பேசுவது கிளியா? – சிறுகதை

துர்காவிற்கு நாளை மறுநாள் பிறந்த நாளாம். எதிர்வீட்டிற்கு இரு மாதங்களுக்கு முன் தான் குடிவந்திருந்தார்கள்.

தான் தங்கியிருக்கும் மாடிப் போர்ஷனிலிருந்து காலை வேளையில் நியூஸ் பேப்பர் படிக்கிற சாக்கில் கோலமிட்டுக் கொண்டிருக்கும் துர்காவை ஓரக்கண்ணால் பார்த்து ரசிக்கும் வழக்கம் சென்ற ஒரு மாத காலமாக பாலனிடம் ஏற்பட்டிருந்தது.

வாசலில் கோலமிட வருவாள். ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் தான். அதற்குள் உள்ளே சென்று விடுவாள். அதன் பின் அவளைப் பார்க்க முடியாது. பிரம்மதேவன் படைப்பில் அவள் ஒரு வித்தியாசமான படைப்பு.

ஒரு நாள் காலையில் அவள் கோலமிட்டுக் கொண்டிருக்கையில் மாடியிலிருந்து பார்வையை எதேச்சையாய் வீச, அவளது கட்டழகில் சற்று தடுமாறிப் போனான் பாலன்.

அதன் பின் அவள் காலை வேளையில் வெளியே வரும் நேரத்திற்கு மிகச் சரியாக எழுந்து வந்து அவளைத் தரிசனம் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான்.

எதிர் வீட்டிலேயே அவள் இருந்தாலும், அவர்களுடன் அதிக பழக்கம் இல்லை. அவர்களும் யாருடனும் நெருங்கிப் பழகுவதில்லை. அவர்களைப் பற்றிய எந்த ஒரு விவரமும் பாலனுக்குத் தெரியாது.

காலை எட்டு மணிக்குக் கிளம்பி அலுவலகம் சென்றால் இரவு எட்டு மணிக்குத் தான் அவன் திரும்புவான்.

சென்ற ஒரு மாதமாகத் தான் பார்வைப் பரிமாறல்கள். பார்வையில் பேசிக்கொள்வதோடு சரி. அவள் வெளியே எங்கேயாவது தனியாகச் சென்றால் இவன் பின் தொடர்ந்து போகலாம். சந்திக்கலாம். பேசலாம்.

ஆனால் அவள் படி தாண்டா பத்தினியாக இருக்கிறாளே? வெறும் பார்வைகளிலிருந்து எதை, எப்படிப் புரிந்து கொள்வது? என்று பாலன் திகைத்துக் கொண்டிருந்தான்.

அவளுடைய பிறந்த நாள் சமாச்சாரம் கூட துர்காவின் தாயும், தந்தையும் இரவில் வீட்டின் வெளியே அமர்ந்து பேசிக் கொண்டதிலிருந்து தான் தெரியவந்தது பாலனுக்கு.

அவர்கள் மெதுவாகவே பேசிக் கொண்டிருந்தாலும், மாடியில் லைட்டை அணைத்துவிட்டு ஜன்னலோரம் ஈசிசேர் போட்டு சாய்த்து கொண்டிருந்தவனுக்கு அவர்கள் பேசுவது மிகத் தெளிவாகக் கேட்டது.

கோயிலுக்கு அவளை அழைத்துச் செல்வது பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருந்த போதுதான் அவளுக்கு நாளை மறுநாள் பிறந்த நாள் என்று பாலன் அறிந்து கொண்டான்.

நாளை மறுநாள் மாலை அவள் செல்லப்போகும் கோயிலுக்குத் தானும் சென்று ஏதாவது பிறந்த நாள் பரிசாக அவளுக்கு அளிக்க விரும்பினான்.

கூட்டத்தோடு கூட்டமாக பிரகாரத்தைச் சுற்றுகையில் அவள் கையில் மெதுவாக தனது பரிசைத் திணித்து விடவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான்.

என்ன பரிசு வழங்குவது?

இது வாங்கலாமா? அது வாங்கலாமா? என்றெல்லாம் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தவனுக்கு பளிச்சென மின்னல் போல் ஒரு ஐடியா உதித்தது.

