பெற்றோர்களுக்கு ஒரு கடிதம் – ஏ.ஆர்.முருகதாஸ்

பள்ளி மாணவர்களின் தற்கொலை தொடர்பாக பிரபல திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், பெற்றோர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதனைப் படித்துப் பாருங்கள்.

 

சமீப காலமாகப் பள்ளி மாணவர்களின் தற்கொலை மிகவும் மனவேதனை தருகிறது. இந்தத் தலைமுறை குழந்தைகள் மிகவும் ‘சென்ஸிட்டிவ்வாக’ இருக்கிறார்கள்.

லேசான கோபமோ சின்ன அதட்டலோகூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. மார்க் குறையும்போதும் கனவுகள் உடையும்போதும் நொறுங்கிப் போகிறார்கள்.

 

கனவுகள் உடைந்தால்?

குழந்தைகளுக்கு கல்வியும், மதிப்பெண்களும் முக்கியம்தான். இறுதியாண்டில் மார்க் குறைந்து அவர்கள் கனவு காணும் கல்லூரியில் இடம் கிடைக்காமல்போனால் முதலில் பெற்றோர்கள் உடைந்து போகக்கூடாது.

குழந்தைகளை வளர்க்க எவ்வளவோ வறுமைகளையும், கஷ்டங்களையும் அவர்களிடம் மறைக்கிறோம். அதுபோல அவர்களது கனவுகள் உடைந்தாலும் முதலில் பெற்றோர்கள் உறுதியாக இருக்கவேண்டும்.

மாணவர்களின் வாழ்க்கையே போய்விட்டதாக அவர்கள்முன் வருத்தப்படவோ, கோபப்படவோ கூடவே கூடாது!

சமீபத்தில் இறந்த மாணவன் முதலில் “சாகனும்போல இருக்கும்மா…”என்று சொல்லி இருக்கிறார். அதற்கு அவரது அம்மா “நீ செத்துட்டா நாங்க எல்லாரும் செத்திடுவோம்” என சொன்னதற்கு அந்த மாணவன் இனிமேல் அப்படி சொல்ல மாட்டேன் என சொல்லி இருக்கிறார்.

ஆனால் மறுநாளே தற்கொலை செய்துகொண்டார். மன உளைச்சல் அதிகமாக இருக்கும்போது வரும் இன்னொரு மாணவனின் தற்கொலை செய்தி இவருக்கும் மறுபடியும் வந்துவிடுகிறது.

 

மதிப்பெண் மட்டுமா வாழ்க்கை?

வாழ்க்கையில் ஜெயிக்க கல்வியும் மதிப்பெண்களும் மட்டும்தான் முக்கியமா?

என்ன ஒரு வேடிக்கையான எண்ணம் இது. யார் இந்த எண்ணத்தை இவர்களின் மனதிலே விதைத்தது? வாழ்க்கையில் ஜெயிக்கக் கல்வி ஒரு வழிகாட்டி; அவ்வளவுதான்.

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கை இல்லை. வாழ்க்கையை விளையாட்டுபோல சந்திக்க கற்றுக்கொடுப்போம்!

12 வருட கனவு உடையும்போது வலிக்கத்தான் செய்யும். ஆனால் அதை உடனே உதறிட துணையாக பெற்றோர் இருக்கவேண்டும்; உடன் பிறந்தோர் முன்வரவேண்டும்.

 

குழந்தைகளே… மாணவர்களே…

கல்லூரியில் இடம் உங்கள் 12 வருட கனவு; ஆனால் நீங்கள் உங்கள் பெற்றோரின் வாழ்வின் அர்த்தம். ஒரு சின்ன சறுக்கலுக்காக அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் வேதனை தரவேண்டுமா?

மதிப்பெண் குறைந்தாலும் வேறு பல வழிகளில் முன்னேறி உங்களது தம்பி தங்கைகளுக்கு நீங்கள் உதாரணமாக இருக்க வேண்டாமா?

நம் உயிர் அவ்வளவு சாதாரணமா?

மதிப்பெண் யார் போடுகிறார்கள்; கடவுளா?  நம்மைப் போன்ற இன்னொரு மனிதன்தானே. எங்கோ இருக்கும் மதிப்பெண் திருத்துபவாரால் நம் உயிரை பறிக்க முடிகிறதா..! நம் உயிர் அவ்வளவு சாதாரணமா?

