பெண்கள் விடுதலைக் கும்மி பாடும் நாள் மார்ச் 8.
தமிழகப் பெண்கள் இன்று இந்திய அளவில் மற்ற மாநிலங்களைவிட கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் வாழ்க்கைத்தரத்திலும் முன்னேறி இருக்கின்றார்கள்.
அதற்குக் காரணம் பெண் விடுதலைக்காக நூறு ஆண்டுகளுக்கு முன்பே இங்கு குரல் ஒலிக்கத் துவங்கியது தான்.
“மாற்றத்தை உருவாக்கத் தைரியமாக இருங்கள்” என்பது தான் இந்த வருடத்தின் உலக பெண்கள் தினத்தின் குறிக்கோள்.
இந்தத் தைரியத்தை ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தமிழ்ப் பெண்களிடம் ஊட்டிய நம் தேசிய கவி பாரதி பாடும் ‘பெண்கள் விடுதலைக் கும்மி’ எப்படி இருக்கின்றது என்று பாருங்களேன்.
காப்பு
பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
பேசிக் களிப்பொடு நாம்பாடக்
கண்களி லேயொளி போல வுயிரில்
கலந்தொளிர் தெய்வம் நற் காப்பாமே.
பாட்டு
கும்மி யடி!தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி! (கும்மி)
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளேபெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார். (கும்மி)
மாட்டையடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை
வெட்டிவிட் டோமென்று கும்மியடி! (கும்மி)
நல்ல விலைகொண்டு நாயை விற்பார்,அந்த
நாயிடம் யோசனை கேட்பதுண்டோ?
கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
கூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார். (கும்மி)
கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம். (கும்மி)
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி! (கும்மி)
வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோ மென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம். (கும்மி)
காத லொருவனைக் கைப்பிடித்தே,அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச்செய்து வாழ்வமடி!
– சுப்ரமணிய பாரதியார்