பேரீச்சை

பேரீச்சை உலர் பழவகைகளுள் முக்கியமான ஒன்று. இதன் மருத்துவ குணங்கள் மற்றும் தனிப்பட்ட சுவையின் காரணமாக மக்களால் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.

சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பே இப்பயிர் பயிர் செய்யப்பட்டிருக்கிறது. இதன் தாயகம் நைல் நதி பாயும் எகிப்து மற்றும் மெசபடோமியா என்றழைக்கப்பட்ட தற்போதைய ஈராக் என்று கருதப்படுகிறது.

தற்போது வெப்ப மற்றும் துணை வெப்ப மண்டலங்களில் உள்ள நாடுகளில் உணவுப் பொருளாகப் பயிர் செய்யப்படுகிறது. முகமதியர்கள் விரதத்தினை இப்பழத்தினை உண்டும், தண்ணீர் அருந்தியும் முடிக்கின்றனர்.

பேரீச்சை மரவகைச் சேர்ந்த தாவரத்திலிருந்து கிடைக்கிறது. இதன் மரமானது 70-75 அடி உயரத்தில் ஒரே தண்டில் தடிமனான பல கிளைகளுடன் காணப்படுகிறது.

இதன் ஓலைகள் 13-20 அடி நீளத்தில் உள்ளது. ஓர் ஓலையில் 150 ஈர்க்குகள் வரை காணப்படும். ஒவ்வொரு ஈர்க்கும் 30 செமீ நீளம் வளரும். மரத்தின் உச்சியானது 6 முதல் 10 மீட்டர் வரை இருக்கும்.

ஒவ்வொரு பழமும் அதன் அளவையும் வகையையும் பொறுத்து 20-70 கலோரி எரிசக்தியினைக் கொண்டிருக்கும்.

பேரீச்சை உள்ளோட்டு பழ வகையைச் சார்ந்தது. இப்பழத்தின் வெளிப்புறம் சதைப்பகுதியையும், உட்புறம் கடினமான கொட்டைப் பகுதியையும் கொண்டுள்ளது. இப்பழம் 3-7 செமீ உயரமும், 2-3 செமீ விட்டமும் கொண்ட நீண்ட உருளை வடிவில் காணப்படுகிறது.

பேரீட்சை பழுக்கும்போது வகையினைப் பொறுத்து பொன்னிற மஞ்சள், ஆம்பர், ஆழமான பழுப்பு, சிவப்பு ஆகிய வண்ணங்களில் காணப்படுகிறது.

முக்கிய பேரீட்சை வகைகளான அமீர்கஜ், சைடி, ஹாட்ராவி, மெட்ஜூல் ஆகியவை அதன் தனிப்பட்ட சுவை, மணம், உயர்ந்த தரம் ஆகியவற்றிற்காக விரும்பப்படுகின்றன. இப்பழமானது அப்படியேவோ, பதப்படுத்தப்பட்டோ உண்ணப்படுகின்றது.

 

பேரீச்சையில் உள்ள சத்துக்கள்

இப்பழத்தில் எளிய சர்க்கரை மூலக்கூறுகளான சுக்ரோஸ், குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் விட்டமின்கள் ஏ, பைரிடாக்ஸின் (பி6), ரிபோஃப்ளோவின்(பி2), தயாமின்(பி1), நியாசின் (பி3), பான்தோதொனிக் அமிலம் (பி5), போலேட்டுகள் போன்றவைகளும், தாதுஉப்புக்களான பொட்டாசியம், கால்சியம், காப்பர், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகச்சத்து, செலீனியம் போன்றவையும், கார்போஹைட்ரேட், புரதம், நார்சத்து, பீட்டா கரோட்டின்கள், லுடீன்-ஸீக்ஸாக்தைன் போன்றவைகளும் காணப்படுகின்றன.

