பேரிக்காய் என அழைக்கப்பட்டாலும் இது உண்மையில் பழம் ஆகும். இனிப்பான முறுமுறுப்பான சதைப்பகுதியை இப்பழம் கொண்டுள்ளது. இப்பழம் ஏழைகளின் ஆப்பிள், நாட்டு ஆப்பிள் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இப்பழம் உலகம் எங்கும் பயன்படுத்தப்படுகிறது.
உலகில் சுமார் 3000 வகை பேரிக்காய்கள் காணப்படுகின்றன. இப்பழம் பொதுவாக ஆசிய வகை, ஐரோப்பிய வகை என இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆசிய வகை பேரிக்காய் மிருதுவாகவும், அறுவடைக்குப் பின்னும் உறுதியாகவும் இருக்கும். ஐரோப்பிய வகை பேரிக்காயானது மிகவும் மிருதுவாகவும், சாறு நிறைந்ததாகவும் இருக்கும்.
உலகில் இப்பழ உற்பத்தியில் சீனா முதல் இடத்தில் உள்ளது. உலகின் இப்பழ மொத்த உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கினை சீனா உற்பத்தி செய்கிறது. ஐரோப்பா, அர்ஜென்டினா, சிலி, அமெரிக்கா, நியூசிலாந்து, தென் கொரியா உள்ளிட உலக நாடுகளிலும் இப்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இப்பழமானது மரத்தில் இருந்து கிடைக்கிறது. இப்பழ மரமானது மிதவெப்ப மண்டலப் பகுதியில் நன்கு வளர்ந்து பலன் தருகிறது. இப்பழம் மணி வடிவிலோ, ஆப்பிள் வடிவிலோ காணப்படுகிறது. பெரும்பாலும் இப்பழத்தின் அடிப்பகுதி பருத்தும், மேல்புறம் செல்லச் செல்ல குறுகியும் காணப்படுகிறது.

இப்பழம் 5-6 அங்குல உயரத்தில் 200 கிராம் எடையில் காணப்படுகின்றது. இப்பழத்தின் வெளித்தோலானது வகையினைப் பொறுத்து பச்சை, ஆரஞ்சு கலந்த சிவப்பு, ஆரஞ்சு கலந்த மஞ்சள் ஆகிய வண்ணங்களில் மெல்லிதாகக் காணப்படுகிறது.
பழத்தின் உட்புறமானது மங்கிய வெள்ளை நிற முறுமுறுப்பான சதைப்பகுதியைக் கொண்டுள்ளது. பழத்தின் நடுப்பகுதி ஆப்பிள் போன்ற அமைப்பில் சிறிய விதைகளைக் கொண்டுள்ளது.
பேரிக்காயிலுள்ள சத்துக்கள்
பேரிக்காயில் விட்டமின் ஏ, சி, கே, இ, தயாமின் (பி1), ரிபோஃளோவின் (பி2), நியாசின்(பி3), பான்டோதெனிக் அமிலம் (பி5), பைரிடாக்ஸின் (பி6) போன்றவையும், ஃபோலேட்டுகள், கார்போஹைட்ரேட்டுகள், புரோட்டீன்கள், நார்சத்துக்கள், பொட்டாசியம், கால்சியம், காப்பர், இரும்பு சத்து, மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற தாதுஉப்புக்களும், பைப்டோ நியூட்ரியன்களும் காணப்படுகின்றன.
பேரிக்காயின் மருத்துவ பண்புகள்
நல்ல செரிமானத்திற்கு
இப்பழம் அதிக அளவு நார்சத்தைக் கொண்டுள்ளது. இப்பழம் ஒரு மனிதனின் அன்றாட நார்சத்து தேவையில் 20 முதல் 25 சதவீதம் வரை அளிக்கிறது. இப்பழத்தில் காணப்படும் நார்சத்து மனிதனில் செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது.
குடலானது உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை அதிக அளவு உறிஞ்ச இப்பழம் உதவிபுரிகிறது. மேலும் செரிக்காத மற்றும் குடலில் உள்ள நச்சுகளை கழிவாக வெளியேற்றவும் உதவுகிறது. இதனால் இப்பழத்தினை உண்டு மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை வராமல் தடுக்கலாம்.
மேலும் பெருங்குடல் புற்றுநோய் மற்றும் செரிமான உறுப்புகளில் நோய் ஏற்பாடாமல் இப்பழம் பாதுகாப்பு அளிக்கிறது.
உடல் எடையைக் குறைக்க
இப்பழமானது குறைந்த அளவு எரிசக்தியையும் அதிக நார்சத்தையும் கொண்டுள்ளது. 100 கிராம் எடையுள்ள இப்பழத்தில் 58 கலோரி அளவு எரிசக்தி உள்ளது.
எனவே இப்பழத்தினை உண்ணும்போது நாம் குறைந்த எரிசக்தியையும், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும், இப்பழ நார்சத்தினால் வயிறு நிரம்பிய உணர்வினையும் பெறலாம். உடல் எடையை குறைக்க விரும்புவேர் இப்பழத்தினை உண்டு பயன் பெறலாம்.