மதிப்பெண் குறைவதற்கு என்ன காரணம் ஒரு புள்ளி, ஒரு கமா போட தவறினால் ஒரு மார்க், அரை மார்க் போய்விடும்.

கேள்விதாள்களை சரியாக உருவாக்க தெரியாத ஆசிரியர்களை நாம் பார்த்தது இல்லையா?

இந்த ஆசிரியர் மாணவனாக இருந்தபோது அதிக மதிப்பெண் எடுத்திருந்தால் ஆசிரியர் டாக்டராக அல்லவா ஆகியிருப்பார். அவர் மாணவராக இருந்தபோது அவரே எடுக்க முடியாததுதான் இந்த மதிப்பெண் என்பதுதானே உண்மை.

ஆசிரியர்களையும்,மதிப்பெண் போடுபவர்களையும் தவறாக குறிப்பிடவில்லை. நம் உயிரை எடுக்க ஆசிரியர் அல்ல, ஆண்டவனுக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது.

 

வாழ்க்கை மிக அழகானது

உலகம் மிகப்பெரியது. விளையாட்டு மைதானத்தில் இருக்கும் வீரனைப் போல வீரத்தோடு வாழ்க்கையை சந்திப்போம். வாழ்க்கையின் சின்ன சின்ன தோல்விகள்தானே சுவாரஸ்யம். அந்த போராட்டங்களை நெஞ்சை நிமிர்த்தி சந்திப்போம்.

நான் பள்ளியில் படிக்கும்போது பள்ளியின் இறுதி ஆண்டில் 50 பேர் படித்த பள்ளியின் 47வதாக ரேங்க் எடுத்திருக்கிறேன்.

என் கனவை மதிப்பெண்களும் தேர்வுகளும் முடிவு செய்ய நான் அனுமதிக்கவே இல்லை. மதிப்பெண்களுக்கான பதிலை நான் எழுதவில்லை; எனக்கான பாடத்தை எழுதினேன்.

தாழ்வு மனப்பான்மையைத் தன்னம்பிக்கையால் உடைப்போம்!

வாய்ப்புகளும் வாழ்க்கையும் இந்த வானம்போல் மிகப்பெரியது!

நம்மை பெற்றெடுத்த பெற்றோர்களுக்கு நல்ல மதிப்பெண் எடுத்து பெருமைபட செய்வோம்!

முடியாமல் போனால் தூக்கி எறிந்து நமக்கான வழியை நாம் உருவாக்குவோம்!

நம் குடும்பத்துக்கு நாம் தரும் மீளமுடியாத வலிதான் தற்கொலை! அதை தயவுசெய்து தந்துவிடாதீர்கள்!

உங்களின் முதல் கடமை

மாணவர்களே, நீங்கள் கருவாக இருந்தபோதே ஆண்குழந்தையாக இருந்தால் இந்த பெயர், பெண் குழந்தையாக இருந்தால் இந்த பெயர் என கனவுகண்ட உங்கள் தாய் தந்தையருக்கு நீங்கள் செய்யும் முதல் கடமை நீங்கள் டாக்டராக அல்லது இஞ்சினியராக மாறுவதல்ல!

மகனாகவோ மகளாகாவோ வாழ்நாள் முழுவதும் உங்கள் பெற்றோருடன் இருப்பதுதான் உங்களின் முதல் கடமை என்பதை மறக்கவே மறக்காதீர்கள்!

வாழ்க்கை ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு!

அன்புடன்
A.R. முருகதாஸ்

 

One Reply to “பெற்றோர்களுக்கு ஒரு கடிதம் – ஏ.ஆர்.முருகதாஸ்”

  1. இந்த சமூகம் மாணவர்களுக்குத் தரும் அந்தஸ்த்து மதிப்பெண்ணை வைத்துத் தான் என்பது எவ்வளவு அபத்தம். திறமையுடைய அருமை மாணவர்கள் அனைவரும் வாழ்விலே வெற்றி பெற்று விடுகிறார்களா என்றால் அது விவாதத்திற்கு உரிய ஒன்றாகிவிடும்.எனவே இது பெற்றோர் ஆசிரியர் மாணவர் ஏன்ற திரிவேணி சங்கமத்தில் விளைவது. வெற்றியென்ற வியூகம் அமைத்து தேர்வு களம் காண்பது ஆயத்தம் செய்வது எல்லாமே
    அதில் அடங்கிவிடுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: