“பெண் புத்தி பின் புத்தி என்ற பழமொழிக்கு ஏற்ப இப்படியா நடந்து கொள்வாய்” என்று இளம் வயது பெண்ணை நோக்கி முதியவர் ஒருவர் கூறுவதை மயில் மங்கம்மா கேட்டது.
காலையில் இருந்து பழமொழிக்காக அலைந்து திரிந்து இப்படி ஒரு பழமொழியையா கேட்க வேண்டும் என்று மனதிற்குள் வருந்தியது.
மிகவும் சோர்வாக காட்டில் எல்லோரும் கூடும் வட்டப்பாறையினை நோக்கி நடந்தது மயில் மங்கம்மா. அப்போது அங்கு எல்லோரும் கூடியிருந்தனர்.
காக்கை கருங்காலன் கூடியிருந்த எல்லோரையும் பார்த்து “என் அருமைச் செல்லங்களே.
இன்றுவரை எல்லோரும் அருமையான பழமொழிகளைக் கூறி அதற்கான விளக்கத்தையும் அறிந்து கொண்டீர்கள்.
இன்று யார் பழமொழியை கூறப்போகிறீர்கள்?” என ஆவலாகக் கேட்டது.
யாரும் எழுந்து பழமொழி பற்றிக் கூறவில்லை.
அதனைப் பார்த்தவுடன் காக்கை கருங்காலன் “யார் இன்றைக்கான பழமொழியைக் கூறப்போவது?” என்று கேட்டது.
யாரும் பழமொழியை கூற முன்வரவில்லை.
அப்போது மயில் மங்கம்மா தயங்கியவாறே எழுந்து “தாத்தா நான் இன்று ஒரு பழமொழியைக் கேட்டேன்.
ஆனால் அது பெண்களை இழிவுபடுத்துவது போல் உள்ளது.” என்று கூறியது.
அதனைக் கேட்ட காக்கை கருங்காலன் “தயங்காமல் கூறு. அது என்ன பழமொழி என்று” என்றது.
மயில் மங்கம்மா “நான் இன்றைக்கு பெண் புத்தி பின் புத்தி என்ற பழமொழியைக் கேட்டேன்.
இந்தப் பழமொழி ஏதோ பெண்மையை இழிவு படுத்துவதாக உள்ளதல்லவா?” என்றது.
அதனைக் கேட்டவுடன் காக்கை கருங்காலன் “பெண்மையை ஆறுகளாக, புவியாக, தாயாகப் பாவித்து தெய்வமாக மதித்து பெண்மையைப் போற்றும் இந்திய நாட்டில் உருவாகியிருக்கும் இப்பழமொழியின் உண்மைப் பொருள் பற்றி விளக்கிக் கூறுகிறேன்.
பெண் என்பவள் மிகுந்த புத்திசாலி தான்.
ஒளவையார் காக்கை பாடியனியார் போன்ற புலவர்கள் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் போன்ற வீரமங்கைகளையும் போன்று ஒவ்வொரு பெண்ணும் தனித்தன்மை வாய்ந்தவர்கள் தான்.
ஒரு குடும்பத்தில் கணவனுக்கு மந்திரியைப் போல இருந்து ஆலோசனைகள் சொல்லி துன்பங்களிலிருந்து காப்பவள் இந்தப் பெண்.
எனவே தான், பெண் என்பவள் பின் வரும் நிலையை முன்கூட்டியே எடுத்துச் செல்லும் வலிமை பெற்றவள் இவள் என்ற பொருளை நாம் அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக இந்தப் பழமொழி உண்டானது.
அதாவது பெண்புத்தியானது பின்னால் வரும் கஷ்டங்களை ஆண்களுக்கு உணர்த்தும் புத்தியாகும்.
இதை உணர்த்தவே பெண்புத்தி பின்புத்தி என்று கூறி வைத்தனர்.
இதன் பொருள் நாளடைவில் மாறி மருவி விட்டது. ஆதலால் இது பற்றி வருந்த வேண்டாம் மங்கம்மா” என்று காக்கை கருங்காலன் கூறியது.
அதனைக் கேட்ட மயில் மங்கம்மா “சரியான விளக்கத்தை கூறி என்னுடைய தவறான கணிப்பை மாற்றி விட்டீர்கள். ரெம்ப நன்றி தாத்தா” என்றது.
காக்கை கருங்காலன் “நானும் உன்னைப் போலவே முதலில் இப்பழமொழியின் பொருளை புரிந்த கொண்டேன்.
பின்னர் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு விளக்கி கூறியதை கேட்டபின் தெளிந்து அதனை என் மனதில் பதிய வைத்துக் கொண்டேன்.
சரி குழந்தைகளே நாளை வேறு ஒரு பழமொழியை யாரேனும் ஒருவர் தெரிந்து கொண்டு வந்து கூறுங்கள். இப்போது செல்லுங்கள்” என்று கூறி எல்லோரையும் வழி அனுப்பியது.
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)