பெற்றவள் வயிற்றைப் பார்ப்பாள் பெஞ்சாதி மடியைப் பார்ப்பாள் என்ற பழமொழியை பாட்டி ஒருவர் இரு பெண்களிடம் கூறுவதை பச்சைக்கிளி பரஞ்சோதி கேட்டது.
“ஆகா. இன்று நாம் கூறுவதற்கு ஒரு பழமொழி கிடைத்து விட்டது. இந்த பழமொழிக்கான விளக்கத்தையும் அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும்” என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டது பச்சைக்கிளி.
இரு பெண்களில் ஒருத்தி “பாட்டி இந்தப் பழமொழி ஏதோ பெற்ற தாயை பெருமையாகக் கருதுவதாக தோன்றுகிறதல்லவா?” என்று கேட்டாள்.
அதற்கு பாட்டி, “உண்மை தான். ஆனால் பெஞ்சாதியின் பெருமையையும் இப்பழமொழி கூறுகிறது.” என்று கூறினார்.
“சற்று விளக்கிக் கூறுங்கள் பாட்டி” என்று மற்றொரு பெண் கேட்டாள்.
அதற்கு பாட்டி “பெற்ற தாயானவள் எந்தச் சூழலிலும் பிள்ளைகளின் வளர்ச்சியையே பெரிதாக எண்ணுவாள்;. இதனை ஒரு கதை மூலம் விளக்குகிறேன்” என்றார்.
ஒரு இளம் தாய் நன்றாக அசந்து உறங்கிக் கொண்டிருந்தாளாம். அவளை எழுப்புவதற்காக அவளது கணவன் என்னவெல்லாமோ செய்துப் பார்த்தானாம்.
தட்டி எழுப்பிப் பார்த்தான் அவளுக்கு விழிப்பு உண்டாக வில்லையாம். தண்ணீர் தெளித்து எழுப்பியிருக்கிறான். அப்போதும் அவளுக்கு விழப்பு உண்டாக வில்லையாம்.
அவளுக்கு அருகில் உறங்கிக் கொண்டிருந்த அவர்களது குழந்தை மீது ஒரு மலரை எடுத்துப் போட்டானாம். உடனே அந்தப் பெண் பதறி எழுந்து தனது குழந்தையை எடுத்து வாரி அணைத்துக் கொண்டாளாம்.
இந்தக் கதை போலவே ஒவ்வொரு தாயும் தன் குழந்தை தனக்கு எந்த விதமான துன்பத்தை கொடுத்த போதும், தனது குழந்தையால் எவ்வித உதவியும் இல்லாத போதும் குழந்தையின் வளர்ச்சியை மட்டுமே தனது லட்சியமாக்க கொண்டு வாழ்வாள்.
இதை விளக்கவே பெற்றவள் வயிற்றை அதாவது பிள்ளையின் பசியை சரியாக உணர்வதோடு குழந்தையின் நலம் விரும்பியாகவும் செயல்படுவாள் என்ற பொருளில் தான் ‘பெற்றவள் வயிற்றை பார்ப்பாள்’ என்று கூறுகின்றனர்.
பழமொழியின் இரண்டாவது பாதியான ‘பெஞ்சாதி மடியைப் பார்ப்பாள்’ என்பதில் மடி என்பது பணம் முடிந்து வைக்கும் இடம் ஆகும்.
மனைவியானவள் தன் கணவன் எவ்வளவு கஷ்டப் பட்டாலும் சம்பாதித்து வந்தே ஆக வேண்டும் என்று கருதுவாள். அப்படி சம்பாதித்து வந்தால்தான் அவர்களின் குழந்தைகளைக் காப்பாற்ற முடியும்.
“பொருள் சம்பாதிப்பதே கணவனின் கடமை என்பதே மனைவியின் எண்ணமாகும். அதாவது கணவனின் முதலாவது கடமையை வலியுறுத்துபவள் மனைவி ஆவாள். இதைக் குறிக்கவே பெஞ்சாதி மடியை பார்ப்பாள் என்று கூறப்பட்டது.” என்று பாட்டி கூறினார்.
பச்சைக்கிளி பரஞ்சோதி பழமொழியையும் விளக்கத்தையும் கவனமாகக் கேட்டுவிட்டு ‘கீ..கீ..கீ..’ என்று கத்திக் கொண்டு அவ்விடத்தை விட்டு காட்டை நோக்கி பறந்தது.
காட்டில் வட்டப்பாறையில் வழக்கமாக கூடும் இடத்தில் எல்லோரும் கூடி இருந்தனர். அதனைக் கண்ட பச்சைக்கிளி வேகமாக அவ்விடத்திற்கு வந்தது.
அப்போது காக்கை கருங்காலன் எழுந்து “என் அருமைக் குழந்தைகளே உங்களில் யார் இன்றைக்கு பழமொழியைக் கூறப்போகிறீர்கள்” என்று கேட்டது.
காக்கையின் கேள்விக்கு யாரும் பதில் கூறவில்லை. பறந்து வந்ததால் தனக்கு ஏற்பட்ட படபடப்பு நீங்கியதும் பச்சைக்கிளி பரஞ்சோதி எழுந்து “தாத்தா நான் இன்றைக்கான பழமொழியைக் கூறுகிறேன்” என்றது.
“சரி சொல் பரஞ்சோதி. நீ இன்று என்ன பழமொழியைக் கேட்டறிந்தாய்” என்றது.
அதற்கு பச்சைக்கிளி “நான் இன்றைக்கு பெற்றவள் வயிற்றைப் பார்ப்பாள் பெஞ்சாதி மடியைப் பார்ப்பாள் என்ற பழமொழியையும், விளக்கத்தையும் கேட்டேன்” என்றது.
“சரி சொல்” காக்கை கருங்காலன்.
பச்சைக்கிளி பரஞ்சோதியும் தான் கேட்ட பழமொழியின் விளக்கத்தை நன்கு விளக்கிக் கூறியது.
அதனைக் கேட்ட காக்கை கருங்காலன் “குழந்தைகளே பரஞ்சோதி கூறிய பழமொழிக்கான விளக்கம் புரிந்தது தானே. நூம் நாளை மற்றொரு பழமொழி பற்றி அறிந்து கொள்வோம். இப்பொழுது அனைவரும் செல்லாம்” என்று கூறி எல்லோரையும் வழி அனுப்பியது.
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)