பென்சிலைச் சாதாரணமாக எல்லோரும் ஈய பென்சில் (லெட் (lead) பென்சில்) என்றே அழைக்கிறோம். ஆனால் பென்சிலானாது கிராஃபைட் – ஒருவித களிமண் (clay) கலவையைக் கொண்டே செய்யப்படுகிறது.
கிராஃபைட் கண்டுபிடிப்பாளர்கள் 400 வருடங்களுக்கு முன்னால் ஈயத்தைப் போல ஒரு பொருள் வரைவதற்குப் பயன்பட்டதால் ஈய பென்சில் (lead pencil) எனச் சொல்லி வைத்தார்கள்.
ஒரு பென்சில் மூலம் 36.3 கிலோ மீட்டர் நீளத்திற்குக் கோடு வரையலாம். 17 முறை பென்சிலைச் சீவி கூர்மைப்படுத்தலாம். சுமார் 45,000 வார்த்தைகள் ஒரு பென்சிலைக் கொண்டு எழுதலாம்.
‘சிதார்’ (cedar) என்றொரு வகை மரத்தால் பென்சில் தயாரிக்கப்படுகிறது. மென்மையாகவும், உறுதியாகவும் இம்மரம் காணப்படுவதால் பென்சில் தயாரிக்க பயன்படுகிறது.
25 வருடங்கள் ஆன சிதார் மரங்களையே பென்சில் தயாரிப்புக்குப் பயன்படுத்துகிறார்கள். 100 வருடங்கள் ஆன சிதார் மரங்கள் மிகவும் சிறந்ததாம். நல்ல பென்சில்களுக்குச் சாதாரணமாக எட்டு முறை வண்ணம் பூசப்படுகிறது.
பென்சில் என்ற சொல் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்ததாகும். ‘கூர்மையான தூரிகை‘ என்று அதற்குப் பொருள். ரோமானியர்களே பென்சிலை எழுதுவதற்காக அதிகம் பயன்படுத்தினர்.
தற்போது பழக்கத்தில் இருந்து வரும் பென்சிலானது 1564-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகும்.
அந்த ஆண்டு இங்கிலாந்திலுள்ள ஓர் ‘ஓக்’ (Oak) மரமானது மிகப் பலத்த காற்றில் கீழே விழ, அம்மரத்தடியில் தூய்மையான கிராஃபைட் கிடைத்ததாம்.
செம்மறி ஆடு மேய்ப்பவர்கள் இந்த கிராஃபைட்டைக் கொண்டு ஆடுகளின் மேல் அடையாளங்காண குறியிடப் பயன்படுத்திக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
‘எபர்ஹார்டு பேபர்ஸ் மோங்கல்‘ தான் உலக அளவில் புகழ் வாய்ந்த பென்சிலாகும். 1894-ம் ஆண்டு இப்பென்சில் கண்டுபிடிக்கப்பட்டு ‘மோங்கல்’ எனப் பெயரிடப்பட்டது.
இன்று மிருதுவாக, கடினமாக, மிதமாக என்று கையாள்பவருக்கு ஏற்ப பலவித கிராஃபைட் பென்சில்கள் தயாரிக்கப்படுகின்றன. பென்சிலின் பின்புறம் எழுதியதை அழிக்க உதவும் ரப்பரைப் பொருத்தியது அமெரிக்கர்களே!

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!