பெருமிழலைக் குறும்ப நாயனார் சுந்தரரை குருவாக ஏற்று மனம், மொழி, மெய்யால் வழிபட்டு சிவப்பேற்றினை அடைந்தவர்.
அடியார் பக்தியின் மூலம் இறைவனை அடையலாம் என்பதற்கு அவர் ஓர் உதாரணம்.
பெருமிழலைக் குறும்ப நாயனார் 63 நாயன்மார்கள் வரிசையில், இருபத்து இரண்டாவது நாயன்மாராக சுந்தரரால் போற்றப்படுகிறார்.
அவர் சோழ நாட்டில் இருந்த மிழலை நாட்டின் பெருமிழலையில் வசித்து வந்தார். பெருமிழலை தற்போது மயிலாடுதுறைக்கு அருகே அமைந்துள்ளது.
இறவாத பெருஞ்செல்வம்
பெருமிழலைக் குறும்ப நாயனார் சிவனிடத்தும் அவர் தம் அடியவர் இடத்தும் பேரன்பு கொண்டிருந்தார்.
‘அடியார்களுக்கு செய்யும் தொண்டு ஆண்டவனுக்கு செய்யும் தொண்டாகும்’ என்ற கருத்திற்கு ஏற்ப, சிவனடியார்களைக் கண்டதும் பணிந்து வணங்கி, அவர்தம் முகக்குறிப்பு அறிந்து அவர்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுப்பார்.
அவர்களை தம் இல்லத்திற்கு வரவேற்று திருவமுது படைப்பார். வேண்டிய பொருட்களை வழங்குவதோடு அவர்களின் ஏவல்களையும் இன்முகத்தோடு செய்வார். இதனால் சிவனடியார்கள் பலர் அவரை நாடி வந்தனர்.
‘இறைவனின் திருவருளே இறவாத பெருஞ்செல்வம்‘ என்பதை மனதில் கொண்டு, நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தை இடைவிடாது ஓதியும் இறைவனை உள்ளத்தில் எப்போதும் நினைத்த வண்ணமுமாகத் திகழ்ந்தார்.
சுந்தரரின் சீடர்
பெருமிழலைக் குறும்ப நாயனாருக்கு இறைவனின் திருத்தொண்டரான சுந்தர மூர்த்தி நாயனாரைப் பற்றி தெரிய வந்த போது, சுந்தரரின் இறைபக்தி அவரை ஆட்கொண்டது.
அதுமுதல் சுந்தரரை குருவாக ஏற்று சிவனை வழிபடுவதோடு, சுந்தரரின் பெருமையையும் போற்றினார்.
சுந்தர மூர்த்தி நாயனாரைப் பற்றி எண்ணியபடியே தியானம் செய்தார். இறையருள் பெற்ற சுந்தரரை பக்தி செய்தலே சிறந்த வழி என்பதில் உறுதியாக வாழ்ந்தார்.
இறைவனுடைய திருவைந்தெழுத்தையே எல்லாமாக எண்ணி தவம் புரிந்தார்.
அந்த உபாசனையின் பலத்தால் அவருக்கு அட்டமா சித்திகளான அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என அனைத்தும் கிடைத்தன.
தம்முடைய தியானத்தின் வலிமையால் சுந்தர மூர்த்தியாரை உணர்ந்து தினமும் வழிபட்டு வந்தார்.
அப்போது ஒருநாள் சுந்தரர் திருவஞ்சைக் களம் சென்று திருப்பதிகம் பாடி இறையருளால் அங்கிருந்தபடி திருக்கையிலாயம் செல்லப் போகிறார் என்பதை தியான உள்ளுணர்வின் மூலம் பெருமிழலைக் குறும்பர் அறிந்து கொண்டார்.
‘கண்ணின் கருவிழியைப் பிரிந்து கண்ணால் இருக்க இயலாதது போல, இறையடிரான சுந்தரர் இல்லாத இடத்தில் நான் வாழேன். சுந்தரர் திருக்கையிலையை அடையும் முன்னர் யாம் சிவபதம் பெற வேண்டும்’ என்பதை உறுதியாகக் கொண்டார்.
அப்போதே இறைவனை நினைத்து தியானத்தில் அமர்ந்து, பிரம நாடிகளின் வழியே கருத்தைச் செலுத்த, யோக நெறியால் பிரமரந்திரம் திறந்து ஆன்மா வெளியாகி இறையடியில் மகிழ்ந்திருந்தார்.
இவர் குருநாதருக்காக உயிர் துறந்த ஓர் அரிய பக்தர். குரு பக்தி கிடைப்பதற்கரிய சித்திகளைப் பெற உதவும் என்பதற்கு பெருமிழலை குறும்பனார் ஓர் உதாரணம்.
பெருமிழலைக் குறும்ப நாயனார் குருபூஜை ஆடி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பின்பற்றப்படுகிறது.
அடியார்களின் வழிபாட்டின் மூலம் இறைவனை அடையலாம் என்பதற்கு எடுத்துக்காட்டான பெருமிழலைக் குறும்ப நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘பெருமிழலை குறும்பற்கும் அடியேன்’ என்று போற்றுகிறார்.