இக்காலத்தில்தான் செல்போன்கள் சீரழிகிறதே, தீப்பெட்டி வாங்குவது போல் வாங்கி வைத்துக் கொள்கிறார்களே? பேசாமல் செல்போன் ஒன்றை இணைப்புடன் வாங்கி பரிசளித்து விடலாம்.

வீட்டில் அவள் மட்டும் தனியாக இருக்கும் சமயம் தன்னிடம் அவள் மனம் விட்டுப் பேச வசதியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.

பாலனுக்கு உடனே சந்தோஷம் தாங்க முடியவில்லை. மிகப்பிரமாதமாக தன் மூளை வேலை செய்வதாகத் தன் மீதே பெருமைப்பட்டுக் கொண்டான்.

திட்டமிட்டபடி துர்காவின் பிறந்தநாள் அன்று மாலை கோயிலுக்குச் சென்று அவளுக்காகக் காத்திருந்தான். எல்லாமே நினைத்தபடி நடந்தது. பெற்றோருடன் துர்கா வந்தாள்.

பிரார்த்தனை, அர்ச்சனை யாவும் முடிந்து பிரகாரம் சுற்ற ஆரம்பித்தார்கள். பாலனும் பின் தொடர்ந்தான்.

பிரகாரத்தின் திருப்பம் ஒன்றில் அவள் கையில் சின்னஞ்சிறு செல்போனை ஓர் கடிதத்துடன் அவளது கையில் திணித்து விட்டான்.

அனைத்தும் முடிந்து கோயில் வெளியே வந்ததும், துர்காவின் பெற்றோர் கடை ஒன்றில் ஒரு பொருளைப் பேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

துர்கா சற்றுத் தள்ளிச் சென்று பாலன் கையில் திணித்த கடிதத்தைப் பிரித்துப் படித்தாள்.

“என் இனிய துர்காவிற்கு, என் அன்பும் பரிசும்! வீட்டில் தனியாக இருக்கும் சமயம் என்னை அழைத்துப் பேசலாம். இதோ என் நம்பர். கிளி போன்ற உன் பேச்சைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கும் பாலன்.” என ரத்தினச் சுருக்கமாக எழுதி தனது போன் நம்பரையும் எழுதிக் கொடுத்திருந்தான் பாலன்.

மறுநாள் இரவு. பணி முடிந்து அவன் வீடு வந்து சேர்ந்து, மாடிப் போர்ஷனுக்கு படி ஏறிக் கொண்டிருக்கையில் அவனது வருகைக்காகவே வெகு நேரம் காத்திருந்த மாதிரி துர்கா வீட்டின் அருகே உள்ள சிறுவன், ஒருவன் வந்து நின்றான்.

“அங்கிள்! எதிர்வீட்டு துர்கா அக்கா இதை உங்களிடம் கொடுக்கச் சொன்னாங்க” எனக் கூறிவிட்டு ஓர் சிறிய அட்டைப் பெட்டியைக் கொடுக்க, ஆவலுடன் திறந்து பார்த்தான் பாலன்.

உள்ளே அவன் பரிசாக அளித்த செல்போன் அப்படியே இருந்தது. கூடவே ஓர் கடிதமும் அவனுடன் பேசியது.

“நீங்கள் அளித்த பரிசுக்கு நன்றி! ஆனால் உங்கள் பரிசு எனக்கு எந்த விதத்திலும் பயன்படாது. ஏனென்றால் கொடிய விஷக்காய்ச்சல் ஒன்றில் பேசும் சக்தியை இழந்த அபலை நான் – துர்கா.”

பி.கு: மேலும் எஸ்.எம்.எஸ். அனுப்புகிற அளவுக்கு எனக்கு படிப்பறிவும் இல்லை.

அதிர்ச்சியடைந்த பாலன், அடுத்த வினாடியே சுதாரித்துக் கொண்டான்.

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக எதிர்வீடு சென்று துர்காவின் பெற்றோரைப் பார்த்துப் பேசி, எப்படியாவது தன்னையே அவளுக்குப் பரிசாக அளிக்க அவன் அன்றிரவு கங்கணம் கட்டிக் கொண்டான்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.