பெண்மை பெண்மை
என்று யார் சொன்னது?
உலகின் மிகப்பெரிய
வலியைத்தாங்கும்
உத்தமி அல்லவா அவள்!
அவள் சிங்கப்பெண்ணாகவும்
சீறுவாள்
தேவைப்பட்டால்
கண்ணகியாகவும்
மாறுவாள்
கத்தியும் அரிவாளும்
தேவையில்லை அவளுக்கு
கண் எரிமலைகளும்
கை நகங்களும் போதும்
அவள் பாதுகாவலுக்கு.
அவளுக்கு
கதிரறுக்கவும் தெரியும்
கயவர்களை வேரறுக்கவும்
தெரியும்
பெண்ணே! விதியென்று
வீணாகிவிடாதே!
வீறுகொண்டு எழுந்துவிடு!
நீ ஒன்றும் விளக்கில் விழும்
விட்டில் பூச்சியல்ல
வீறுகொண்டெழும் பீனிக்ஸ்
பறவை நீ!
ஒப்புக்காக சொல்லவில்லை
தப்பாமல் கேள்தாயே நீயும்!
கருவில் சுமக்கும் தாயாக
மார்பில் சுமக்கும் மனைவியாக
மனதில் சுமக்கும் மகளாக
எப்போதும் ஆணை
சுமப்பவள் நீயே!
என்று புரியவை!
அசுரர்களை வதைக்க
ஆயிரமாயிரம் சாமிகள்
காளி என்றும், திரிசூலி
என்றும், நீலி என்றும்
உருவெடுப்பது நீயே
என்று புரியவை!
அம்மாவின் பனிக்குட நீரில்
பூத்த நெருப்புத் தாமரைநீயே
என்று புரியவை!
ஆண் வர்க்கமே!
பாரதியார் கவிதைகளையும்
பாரதிதாசன் கவிகளையும்
படிப்பதோடு நிறுத்தி விடாதீர்கள்!
திருவள்ளுவர் திருக்குறளை
தீண்டுவதோடு நிறுத்தி
விடாதீர்கள்!
பெண்மையை
பெண்மை யோடு சேர்த்துப்
படியுங்கள்
அப்போதுதான் அந்தப் பூவின்
மென்மையும் வண்மையும்
உங்களுக்குப் புரியும்
ரோகிணி
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!