முன்பு சீன தேசத்தில் சிங்-சாங்-சூங் என்பவர் கிராமம் ஒன்றில் வசித்து வந்தார். அவர் அக்கிராமத்தின் நீதிபதியாக இருந்து வந்தார். அவர் ஊர் வழக்குகளை விசாரித்து தீர்ப்புக் கூறுவார்.
அவரிடம் புதிய வழக்கு ஒன்று வந்தது.
அக்கிராமத்தில் அப்பாவியான விவசாயி ஒருவன் கனமான மூட்டை ஒன்றை தூக்கும்போது கைதவறி விட்டுவிட்டான்.
அம்மூட்டை அருகில் மேய்ந்து கொண்டிருந்த கோழிக்குஞ்சின் மீது விழுந்து விட்டது. இதனால் அக்கோழிக்குஞ்சு இறந்து விட்டது.
அக்கோழிக்குஞ்சின் விலை ஏழு பணம் மட்டும்தான். ஆனால் குஞ்சின் உரிமையாளன் அபராதமாக நூறு பணம் கேட்டான்.
விவசாயிக்கும், குஞ்சின் உரிமையாளனுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் வழக்காக மாறியது. வழக்கானது சிங்-சாங்-சூங்-யிடம் வந்தது.
அப்பாவி விவசாயி “நான் மூட்டையை தூக்கும்போது கைதவறி விட்டுவிட்டேன். அம்மூட்டை அருகே மேய்ந்து கொண்டிருந்த கோழிக்குஞ்சின் மேல் விழுந்து விட்டது. ஆதலால் குஞ்சு இறந்து விட்டது.
கோழிக்குஞ்சின் விலை வெறும் ஏழு பணம்தான். ஆனால் இவனே நூறு பணத்தை அபதாரமாகக் கேட்கிறான்.” என்று நடந்தவைகளைக் கூறினான்.
கோழிக்குஞ்சின் உரிமையாளன் “கோழிக்குஞ்சு உயிரோடு இருந்திருந்தால் வளர்ந்து இரண்டு ஆண்டுகளில் பெரிய கோழியாகி இருக்கும்.
பெரிய கோழியின் விலை நூறு பணம். ஆதலால் இரண்டு ஆண்டுகளில் அது நூறு பணம் விலைக்குப் போகும். எனவே விவசாயி நூறு பணத்தைத் தரவேண்டும்” என்று கூறினான்.
இருதரப்பு விவாதத்தையும் கேட்ட கிராமத்து நீதிபதி சிங்-சாங்-சூங் “கோழிக்குஞ்சின் உரிமையாளன் கூறுவது சரிதான். விவசாயி அபராதமாக அவனுக்கு நூறு பணம் தர வேண்டும்” என்று கூறினார்.
நீதிபதியின் தீர்ப்பினைக் கேட்டதும் அப்பாவி விவசாயி அழுதான். கோழிக்குஞ்சின் உரிமையாளன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான்.
நீதிபதி “இன்னும் முழுத்தீர்ப்பும் கூறப்படவில்லை. ஆதலால் இருவரும் தொடர்ந்து கேளுங்கள்.” என்று கூறினார்.
பின்னர் கோழிக்குஞ்சு உரிமையாளனிடம் “கோழிக்குஞ்சு உயிரோடு இருந்திருந்தால் எவ்வளவு தானியம் தின்னும்?” என்று கேட்டார்.
அதற்கு அவன் “வருடத்துக்கு அரை மூடை தின்னும்” என்று கூறினான்.
உடனே நீதிபதி “அப்படியானால் இரண்டு வருடங்களில் ஒரு மூட்டை தானியத்தைத் தின்று இருக்கும். எனவே ஒரு மூட்டை தானியத்தை நீ விவசாயிக்கு கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.
அதிர்ச்சியடைந்த கோழிக்குஞ்சின் உரிமையாளன் விவசாயிடம் ஏழு பணத்தை மட்டும் வாங்கிவிட்டு ஓடிவிட்டான்.
நீதிபதிகள் மனிதாபிமானம் மற்றும் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால் ஏழைகளுக்கு சரியான நீதி கிடைக்கும் என்பதை பெரிய கோழியின் விலை என்ற இக்கதையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!