காலை 8 மணிக்கே ஆட்கள் வேலைக்கு வந்து விட்டார்கள். மார்பிள் பாலிஷ் போடுகிறவர், உதவியாளர் மற்றும் சித்தாளாக ஒரு பெண்.
குளிக்க கிளம்பிய மருதநாயகம் மாடி வீட்டு சாவியை எடுத்துக் கொண்டு, வந்திருந்தவர்களை மாடிக்கு அழைத்துச் சென்றார்.
பாலிஷ் போடுகிறவர் சொன்னார். “சார், இன்று அதிகபட்ச வேலை முடிந்து விடும். இந்த சித்தாளுக்கு நாளை வேறு ஒரு வேலை இருக்கு. அதனால் இவங்க அக்கா நாளை சித்தாள் வேலைக்கு வருவாங்க.” என்றவர் பாலிஷ் மெஷினை ஓட்ட ஆரம்பித்தார்.
மருதநாயகம் தனது வீட்டுக்கு மேல் சிறிய போர்ஷன் ஒன்றை கட்ட ஆரம்பித்து, வேலைகள் யாவும் முடிந்து தரை வேலை மட்டும் நடந்து கொண்டிருந்தது.
பிரபல மார்பிள் வியாபாரி நடத்தும் கம்பெனி மூலம் பாலிஷ் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
கம்பெனியிலேயே மொத்தமாகப் பணம் செலுத்தி விட்டதால் பாலீஷ் போடுகிறவருக்கும், உதவியாளருக்கும் ஒவ்வொரு நாளும் சம்பளம் தர வேண்டியதில்லை. கம்பெனி கொடுத்து விடும்.
சித்தாளுக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு 450 ரூபாய் சம்பளம் தரவேண்டும் என ஒப்பந்தம் பேசப்பட்டு, சென்ற ஒருவார காலமாக வேலை நடைபெறுகிறது.
அன்று மாலை ஆறு மணியளவில் அன்றைய வேலைகள் முடிந்து கீழே இறங்கி வந்தார்கள். மார்பிள் பாலீஷ் போடுகிறவர் காலை வேலையைத் துவக்கி வைத்துவிட்டு, உதவியாளரைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு சென்றுவிட்ட படியால் உதவியாளும், சித்தாளும் மட்டும் கீழே வந்தனர்.
அன்றைய சம்பளம் ரூபாய் 450 சித்தாளுக்குத் தரவேண்டும். உள்ளே இருந்து வந்த மருதநாயகம், கையில் ஐநூறு ரூபாய் தாளை வைத்திருந்தார்.
சித்தாளிடம், “உங்ககிட்ட ஐம்பது ரூபாய் இருந்தா கொடும்மா. ஐநூறு ரூபாயா தர்ரேன். சில்லறை இல்லை.” என்றார்.
சித்தாள் சுருக்குப் பையை துழாவிய பின், “எங்கிட்டேயும் சில்லறை இல்லைங்க.” என்றார்.
“கொஞ்சம் இரு. சில்லறை மாற்றி வருகிறேன்.” என்றவர் சட்டையை மாட்டிக் கொண்டு வீட்டுக்கு அருகிலிருந்த கடைப் பக்கம் சென்றார்.
திரும்பி வந்தவர், “இரண்டு இருநூறும், ஒரு நூறுமாகத்தான் கிடைச்சது. உனக்கு இப்போ நானூற்று ஐம்பது ரூபாய் தரணுமே. எப்படி தர்றது?” என்றபடி யோசனை செய்ய ஆரம்பித்தார்.
உதவியாளர் “சார், ஐநூறு ரூபாயைக் கொடுங்க. நாளைக்கு இவங்க அக்காவுக்கு சம்பளம் தர்றபோது நானூறு கொடுத்தா போதும். கணக்கு சரியாயிடும்.” என்றார்.
மருதநாயகத்திற்கும் அது புரியாமல் இல்லை. இருந்தும் தயங்கினார். மனைவியிடம் ஏதாவது சில்லறைப் பணம் உள்ளதா? எனக் கேட்டுப் பார்த்தார். பலனில்லை. செய்வது அறியாது குழம்பிக் கொண்டிருந்தார்.
அப்போது சித்தாள் மருதநாயகத்திடம் “ஐயா, நானூறு ரூபா மட்டும் கொடுங்க. மீதி ஐம்பது ரூபாயை நாளை என் அக்காவிடம் சேர்த்து ஐநூறு ரூபாயாக் குடுங்க. நான் என் அக்காவிடமிருந்து வாங்கிக் கொள்கிறேன்” என்றாள்.
மருதநாயகத்திற்கு சுரீர் என்றது.
இன்று ஐநூறு ரூபாயைக் கொடுத்து நாளை கணக்கில் சரி செய்து கொள்ளத் தயங்கும் நான் எங்கே?
இன்று நானூறு ரூபாய் மட்டும் வாங்கிக் கொண்டு மீதி ஐம்பது ரூபாயை நாளை தன் அக்காவிடம் சேர்த்துக் கொடுக்கச் சொல்லும் இந்த சித்தாள் எங்கே?
படித்த தன்னைப் போன்றவர்களைவிட, படிக்காத சித்தாள் போன்ற பாமரர்களிடம் தான் பெருந்தன்மை கொள்ளை கொள்ளையாய் கொட்டிக் கிடக்கிறது என்பதை அனுபவபூர்வமாக அறிந்தபோது, மருதநாயகத்திற்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!