பெரியோர்களின் பொன்மொழிகள்

எல்லோருடைய உபதேசங்களையும் காது கொடுத்துக் கேளுங்கள், ஒன்றை மட்டும் பின்பற்றுங்கள். எல்லோருக்கும் மரியாதை செய்யுங்கள், ஆனால் ஒருவரை மட்டும் பூஜியுங்கள். எல்லோரிடத்திலும் ஞானத்தை சேகரித்துக் கொள்ளுங்கள், ஆனால் ஒரு குருவினுடைய உபதேசத்தை மட்டும் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்.

யாருடைய நம்பிக்கையையும் குலைக்க முயலாதே. இயலுமானால் அவனுக்கு அதைவிட மேலான ஒன்றைக் கொடு. முடிந்தால் ஒரு மனிதனை அவன் நிற்கும் நிலையிலிருந்து மேல்நோக்கித்தள்ள முயற்சி செய், ஆனால் அவனிடம் உள்ளதை அழிக்காதே.

கடன் வாங்கிய தந்தை, கணவனுக்கு அடங்காத மனைவி, மூடனான பிள்ளை, பாசமில்லாத தாய் ஆகியவர்கள் தனக்குத்தானே பகைவர்களாவர்.

ஆபத்துக்கு உதவாத மகன், கொடும் பசியில் இல்லாத உணவு, தாகத்தைத் தீர்க்காத நீர், வறுமை அறியா மனைவி, கோபம் தணியாத மனிதன், ஆசான் வார்த்தை கேளாதவன், பாவத்தைத் தீர்க்காத தீர்த்தம் இவையாவுமே பயனில்லை.

தோல்விகளுக்கு தலை வணங்கினால், நாம் மூலையில் முடங்கிவிட்டால் நாம் பயணம் செய்யும் பாதையே மூடிக்கொள்ளும். அந்நிலையில் நாம் பாதையிலுள்ள தடைகளை அகற்றி முன்னேறுவதற்குப் பதிலாக நாமே மற்றவர்களுக்குத் தடைக் கல்லாக மாறிவிடுவோம்.

உங்களுக்குக் கோபம் வரும்பொழுது ஐந்து முறை உள்ளங்கையை இறுக்கத்துடன் மூடி, முழுவலிமையையும் செலுத்தி திறவுங்கள். சிறிது நேரத்தில் உங்கள் கோபம் எங்கு போயிற்று என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

பணமும், பட்டமும் மனிதனால் விரும்பப்படுகின்றன என்பதற்காக தீமையின் துணை கொண்டு அவற்றறைத் தேடிக் கொள்ளாதே. வறுமையும் தாழ்வும் மனிதரால் வெறுக்கப்படுகின்றன என்பதற்காகத் தீமையின் துணை கொண்டு அவற்றைப் போக்கிக் கொள்ளாதே.

துணிந்து நில்! உன்உள் உறைந்த மாபெரும் சக்தி வெளிப்படட்டும். அபரிமிதமான அந்த சக்தியின் வலிமையினால் நீ எதையும் சாதிக்க முடியும். நீ விரும்பிய எதையும் அடைய நீ திடமனத்துடன் உன் உள்மனத்துக்குத் திரும்பத் திரும்ப உன் விருப்பங்களைக் கட்டளையாக அவ்விருப்பம் நிறைவேறும் வரை கூறிவா! வெற்றி உன்னைத் தேடி வரும்.

இவை பெரியோர்களின் பொன்மொழிகள் ஆகும்.