரண்டாக ஒடித்துக் கொள்ளவும்.
ஊறிய கடலைப் பருப்பில் இருந்து நீரினை வடித்து விடவும்.

ஒரு பாத்திரத்தில் நீரினை ஊற்றி அதில் கடலைப் பருப்பினைச் சேர்த்து வேகவிடவும்.
கடலைப் பருப்பு மலர்ந்தால் போல் வெந்ததும் அதாவது கடலைப் பருப்பினை விரல்களுக்கு இடையே வைத்து அழுத்தினால் எளிதில் நசுங்க வேண்டும். இது சரியான பதம்.

அடுப்பினை அணைத்துவிட்டு கடலைப் பருப்பினை வடிதட்டில் போட்டு கடலைப் பருப்பில் உள்ள நீரினை வடித்து விடவும்.
வாயகன்ற வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு, மிளகாய் வற்றல், சீரகம், பெருங்காயப் பொடி சேர்த்து தாளிதம் செய்யவும்.

பின்னர் அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் முக்கால் பாகம் வெந்ததும் அதனுடன் கடலைப் பருப்பு, தேவையான உப்பு சேர்த்து ஒருசேரக் கிளறி அடுப்பினை அணைத்து விடவும்.


தேங்காயைச் சேர்க்கும்போது
இதனுடன் துருவிய தேங்காயைச் சேர்த்து கிளறவும். சுவையான பூம்பருப்பு சுண்டல் தயார்.

குழந்தைகளுக்கு இடைவேளை உணவாகவும் இதனை கொடுத்து அனுப்பலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் கொத்துமல்லியை சிறுதுண்டுகளாக்கி இறக்கும்போது சுண்டலில் தூவலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!