பேபி கார்ன் பெப்பர் ஃபிரை அருமையான தொட்டுக் கறி ஆகும். எளிய முறையில் சுவையாக இதனை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பேபி கார்ன் – 200 கிராம்

குடை மிளகாய் – 75 கிராம்
பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (பெரியது)
இஞ்சி – சுண்டு விரல் அளவு
வெள்ளைப் பூண்டு – 4 எண்ணம் (நடுத்தரமானது)
நல்ல எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
அரைக்க

மிளகு – 1½ டீஸ்பூன்
சீரகம் – ¾ டீஸ்பூன்
பெருஞ்சீரகம் – ¾ டீஸ்பூன்
பேபி கார்ன் பெப்பர் ஃபிரை செய்முறை
பேபி கார்னை அது மூழ்கும் வரை தண்ணீர் எடுத்து கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதித்ததும் கீழே இறக்கி சுடுதண்ணீரில் பேபி கார்னைப் போட்டு 2 நிமிடம் மூடி வைக்கவும்.
பின்னர் பேபி கார்னை வெளியே எடுத்து சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
குடை மிளகாய், பெரிய வெங்காயம் ஆகியவற்றை சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
இஞ்சி மற்றும் வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி சிறுதுண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

மிளகு, சீரகம், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பொடியாக்கிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் நல்ல எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் இஞ்சி சேர்த்து வதக்கவும்.

½ நிமிடம் கழித்து வெள்ளைப் பூண்டினைச் சேர்த்து கிளறி அதனுடன் சதுரங்களாக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.


வெங்காயம் கண்ணாடியாக வெந்தவுடன் அதனுடன் நறுக்கிய குடை மிளகயைச் சேர்த்து வதக்கவும்.

ஒரு நிமிடம் கழித்து அதனுடன் நறுக்கிய பேபி கார்ன்னைச் சேர்த்து வதக்கவும்.

ஒரு நிமிடம் கழித்து அடுப்பினைச் சிம்மில் வைத்து மிளகுப் பொடி கலவைச் சேர்த்து இரு நிமிடங்கள் வதக்கி அடுப்பினை அணைத்து விடவும்.

சுவையான பேபி கார்ன் பெப்பர் ஃபிரை தயார்.
இதனை தயிர் சாதம், எலுமிச்சை சாதம், ரசம் சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.
குறிப்பு
காரம் அதிகம் விரும்புபவர்கள் மிளகின் அளவினை அதிகரித்துக் கொள்ளலாம்.
விரும்பமுள்ளவர்கள் தக்காளியை சேர்த்து வதக்கி ஃபிரை தயார் செய்யலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!