அனிச்சமும் தோற்குமே அவளது குணத்தினில்
விரிச்சியும் உரைக்குமே அவளது வாக்கினில்
முதிர்ச்சியும் நிறையுமே அவளது வினையினில்
முயற்சியும் பிறக்குமே அவளது துணையினில்
அன்பினை ஊட்டிடுவாள் அவனியில் சிறந்திடுவாள்
ஆதாரம் ஆகிடுவாள் சேதாரம் கலைந்திடுவாள்
வாட்டத்தைப் போக்கிடுவாள் வாஞ்சையைக் கூட்டிடுவாள்
ஏற்றத்தைக் கொடுத்திடுவாள் ஏகாந்தத்தை நீக்கிடுவாள்
பேரின்பத்தின் பிறப்பிடமாய் பிறந்திட்ட பெண்மையே
பேராற்றல் உனக்குள்ளே இருப்பது உண்மையே
செவியினைத் தீண்டிடும் வார்த்தையும் மென்மையே
செம்மாந்து நிற்குமே மனதின் திண்மையே
அடிமை விலங்கினை உடைத்தெறியும் தாரகையே
தடாகத்தில் மிதந்திடும் செந்நிறத் தாமரையே
தடயமும் பதித்திடும் தன்னிகரற்ற காரிகையே
உன்புகழை உலகறிய கொட்டிடுவோம் பேரிகையே
பெண்ணியத்தைப் புரிந்திடுவோம் கண்ணியத்தைக் காத்திடுவோம்
புண்ணியமும் பெற்றிடுவோம் புடைசூழ நின்றிடுவோம்
அன்னியரை அகற்றிடுவோம் அன்பினையே விதைத்திடுவோம்
தன்னிறைவு அடைந்திடவே தன்னம்பிக்கை கொடுத்திடுவோம்
க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
கைபேசி: 6374836353
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!