பூவை கல்யாணசுந்தரம் அவர்களைத் தொண்டை மண்டலத் தலபுராண வேந்தர் என்றும், தொண்டைமண்டல மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்றும் அழைக்கலாம்.
இன்று நாம் சென்னை என்று அறியும் மாநகரில் உள்ள பல ஊர்களின் வரலாற்றைத் தொகுத்துத் தல புராணங்கள் எழுதித் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர்.
தமிழர்களுக்குப் பொதுவாக வரலாற்று அறிவு குறைவு. வரலாற்றை ஆவணப்படுத்துவதில் நம் செயல்பாடு மிகவும் குறைவு. அதை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போதுதான் நம்மால் பூவை கல்யாண சுந்தரம் அவர்களின் பங்களிப்பை உணர முடியும்.
தேடிக் கற்ற கல்வி
சென்னை பூவிருந்தவல்லி எனும் ஊருக்கு அருகாமையிலுள்ள புத்தவேடு எனும் கிராமத்தில் பிறந்தார். இவரின் தந்தையார் பெயர் அண்ணாசாமி; தாயார் பெயர் உண்ணாமுலை.
இவர் 1854-ஆம் ஆண்டு மே மாதம் 10-ஆம் நாள் பிறந்தார். இளமையிலேயே கல்வியில் மிகுந்த நாட்டமுடன் இருந்தார் கல்யாண சுந்தரம். பூந்தமல்லிலுள்ள பள்ளியில் ‘பூங்காவனக் கவி’ என்பவரிடம் தமிழ் பயின்றார்.
பிறகு பச்சையப்பன் கல்லூரியில் படித்தார். இராமலிங்கத்தம்பிரான் போன்ற பல தமிழறிஞர்களிடம் தொடர்ந்து சைவ சித்தாந்த நூற்களைப் படித்துத் தாமும் ஆசுகவியாகச் செய்யுள் புனையும் ஆற்றல் பெற்றார்.
1878-ஆம் ஆண்டில், தசாவதானம் ஜகத்நாதபிள்ளை, தலைமையில், பல புலவர்கள் முன்னிலையில் ”அஷ்டாவதானம்” எனும் பட்டத்தைப் பெற்றார். செய்யுள்களை மிக எளிதாகப் பாடிவிடும் அவரது ஆற்றல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.
தமிழகத்தின் பல ஊர்களுக்குத் தமிழாசிரியர்களைத் தேடிச் சென்று இலக்கிய, இலக்கணங்களில் தேர்ச்சி அடைந்தார். வடலூர் வள்ளலார். மீனாட்சி சுந்தரம் பிள்ளை, மறைமலையடிகள், திரு.வி.க., வ.உ.சி ஆகியோருடன் மிக நெருக்கமான அன்புறவு கொண்டிருந்தார்.
சமகாலத்தில் இவருடனிருந்த புலவர்களை எல்லாம் நினைவு வைத்திருந்த தமிழுலகம், பூவை- கல்யாணசுந்தரம் அவர்களை மட்டும் பெரிதும் பேசவோ, எழுதவோ, கொண்டாடப்படவோ இல்லை. இதற்கான காரணம் தான் ஆச்சர்யமானது.
நூலெழுதி வெளியிடும் அக்காலப் புலவர்களில் பெரும்பகுதிப் புலவர்கள், பூவை. கல்யாண சுந்தரம் அவர்களிடம் அந்த நூலைத் திருத்துதல் செய்துள்ளனர் அல்லது சிறப்புப் பாயிரப் பாடல், வாழ்த்துப் பாடல் பெற்றுள்ளனர்.
அந்தளவிற்குப் பெருமையும் புகழும் பெற்றவராக இருந்திருக்கிறார். ஆனால், கால ஒட்டத்தில் தமிழ்ச்சமூகத்தில் இவர் மறக்கடிக்கப் பட்டிருக்கிறார்.
ஒருமுறை, பட்டிமன்றத்தலைவராகக் கல்யாணசுந்தரம் அவர்கள் இருந்து பேசும் போது, தமிழகத்திலுள்ள ஆதீனங்களில் உள்ள சாதிய நலன் விரும்பிகளைக் குறித்தும், தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்தும் வெளிப்படையாகப் பேசியுள்ளார். அப்போது பட்டிமன்றத்தில் உடன் பேசியவர் திரு வி க ஆவார்.
