பேபி உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி?

பேபி உருளைக்கிழங்கு வறுவல் மிகவும் சுவையான தொட்டுக்கறி வகை ஆகும். இது எல்லா விதமான சாதத்துடனும் உண்ணப் பொருத்தமானது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனை விரும்பி உண்பர். சுவையான இதனை விருந்தினர்களின் வருகையின் போது செய்து அசத்தலாம்.

இனி எளிய முறையில் சுவையான பேபி உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பேபி உருளைக்கிழங்கு – ½ கிலோ கிராம்

மஞ்சள் பொடி – ½ டீ ஸ்பூன்

மிளகாய் வற்றல் பொடி – ½ டீஸ்பூன்

சின்ன வெங்காயம் – 5 எண்ணம்

உப்பு – தேவையான அளவு

அரைத்த மசாலா பொடி – 3 டீ ஸ்பூன்

அரைத்த மசாலா பொடி தயாரிக்க

மல்லி விதை – 1½ டேபிள் ஸ்பூன்

சீரகம் – ¾ ஸ்பூன்

மிளகு – ½ ஸ்பூன்

வெந்தயம் – ¼ ஸ்பூன்

கடலை பருப்பு – 1 ஸ்பூன்

மிளகாய் வற்றல் – 2 எண்ணம் (பெரியது)

தாளிக்க

நல்ல எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் (சுமார் 50 மில்லி லிட்டர்)

சீரகம் – 1 டீஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை

உருளைக் கிழங்கினை குக்கரில் போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மூடி அடுப்பில் வைக்கவும்.

2 விசில்கள் வந்ததும் இறக்கி வைத்து, ஆவி அடங்கியவுடன் தோலை உரித்து இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

தோலை உரித்ததும்
இரண்டாக நறுக்கியதும்

வாணலியை அடுப்பில் வைத்து அதில் மல்லி விதை, சீரகம், மிளகு, வெந்தயம், கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வறுத்துக் கொள்ளவும்.

வறுத்த கலவை ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இந்த அரைத்த மசாலா பொடியிலிருந்து 1/2 கிலோ பேபி உருளைகிழங்கிற்கு மூன்று டீஸ்பூன் எடுத்து உபயோகிக்கவும்.

மீதமுள்ள பொடியை காற்று புகாத டப்பாவில் வைத்திருந்து, அடுத்த முறை உருளைக் கிழங்கு வறுவல் செய்யும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிச் சுத்தம் செய்து நேராக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சீரகம், கடுகு, பெருஞ்சீரகம் சேர்த்து தாளிதம் செய்ததும் பெருங்காயத்தைச் சேர்க்கவும்.

தாளிதம் செய்யும் போது
பெருங்காயத்தைச் சேர்க்கும் போது

பின்னர் அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் அதனுடன் உருளைக் கிழங்கைச் சேர்த்து ஒரு சேரக் கிளறவும்.

உருளைக்கிழங்கைச் சேர்த்ததும்

அதனுடன் மஞ்சள் பொடி, மிளகாய் வற்றல் பொடி, தேவையான உப்பு சேர்த்து கிளறி 2 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும்.

மஞ்சள், வற்றல் பொடி சேர்த்ததும்

இரண்டு நிமிடங்கள் கழித்து அரைத்த மசாலா பொடி சேர்த்து மூடியில்லாமல் 7 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைத்து இறக்கவும்.

அரைத்த மசாலா பொடி சேர்த்ததும்

சுவையான பேபி உருளைக்கிழங்கு வறுவல் தயார்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் பேபி உருளைக்கிழங்கிற்கு பதிலாக, சாதாரண உருளைக்கிழங்கிலும் மேற்கூறிய முறையில் உருளைக்கிழங்கு வறுவல் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.