ஒரு நாள்
மரங்கள் பழங்களாக
விதைகளைத் தந்துவிட்டுத்
தூர நின்று பார்த்தன
மனிதர்கள் சேவகம் செய்கிறார்களாயென்று
யோசித்தன அவையெல்லாம்
நமக்காகக் கடவுள்
இவர்களைப் படைத்தாரென்று
அத்தனை விதைகளும் தின்னப்படாமல்
துப்பப் பட்டன
சில அல்ல பல
முளைத்து மீண்டும் பழங்களாக
விதைகளைத் தந்துவிட்டுத்
தூர நின்று பார்த்தன
மனிதர்கள் சேவகம் செய்கிறார்களாயென்று
இன்னொரு நாள்
நாய்கள் கூடிய கூட்டமொன்றில்
மனிதர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது
நமக்கு உணவளிக்கவே
இவர்கள் உழைக்கிறார்கள்
நாம் இருக்கவே
தாம் கட்டிய வீட்டையும்
தந்து விட்டுச் செல்கிறார்கள்
இவைகளும் யோசித்தன
நமக்காகக் கடவுள்
இவர்களைப் படைத்தாரென்று
இப்படியாய்
இப்படியாய்
நீண்டது உலகியல்
பேரண்டத்தின் சிறுதுளி
மரத்திற்கும் நாய்க்கும்
சேவகம் செய்பவன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!