இதுபோன்று, சைவ சமயத்தில் நடைபெறும் சீர்கேடுகளைத் தண்டிக்கும் வண்ணம் கண்டன நூல்களை எழுதியும் பேசியும் வந்தமையால், ஆதினத் தலைவர்கள் மனதில் அவை கசப்பை ஏற்படுத்தி இருக்கலாம்.
அதனாலும் கூட இவரின் புகழும், நூல் சிறப்பும் தன் மதிப்பிலிருந்து குறைந்திருக்கலாம் என்பர்.
சைவ-சமயப் பணிகள்
வ.உ.சியின் நூலுக்குச் சிறப்புப் பாயிரம் எழுதிக் கொடுத்துள்ளார். இதனை வ.உ.சி அவர்கள் தமது நூலில் பெருமையாகக் கூறிக் கொண்டார்.
திருவொற்றியூர் பட்டினத்தார் கோயிலில், பட்டினத்தாரைச் சிறப்பிக்கும் வகையில், அவர் திருவுருவச் சிலையைத் தேரில் வைத்து ஏற்றி வீதிஉலா வரச் செய்யும் திருவிழா நிகழ்ச்சிகளைத் தொடக்கி வைத்தார். அதுவே இன்றுவரை தொடர்கிறது. அதற்கு மூலகாரணமாக இருந்தவர் இப்புலவர் ஆவார்.
சேக்கிழார் சுவாமிகளுக்கும் இதுபோல் விழா எடுத்து அவர் திருவுருவச் சிலையை யானை மேல் வைத்துத் திருவீதி உலா நடத்தித் திருவிழா நடத்தக் காரணமாக இருந்தார். இன்னும் தொடர்ந்து இவ்விழா நடக்கின்றது.
“மெய்கண்ட சந்தான சபை”- எனும் சபையைத் திரு.வி.க.வுடன் இணைந்து செயல்படுத்தினார்.
சைவ சித்தாந்த கழகம் நடத்தி வந்த ‘சித்தாந்தம்’ எனும் இதழைத் தமது மேற்பார்வையில் பலகாலம் தரமான சைவசமய இதழாக அதை நடத்தினார். அதில் ‘மணவழகு’ எனும் புனைப் பெயருடன் எழுதினார்.
பட்டினத்தார் பாடல்களுக்கு ‘ஞானார்த்த தீப உரை’ எனும் அழகிய உரையொன்றை எழுதியுள்ளார். பட்டினத்தாரின் பாடல்வரிகளைப் புரிந்து கொள்வதற்கு இவ்வுரையே பேருதவி செய்கிறது.
இந்து தேச சரித்திரத்தையும், இந்திய பீனல் கோடு சட்டத்தையும் முறையே 700, 500 விருத்தங்களால் பாடிப் பரதக் கண்ட இதிஹாசம், நீதிசாகரம் எனப்பெயரிட்டார்.
1877-ல் செங்கல்பட்டு சுந்தரவிநாயகர் பதிகம், ஏகாம்பரேசர் பதிகம், காமாட்சியம்மன் பதிகம் இயற்றினார்.
1878-ல் தசாவதனியார் முன்னிலையில், திருக்கழுக்குன்ற வேதமலை அடிவாரத்தில் அஷ்டாவதானம் செய்து காட்டினார்.
சைவ சித்தாந்தம் படித்துத் தெளிந்தவர் என்றாலும், பிற சமய மக்களை அன்புடன் அரவணைத்துக் கொண்டார். வேதாந்த நூல்கள் எழுதி, அதற்குப் பாயிரம் கேட்கும் போது இவர் அந்த நூல்களுக்குச் சிறப்பாகப் பாயிரங்கள் மற்றும் சில வேதாந்தக் கட்டுரைகளும் எழுதி கொடுத்திருக்கிறார்.
இவர் தமிழ் நாட்டில் சென்னையைச் சுற்றியுள்ள பல ஊர்களின் தலபுராணங்களை எழுதித் தந்துள்ளார். இத்தலபுராணங்கள் சென்னையின் பழமை மாண்பையும், தொண்டை மண்டலக் கோயில் மாண்பையும் வெளிப்படுத்துகின்றன.
சிறுவயதில் பாடல்கள் புனைய ஆரம்பித்த புலவர் பெருமகனார், தனிப்பாடல்கள் நிறைய எழுதி உள்ளார் என அறிய முடிகின்றது.
