பேரீச்சம் பழம் ஜூஸ் ஆரோக்கியமான ஆற்றல் கொடுக்கக்கூடிய ஜூஸ் ஆகும். இது வளரும் குழந்தைகள் உட்பட எல்லோருக்கும் ஏற்றது.
இதனைத் தயார் செய்ய வெள்ளைச் சர்க்கரை மற்றும் பால் சேர்க்கத் தேவையில்லை. எனவே இது ‘குளுட்டான்’ ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் ஏற்றது.
இதனை எளிதாகவும் விரைவாகவும் செய்து முடிக்கலாம். காலை மற்றும் மாலை வேளைகளில் இதனைத் தயார் செய்து அருந்தலாம்.
விரத நாட்களிலும் இது அருந்துவதற்கு ஏற்றது. நல்ல பசியை தாங்கும் இயல்புடைய இதனை அருந்தி சிறிது நேரம் கழித்து உணவை உட்கொள்ளலாம்.
உடல் மெலிய டயட்டில் இருப்பவர்களுக்கு இது ஆரோக்கியத்தோடு ஆற்றலையும் வழங்குகிறது. எனவே டயட்டில் இருப்பவர்களும் இதனை தயார் செய்து அருந்தி பயன் பெறலாம்.
இனி எளிய முறையில் சுவையான பேரீச்சம் பழம் ஜூஸ் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
இதில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் ஒரு டம்ளர் ஜூஸ் செய்ய தேவையானவை. ஜூஸின் தேவைக்கு ஏற்ப பொருட்களின் அளவுகளை அதிகரித்துக் கொள்ளலாம்.
பேரீச்சம் பழம் – 4 (மீடியம் சைஸ்)
பாதாம் பருப்பு – 4 எண்ணம்
ஏலக்காய் – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)
தேங்காய் – 1 சில் (2 இன்ச் அகலம் 3 இன்ச் நீளம் உள்ளது)
தேன் – 1 ஸ்பூன் (விரும்பினால்)
செய்முறை
பேரீச்சம் பழத்தை நன்கு அலசி விதைகளை நீக்கி சிறுதுண்டுகளாகப் பிய்த்துக் கொள்ளவும்.
பின்னர் அதனை அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி ஆறு மணி நேரம் ஊற விடவும்.
பாதாம் பருப்பினை அலசி கால் டம்ளருக்கும் சற்று அதிகமாக நீர் ஊற்றி ஆறு மணி நேரம் ஊற விடவும்.
ஆறு மணி நேரம் கழித்து பாதாம் பருப்பு மற்றும் ஏலக்காயை சேர்த்து அரைக்கவும்.
அதனுடன் தேங்காய் மற்றும் ஊற வைத்த தண்ணீர் சேர்த்து விழுதாக்கிக் கொள்ளவும்.
அதனுடன் ஊற வைத்த பேரீச்சம் பழத்தை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் இதனுடன் ஊற வைத்த தண்ணீர் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
சுவையான பேரீச்சம் பழம் ஜூஸ் தயார்.
விருப்பமுள்ளவர்கள் பேரீச்சம் பழம் ஒன்றினை பிய்த்து இதில் சேர்த்து அருந்தலாம்.
குறிப்பு
ஜூஸிற்கு புதிதான தேங்காய் சேர்க்கவும்.
விருப்பமுள்ளவர்கள் பாதாமுடன் முந்திரியும் சேர்த்து ஊற வைத்து அரைத்து ஜூஸ் தயார் செய்யலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!