பெண் என்றால் பேயும் இரங்கும் என்ற பழமொழியை கோவில் மண்டபத்தில் கூடியிருந்த ஆண்கள் கூட்டத்தில் பேசுவதை ஆந்தை அன்பு கேட்டது.
பழமொழிக்கான விளக்கத்தை அறியும் ஆவலில் அவர்கள் பேசுவதை தொடர்ந்து கேட்கலானது.
கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் “இந்தப் பழமொழி நமக்கு நேடியான பொருளைத் தான் விளக்குகிறது. அதாவது பெண்களைக் கண்டால் கொடிய குணம் படைத்த பேய்கூட இரக்கம் காட்டும் என்று கூறுகிறது” என்று கூறினார்.
அதற்கு கூட்டத்தில் இருந்த இளைஞர் “நான் இந்த பழமொழிக்கான பொருளை பற்றி வேறுவிதமாக கேள்விப்பட்டேன்.” என்றான்.
“அது என்னவென்றால், இன்றைய நவீன உலகில், ஆண் தான் கொண்டு வரும் சம்பளப் பணத்தை என்னவெல்லாம் செய்வது, எப்படியெல்லாம் செலவழிப்பது? என சிந்தித்துக் கொண்டே வீடு வருவான்.” என்றான்.
“வீட்டுக்கு வந்தவுடன் அவனது மனைவி அவனது சம்பளப் பணத்தை மொத்தமாக வாங்கிவைத்துக் கொண்டு அவனது எண்ணங்களில் மண் தூவி விடுவாளாம்.” என்றான்.
இதைத்தான் பெண் என்றால் (மனைவி என்றால்) பேயும் இரங்கும் (Pay – சம்பளம்) என்று சிலர் கூறுவதுண்டு.” என்று கூறி சிரித்தார்.
அதனைக் கேட்ட பெரியவர் “வேலைக்கு சென்று பொருள் கொண்டு வருவது ஆண்களின் கடமை. அவன் கொண்டு வரும் பொருளைக் கொண்டு இல்லறத்தை நல்லறமாக நடத்துவது பெண்ணின் கடமை என்று நமது பாரம்பரியம் கற்றுத் தந்துள்ளது. ஆகையால் நீங்கள் சொல்லும் பொருள் இதற்கு பொருந்தாது.” என்றார்.
உண்மையில் அக்காலத்தில் வேலைக்குச் செல்லும் ஆண்களில் பலர்; இரவில் மது அருந்திவிட்டு மனைவியை அடிப்பர். இது வாடிக்கையான நிகழ்ச்சியாகவே இருக்கும்.
பெண்களைக் கண்டால் கொடிய குணம் படைத்த பேய்கூட இரக்கம் காட்டும். இவ்வாறு இருக்கையில், குடித்து விட்டு மனைவியை அடிக்கும் கணவர்களின் செயல் தவறு என்பதற்காகவே இப்பழமொழியைக் கூறி வைத்தனர்.
“எனவே குடித்து விட்டு மனைவியை அடிக்கும் கணவரை திருத்துவதற்காக இந்தப் பழமொழி கூறப்பட்டது என நாம் இதனை எடுத்துக் கொள்ளலாம்” என்றார்.
“சரியான விளக்கம்” என்று இளைஞர் பெரியவரை பாராட்டினார்.
இதனைக் கேட்ட ஆந்தை அன்பு காட்டை நோக்கி பறந்தது. வட்டப்பாறையில் எல்லோரின் வருகைக்காவும் காத்திருந்தது.
அப்போது காக்கை கருங்காலன் வருவதை கவனித்த ஆந்தை அன்பு “வணக்கம் தாத்தா” என்றது.
அதனைக் கேட்ட காக்கை கருங்காலன் “வணக்கம் அன்பு” என்றது.
“தாத்தா பழமொழியை கூறுவதற்கு எனக்கு இன்று வாய்ப்பளிக்க வேண்டும்.” என்றது.
“சரி. எல்லோரும் வரட்டும். நீயே இன்றைக்கான பழமொழியைக் கூறு” என்றது காக்கை கருங்காலன்.
ஒவ்வொருவராக வட்டப்பாறையினை நோக்கி வரத் தொடங்கினர். எல்லோரும் வட்ட பாறையில் கூடியதும் காக்கை கருங்காலன் “என் அருமைக் குஞ்சுகளே, குட்டிகளே இன்றைக்கான பழமொழியை நமது ஆந்தை அன்பு கூறுவான்” என்றது.
ஆந்தை அன்பு எழுந்து “எல்லோருக்கும் வணக்கம். நான் இன்றைக்கு பெண் என்றால் பேயும் இரங்கும் என்ற பழமொழியைக் கேட்டேன்” என்றதுடன் பழமொழிக்கான விளக்கத்தையும் கூறியது.
காக்கை கருங்காலன் “ஆந்தை அன்பு கூறிய பழமொழி மற்றும் அதற்கான விளக்கம் புரிந்தது தானே. நாளை இன்னொரு பழமொழியை யாரேனும் கூறுங்கள். இப்பொழுது செல்லுங்கள்” என்று கூறி எல்லோரையும் வழி அனுப்பியது.
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)