புற்றுநோய் வராமல் தடுக்க
இப்பழத்தில் ஆன்டிஆக்ஸிஜென்ட்களான விட்டமின் சி, விட்டமின் ஏ ஆகியவையும், பீட்டா கரோட்டீன், லுடீன், ஸீக்ஸாக்தைன் போன்ற பிளவனாய்டுகளும் காணப்படுகின்றன.
இவைகள் உடலில் புற்றுச்செல்கள் ஏற்படா வண்ணம் பாதுகாக்கின்றன. இப்பழமானது மார்பகம், குடல்கள், நுரையீரல், இனப்பெருக்க உறுப்புகள் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கின்றது.
நோய் தடுப்பாற்றல் அதிகரிக்க
இப்பழத்தில் காணப்படும் ஆன்டிஆக்ஸிஜென்ட்கள் உடலுக்கு நோய் தடுப்பாற்றலை வழங்குகின்றன. இப்பழத்தில் காணப்படும் விட்டமின் சி-யானது நோயைத் தடுக்கும் வெள்ளை இரத்த அணுக்கள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இப்பழத்தினை உண்டு நோய் எதிர்ப்பாற்றலைப் பெறலாம்.
காயங்களை குணப்படுத்த மற்றும் திசுக்களின் குறைபாடுகளை சரிசெய்ய
இப்பழத்தில் காணப்படும் விட்டமின் சி-யானது உடலின் வளர்சிதை மாற்றம் சரியாக நடைபெற உதவுகிறது. இப்பழத்தில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் காயங்கள் விரைவாக குணடைய உதவுகிறது. மேலும் திசுக்களின் குறைபாடுகளைச் சரிசெய்யவும் இப்பழத்தில் உள்ள விட்டமின் சி உதவுகிறது.
இரத்த சிவப்பணு உற்பத்தியை அதிகரிக்க
இப்பழத்தில் காணப்படும் இரும்புச்சத்து மற்றும் காப்பர் ஆகியவை ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கின்றன. எனவே இப்பழத்தினை உண்டு அனீமியா, உடல் சோர்வு, தசை பலவீனம், மந்தமான அறிவாற்றல், உறுப்பு செயலிழப்பு போன்ற இரத்த சிவப்பணுக்கள் குறைபாட்டால் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கலாம்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு
ஃபோலிக் அமிலமானது கருவில் இருக்கும் குழந்தைக்கு குறைபாடுகள் இன்றி பிறப்பதற்கு அவசியமானது. இப்பழத்தில் உள்ள ஃபோலேட்டுகள் கருவில் இருக்கும் குழந்தைக்குத் தேவையான ஃபோலிக் அமிலத்தை வழங்குகின்றன.
எனவே கர்பிணிகள் இப்பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்து குழந்தையை பிறப்பு குறைபாடுகள் ஏதும் இன்றி ஆரோக்கியமாகப் பெறலாம்.
வலுவான எலும்புகளைப் பெற
இப்பழத்தில் வலுவான எலும்புகளைப் பெறத் தேவையான கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், காப்பர் போன்றவை உள்ளன. எனவே இப்பழத்தினை உண்டு தாதுஉப்புகள் குறைபாடுகளால் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.
கேசம், சருமம் மற்றும் கண்கள் பராமரிப்பிற்கு
இப்பழத்தில் காணப்படும் விட்டமின் ஏ சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், பருக்கள் ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கிறது. இப்பழம் கேசம் உதிர்வதை தடுக்கிறது. கண்களில் கண்புரை நோய் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.
பேரிக்காயினை வாங்கும் முறை
இப்பழமானது ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் அதிக அளவு கிடைக்கிறது. இப்பழத்தினைத் தேர்வு செய்யும்போது புதிதாகவும், பளபளப்பாகவும், மேற்புறத்தில் காயங்கள், தழும்புகள் ஏதும் இன்றி இருக்க வேண்டும். மேற்புறத்தோலின் நிறமானது ஒரே சீராக இருக்க வேண்டும்.
இப்பழத்தின் மேற்புறத்தில் காம்பினை ஒட்டிய பகுதியில் லேசாக விரால் அழுத்தும்போது மென்மையாக உணர்ந்தால் இப்பழம் உடனடியாக உண்ண ஏற்றது. பழுக்காத இப்பழங்களை தனியே எடுத்து அறையின் வெப்பநிலையில் வைத்தால் இது பழுத்து விடும். பழுத்த இப்பழங்களை குளிர்பதனப்பெட்டியில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
இப்பழத்தினை உண்ணும்போது முதலில் நன்கு தண்ணீரில் கழுவி இருபாகங்களாக நறுக்கி தோலுடன் கடித்து சாப்பிட வேண்டும். இப்பழத்தினை நறுக்கிய சிறிது நேரத்தில் சதைப்பகுதி கறுத்து விடும். இதனைத் தடுக்க எலுமிச்சை சாற்றினை நறுக்கிய பழப்பகுதியில் தடவலாம்.
இப்பழமானது பழச்சாறு, பழக்கூழ், ஜாம் போன்றவை தயாரிக்க பயன்படுகிறது. பதப்படுத்தப்பட்ட இப்பழத்துண்டுகள் குழந்தைகளின் உணவில் சேர்க்கப்படுகிறது.
தினமும் ஒரு பேரிக்காய் என்ற அளவில் அடிக்கடி இப்பழத்தினை உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.
– வ.முனீஸ்வரன்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!