பேரவா!

ஏ! தலையசைக்கும் தோட்டத்து வாழையிலைகளே!

நீங்கள் என் குரல் கேட்டு ‘உம்’ கொட்டுகிறீரா?

ஏ! மூக்கறைக் காற்றே!

என் சுயத்தின் பிம்பங்களை நகல் எடுத்து பரப்புங்களேன்!

ஓ! ஈர மண்ணே!

என் நெஞ்சின் சுரத்தை

நீ வந்து ஆற்றுப்படுத்தேன்!

ஓ! தூர மேகங்களே!

என் சலனங்களை

சலவை செய்ய உங்கள் வெண்தேகம் தாருங்கள்!

ஏ! கோல மாவு விற்பவனே!

உன் வியாபார ஒலிப்பெருக்கியோடு

என் கனவுகளை விற்றுத் தீரேன்!

என் நீட்சியான பக்கங்கள் முடிவற்று தொடர்கிறது

என்னதான் செய்யட்டும் கனவுகள் தொடர்கையில்?

கூரிட்டு நிற்கும் தென்னங் கீற்றின் முனைகள்

என் ஓலத்தை உரிந்து எழுதட்டும் கவிகளாய்!

ஒரு தனிக்காட்டின் இடையே தொடரும் நெடுஞ்சாலை என

நான் மட்டும் என் கனவுப் பயணத்தின் பாதையில்!

அரிவாள்களை சாணம் தீட்டும் அந்த கைகள்

என் ஏக்கங்களை சன்னமாக்கி செல்லட்டும்!

என் பேரிரைச்சல் பெரும் முழக்கம் ஆகட்டும்!

சிவநிறைச்செல்வி