புலவரின் அறுபதாவது வயது தொடக்க விழாவில், இவரின் மாணவர்களால் உருவாக்கப்பட்ட நூலொன்றில், (சஷ்டிபூர்த்தி மகோற்சவப்பிரசுரம்) இப்பாடல்களில் குறிப்பிடத்தகுந்தவைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இவரால் எழுதப்பட்ட நூல்களின் பட்டியல்களும் அதிலுள்ளன. தமிழ்ப் புலமையை வெளிப்படுத்தும் வாழ்க்கை நிகழ்வுகளும் நினைவு கூர்ந்து பதிவு செய்யப்பட்டுள்ளன.
பதிகங்களைத் தவிர இப்புலவர் இயற்றிய நூல்கள் 40. பரிசோதித்து அச்சிட்ட நூல்கள் 96. அவ்வவ்வமயங்களிற் பாடிய சாத்துக் கவிகள் முதலியன 864 ஆகும்.
தல புராண நூல்கள்
பூவை கல்யாணசுந்தரம் அவர்கள், புராண நூல்களை அதிகமாக எழுதி உள்ளார். வசனநடையில் அவைகள் பெரும்பாலும் எழுதப்பட்டுள்ளன.
தலபுராண அமைப்பு சிதையாது, ஊர் குறித்த வரலாறுகள் செம்மையாக ஆய்வு செய்யப்பட்டுப் புராணமாக்கப்பட்டுள்ளன.
இவரைத் தொண்டைமண்டலத் தலபுராண வேந்தர் என்றும், தொண்டைமண்டல மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்றும் அழைக்கலாம் என்பர்.
இவர் எழுதிய தலபுராணங்கள் சார்ந்த திருத்தலங்கள்:
1. திருவான்மியூர்
2.வேளச்சேரி
3.திருவொற்றியூர்
4.திருவலிதாயம் (பாடி)
5.பூவிருந்தவல்லி
6.ஆண்டார்குப்பம்
7.திருவேற்காடு
8.திருப்பாலைவனம்
9.திருப்பாசூர்
10.திருக்கழுக்குன்றம்
11.திருமுல்லைவாயில்
12.குன்றத்தூர்
13.தக்கோலம்
14.செங்கல்பட்டு
15.காட்டாங்குளத்தூர்
16.திருகாளத்தி
பிற நூல்கள் மற்றும் உரைகள்
பூவை கல்யாணசுந்தரம் அவர்கள் எழுதிய பிறநூல்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
ஞானச் சித்த பிரபாவம்
சிவராத்திரி புராண வசனம்
நீதி சாகரம் (சட்டங்கள் சார்பான நூல்)
இந்து தேச சரித்திரம்
மகா வாக்கியம்
இருபா இருபது (உரை)
நெஞ்சு விடு தூது (உரை)
திருப்பாடல் திரட்டு (உரை)
மெய்கண்ட விருத்தியுரை (உரை)
ஞானார்த்த தீப உரை (உரை)
அனுமசந்தேசத்தின் பூர்வசரித்திரம்
அருணாசலபுராண வசனம்
கையறுநிலை
இடும்பன்கவசம், கடம்பன் கவசம், அகத்தியப்பஞ்சகம்
உருத்திராக்கமாலை
சித்தாந்தக் கட்டளை
ஞானசம்பந்தம் பதிப்பகம், 1975
சித்தாந்தம்
சிவத்துரோக கண்டன தூரீகரணம்
சிவராத்திரி புராண வசனம்
சீகாளத்தி புராணம்
செய்யுளிலக்கணம்
திருப்பாசூர்ப் புராணம் கத்தியரூபம்
திருவண்ணாமலை ஸ்தல புராணம், என்னும், அருணாசல புராண வசனம்
திருவொற்றியூர்க்கலம்பகம்
பகவத்கீதார்த்தபங்கம்
பாடியென வழங்கும் திருவலிதாயப் புராணம்
பூவாளூர்ப்புராணம்
பூவைச்சிங்காரசதகம்
வரமூர்த்திஷேத்திரமென்னும் அரியதுறைதலபுராணம்
இவை போன்று இன்னும் பல நூல்கள் எழுதியுள்ளார்.
அவைகள் காலத்தால் சேகரிக்கப்பட வேண்டியது மிகமுக்கியமான பணியாகும். பொதுஇலக்கிய வரலாறுகளிலும் இவர் குறித்த பதிவுகளைப் பதிவு செய்து அடுத்தத் தலைமுறைக்கு இவரின் பணிகளைக் கொண்டு செல்வோம்.
தமிழுக்காகப் பணி செய்த இன்னொரு தமிழ்ப்புலவரைக் காண அடுத்த வாரம் வரை காத்திருப்போம்.
புதையல் தேடுவோம்…
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com
முந்தையது
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!