பைனாப்பிள் ஜாம் செய்வது எப்படி?

பைனாப்பிள் ஜாம் மணமாகவும், தித்திப்பாகவும் இருக்கும் ஜாம் ஆகும். நிறைய கடைகளில் பிரட்டிற்கு பைனாப்பிள் ஜாம் வைத்தே தருவர்.

இதனை வீட்டில் சுலபமாகவும், வேறு ஏதும் பதப்படுத்தப்படும் பொருட்கள் (Preservatives) சேர்க்கமால் செய்யலாம்.

இப்போது பைனாப்பிள் சீசன் ஆதலால் இதனை தயார் செய்து குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்து மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

இனி சுவையான பைனாப்பிள் ஜாம் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

பைனாப்பிள் – 1 எண்ணம்

வெள்ளை சர்க்கரை – பைனாப்பிள் விழுதில் பாதியளவு

எலுமிச்சம் பழம் – 1/2 மூடி

கிராம்பு – 3 எண்ணம்

தண்ணீர் – 1/4 டம்ளர்

உப்பு – 1/4 டீஸ்பூன்

பைனாப்பிள் ஜாம் செய்முறை

முதலில் பைனாப்பிள் பழத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து சிறுதுண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

மிக்ஸியில் பைனாப்பிள் துண்டுகள், 1/4 டம்ளர் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து கூழாக்கிக் கொள்ளவும்.

பைனாப்பிள் விழுதினை அளந்து கொள்ளவும்.

பைனாப்பிள் விழுது

1 பங்கு பைனாப்பிள் விழுதிற்கு 1/2 பங்கு வெள்ளைச் சர்க்கரை என்ற அளவில் வெள்ளை சர்க்கரையை எடுத்துக் கொள்ளவும்.

கிராம்பை பொடியாக்கிக் கொள்ளவும்.

எலுமிச்சை பழத்தை கழுவி பாதியாக்கிக் கொள்ளவும்.

வாயகன்ற வாணலியை அடுப்பில் வைத்து அதில் பைனாப்பிள் விழுதினைச் சேர்த்து கிளறவும்.

அடுப்பினை மிதமான தீயில் வைக்கவும்.

அடுப்பில் வைத்ததும்

பைனாப்பிள் கலவை கொதித்து கெட்டியாக மாற ஆரம்பித்ததும், வெள்ளை சர்க்கரையை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும்.

கலவை கெட்டியானதும்
வெள்ளைச் சர்க்கரை சேர்த்ததும்

வெள்ளைச் சர்க்கரை சேர்த்தால் இளகி கலவை நீர்த்து இருக்கும். அதனுடன் 1/4 டீஸ்பூன் உப்பினைச் சேர்த்து மிதமான தீயில் அடுப்பினை வைத்து அவ்வப்போது கிளறிக் கொண்டே இருக்கவும்.

கலவை லேசாக கெட்டியாக மாறும் போது கிராம்பு பொடியைச் சேர்த்து கிளறவும்.

கிராம்பு பொடி
கிராம்பு பொடியைச் சேர்த்ததும்

கலவை கெட்டியாகி பளபளப்பாகத் தெரியும்.

கலவை கெட்டியானதும்

அப்போது ஒரு கிண்ணத்தில் பைனாப்பிள் கலவையைச் சேர்த்து கிண்ணத்தைச் சாய்க்கும் போது கலவை நழுவாது அப்படியே இருக்கும். இதுதான் சரியான பதம்.

பதம் பார்க்கும் போது

இப்போது 1/2 மூடி எலுமிச்சை சாற்றை கலவையில் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடவும்.

எலுமிச்சை சாறு சேர்க்கும் போது

சுவையான பைனாப்பிள் ஜாம் தயார்.

சுவையான பைனாப்பிள் ஜாம் தயார்

எலுமிச்சை சாற்றினைச் சேர்ப்பதால் ஜாம் மேலும் கெட்டி படாமல் இருப்பதோடு ஜாமின் சுவையை தித்திக்கச் செய்யும்.

பைனாப்பிள் ஜாமினை இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றிற்கு தொட்டுக் கொள்ள மிகப் பொருத்தமாக இருக்கும்.

குறிப்பு

பழுத்த பைனாப்பிளைக் கொண்டு ஜாம் செய்தால் சுவை மிகும்.

விருப்பமுள்ளவர்கள் வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக மண்டை வெல்லம், கருப்பட்டி பயன்படுத்தி ஜாம் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.