பேரின்பம் அடையும் வழி பற்றி பெரும்பாலோனோர் எண்ணுகின்றனர். அதற்கான வழிகளை இக்கதை விளக்குகிறது. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
வெள்ளூரில் பரமானந்தம் என்ற ஒரு செல்வந்தர் வசித்து வந்தார். அவருக்கு ஏராளமான சொத்துக்கள், நகைகள், பணம் இருந்தது. அவருக்கு வயதாகிக் கொண்டே வந்தது.
அவருக்கு தான் இறப்பதற்கு முன் பேரின்பத்தை அடைய வேண்டும் என்று விரும்பினார்.
அதனால் தன் கண்ணில் படுபவர்கள் எல்லோரிடமும் பேரின்பம் அடையும் வழியைப் பற்றித் தெரியுமா என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அதற்கு தெரியாது என்றே பெரும்பாலோனர் கூறினர்.
ஒரு நாள் வெள்ளூருக்கு துறவி ஒருவர் வந்தார்.
துறவியிடம் பரமானந்தம் “சுவாமி, தங்களுக்கு பேரின்பம் அடையும் வழி பற்றி தெரியுமா?” என்று கேட்டார்.
அதற்கு அத்துறவி “நான் பேரின்பம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதனை அடையும் வழி ஏதும் தெரியாது. அருகில் இருக்கும் நரிப்பையூரில் ஞானி ஒருவர் உள்ளார். அவரிடம் சென்று கேட்டால் பேரின்பம் அடையும் வழி தெரியும்.” என்றார்.
உடனே பரமானந்தம் தன்னிடம் இருக்கும் நகை மற்றும் பணத்தினை மூட்டையாகக் கட்டிக் கொண்டு நரிப்பையூருக்குச் சென்றார். அங்கே துறவி சொன்ன ஞானியைச் சந்தித்தார்.
ஞானியின் காலடியில் தான் கொண்டு வந்த நகை மூட்டையை வைத்துவிட்டு “ஐயா, எனக்கு வயதாகிக் கொண்டே வருகிறது. நான் இறப்பதற்குள் பேரின்பத்தை அடைய வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான வழியைத் தாங்கள் கூறவேண்டும்.” என்று மிகவும் ஆவலுடன் கேட்டார் பரமானந்தம்.
அதனைக் கேட்டதும் ஞானி ஏதும் கூறவில்லை.
பின்னர் ஞானி திடீரென்று தன்னுடைய காலடியில் இருந்த பணம் மற்றும் நகை மூட்டையைத் தூக்கிக் கொண்டு ஓடத் தொடங்கினார்.
அதனைக் கண்டதும் பரமானந்தம் “ஐயோ, நான் வாழ்நாள் முழுவதும் சேர்த்து வைத்த செல்வத்தை தூக்கிக் கொண்டு ஓடுகிறார் ஞானி. இவரெல்லாம் ஞானியா? யாராவது என்னுடைய பொருட்களை மீட்டுத் தாருங்களேன்” என்று கத்தினார்.
பரமானந்தத்தின் கூக்குரலைக் கேட்டதும் அருகில் இருந்த எல்லோரும் ஞானியை விரட்டி ஓடினர். ஆனால் ஞானியை பிடிக்க இயலவில்லை.
சிறிது நேரத்தில் எல்லோரும் ஞானி இருந்த இடத்திற்கு களைத்து திரும்பினர்.
அங்கே பொன் மூட்டை இருந்த இடத்தில் இருந்தது. அருகில் ஞானி புன்னகைத்துக் கொண்டிருந்தார்.
பரமானந்தத்தை நோக்கிய ஞானி “நீ உன்னுடைய பொருளை தொலைத்துவிட்டு, மீண்டும் அதனைப் பெறும்போது எவ்வளவு ஆனந்தம் கொள்கிறாயோ, அதனைப் போல பலமடங்கு ஆனந்தமாவதற்கு பெயர்தான் பேரானந்தம். பேரின்பம்.
நீங்கள் எல்லாம் உங்களின் ஆன்மாவின் மையநிலையைத் தொலைத்துவிட்டீர்கள். அதனைத் தேடிக் கண்டுபிடியுங்கள். அப்போதே பேரானந்தத்ததைப் பெறுவீர்கள்.” என்று கூறினார்.
பேரானந்தம் என்பது வெளியில் இல்லை. அது நமக்குள்தான் இருக்கிறது. அதனை கண்டுபிடித்தால் பேரானந்தத்தை அடையலாம்.
மறுமொழி இடவும்