 

பேரீச்சையின் மருத்துவப்பண்புகள்

நல்ல செரிமானம் மற்றும் மலச்சிக்கல் தீர

பொதுவாக பழுப்பு நிறப்பழங்கள் செரிமானத்தை நன்கு நடைபெறச் செய்கின்றன. அவ்வகையில் இப்பழத்தில் காணப்படும் கரையும் மற்றும் கரையாத நார்சத்தானது செரிமானப் பாதையை சுத்தம் செய்வதுடன், குடலினை நன்கு செயல்படச் செய்கிறது. மேலும் நார்சத்து உணவு நன்கு செரிக்க துணைபுரிகிறது.

இரண்டு பேரீட்சம் பழங்களை முதல் நாள் இரவில் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் பழம் மற்றும் தண்ணீரை அருந்தினால் செரிமானம் நன்கு நடைபெறுவதுடன் மலச்சிக்கலும் தீரும்.

 

அனீமியா நோய் குணமாக

இப்பழத்தில் இரும்புச் சத்து அதிகளவு காணப்படுகிறது. எனவே இரும்புச் சத்து குறைவினால் ஏற்படும் அனீமியா நோய்க்கு இப்பழம் மிகச்சிறந்த மருந்தாகும். இப்பழத்தினை உண்டு ரத்த உற்பத்தியைப் பெருக்கி அனீமியாவால் ஏற்படும் சோர்வு மற்றும் பலவீனத்தை சரி செய்யலாம்.

 

வலிமையான தசையைப் பெற

இப்பழத்தில் காணப்படும் புரதச் சத்து வலிமையான தசைகள் உருவாதற்கு முக்கியமானதாக உள்ளது. எனவே உடற்பயிற்சி செய்பவர்கள் தினமும் இரண்டு பேரீச்சம் பழங்களை உணவில் சேர்த்துக் கொண்டு வலிமையான தசையைப் பெறலாம்.

 

எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு

இப்பழத்தில் காணப்படும் தாதுப்பொருட்களான செலீனியம், மாங்கனீஸ், காப்பர், மெக்னீசியம், கால்சியம் போன்றவை எலும்புகளைப் பலப்படுத்துகின்றன. எலும்பு பலவீனத்தால் ஏற்படும் மூட்டு வாதம், கீல்வாதம் போன்ற நோய்களைக் குணப்படுத்துகின்றன.

இப்பழத்தில் காணப்படும் மாங்கனீஸ் சத்து உடல் உட்கிரகிக்கும் கால்சியத்தின் அளவினை அதிகரிக்கிறது. எனவே இப்பழத்தினை உண்டு பற்கள் மற்றும் எலும்புகளைப் பலமடையச் செய்யலாம்.

 

உறுதியான நரம்பு மண்டலத்திற்கு

இப்பழத்தில் காணப்படும் சோடியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றன. தினசரி உணவில் இப்பழத்தினை அளவோடு எடுத்துக் கொண்டால் நரம்பு மண்டலம் வலுப்பெறும். மேலும் நரம்புப் பாதிப்பால் ஏற்படும் அல்சைமர்ஸ், பார்கின்சன்ஸ் போன்ற நோய்கள் ஏற்படாமல் இப்பழம் பாதுகாக்கிறது.

உடனடி ஆற்றல் வழங்குபவை

இப்பழத்தில் எளிய சர்க்கரை மூலக்கூறுகளான குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்கோஸ் போன்றவை எளதில் கரைந்து உடனடி ஆற்றலை வழங்குகின்றன. இப்பழத்தின் மதிய உணவிற்கு பின் நொறுக்குத் தீனியாக உண்ணும்போது அவை நமக்கு  உடனடி ஆற்றலை வழங்கி மந்தமான நிலையை மாற்றுகின்றது.

கண்பார்வை தெளிவடைய

இப்பழத்தில் காணப்படும் விட்டமின் ஏ கண்குறைபாடுகளை சரிசெய்கிறது. மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்வர்கள் பேரீச்சம் பழத்தினை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை தெளிவடையும். உடலுக்குத் தேவையான எல்லாச் சத்துக்களும் கிடைக்கப் பெற்று உடல்நலம் மேம்படும்.

 

பெண்களின் நலனுக்கு

பெண்களுக்கு கால்சியமும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கால் இவ்விரு சத்துக்களும் குறைகின்றன. இச்சத்துக்களை திரும்பப் பெறவும், ஒழுங்கற்ற மாத விலக்கைச் சரிசெய்யவும் இப்பழம் மருந்தாகிறது.

மெனோபஸ் காலங்களில் பெண்களுக்கு எலும்புகள் பலவீனமடையும். கை, கால், மூட்டுகளில் வலி தோன்றும். இதனைச் சரிசெய்ய பேரீட்சையை பாலில் கொதிக்க வைத்து பாலுடன் பழத்தினை உண்டால் மேற்கண்ட பிரச்சினைகள் குறையும்.

 

இதயப் பாதுகாப்பிற்கு

இப்பழமானது இதயத்தைப் பலப்படுத்துகிறது. முதல் நாள் இரவில் இப்பழங்கள் இரண்டினை ஊற வைத்து மறுநாள் ஊற வைத்த பழத்தினை உண்ண இதயம் பலப்படும். இப்பழத்தில் உள்ள மெக்னீசியம் மாரடைப்பு மற்றும் இதய நோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.

மேலும் இப்பழம் உடலில் தேவையற்ற கொழுப்புகளைக் குறைத்து மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

 

பேரிச்சையை வாங்கும் முறை

இப்பழமானது ஒரே சீரான நிறத்துடன் பளபளப்பாகவும் உப்பலாகவும் இருக்க வேண்டும். புதிதான பழமானது தொட்டல் கடினமாகவோ, மேல் தோல் கீறி பாளமாகவோ இருக்கக் கூடாது.

பதப்படுத்தப்பட்ட இப்பழத்தினை குளிர்பதனப் பெட்டியில் ஒரு வருடம் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம். புதிதான பழத்தினை ஆறு மாதங்கள் வரை குளிர்பானப் பெட்டியில் வைத்திருந்து உபயோகிக்கலாம்.

பேரீட்சை பெரும்பாலும் அப்படியே உண்ணப்படுகிறது. சில நேரங்களில் இப்பழத்தில் பாதாம், அக்ரூட் பருப்புக்கள்,கேண்டி ஆரஞ்ச், கிரீம் சீஸ் போன்றவை கொண்டு நிரப்பப்பட்டோ உண்ணப்படுகிறது.

நறுக்கி துண்டுகளாக்கப்பட்ட பழமானது பழக்கலவைகளிலும், கேக்குகளிலும் பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் பாலுடன் சேர்த்து மில்க் சேக்காகவும் சிரப்புகளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

மெசபடோமியர்கள் இப்பழத்திலிருந்து ஒயினைத் தயார் செய்து திருவிழாக்களின்போது பயன்படுத்தியதாக அறியப்படுகிறது.

 

பேரிச்சையைப் பற்றிய எச்சரிக்கை

இப்பழமானது அதிக அளவு உண்ணும்போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கச் செய்கிறது. இப்பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுவதால் அதிக அளவு உட்கொள்ளும்போது அவை வயிற்றுவலியை தோற்றுவிப்பதோடு வயிற்றுப் போக்கையும் ஏற்படுத்திவிடும்.

இதில் உள்ள சர்க்கரையின் காரணமாக அதிக அளவு உண்ணும்போது அவை பற்சொத்தையை ஏற்படுத்துகின்றன.

சத்துக்கள் நிறைந்த பேரீச்சை நாளொன்றுக்கு மூன்று பழங்கள் வீதம் உணவில் சேர்த்துக் கொண்டு வளமான வாழ்வு வாழலாம்.

– வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.