பொங்கலோ பொங்கல் – ஓர் பார்வை

தை மாதத்தில் செந்நெல் அறுவடையாகப் போகிறது. செந்நெல்லுக்கும் எந்நெல்லுக்கும் எந்நலத்திற்கும் எல்லாம் வல்ல (ஒன்றாகும்) இறைவனே காரணம்.

அவன் எவ்விதம் காரணமாகிறான்?

உழவிற்கும், எருவிற்கும் காரணமான ஆனின மூலமாகவும், இந்திரனுடைய அதிகாரத்தில் விடப்பட்டிருக்கிற மழை பொழியும் மேகத்தின் மூலமாகவும் மேகத்திற்கு காரணமான சூரியன் மூலமாகவுமே!

ஆறு ருதுக்களில் மார்கழியும் தையும் ஹேமந்த ருது என்னும் பனிக்காலம்.

இயற்கை நிறங்களுக்குள் அக்காலத்தில் மஞ்சள் நிறப் பரங்கிப்பூவும், சாமந்தி, ஜவ்வந்திப் பூவும் நிறைந்த காலம்.

‘ஹேமம்’ என்னும் சொல்லிற்குப் பொன் என்பது பொருள். பொன்னிறமே மஞ்சள் நிறம். நாட்டுக் கரும்பும் மஞ்சள் நிறமே. மஞ்சள் நிறமே மங்களச் சின்னம்.

அமங்கலமாம் பீடைகள் எல்லாம் ஒழித்து வீடு, ஆடை, கலம் எல்லாவற்றையும் புதுப்பித்து, மேகத்திலும், ஆ(பசு)னினங்களிலும், செந்நெல்லிலும் விளங்கும் இறைவனது சக்தியை நன்றியுடன் நினைத்து நினைத்து பூரித்துப், பாலைப்போல் தூய மனம் பொங்கிப் பொங்கி, மங்கலப் பொருட்களையெல்லாம் அவருக்குக் காட்சிப் பொருளாகக் கொடுத்து, அடுத்த சங்கராந்தி வரை இங்கு பொங்கிய இத்தூய்மையின் சீர் குன்றாது நம்மை ரட்சிக்குமாறு இறைவனை இறைஞ்சுவதே பொங்கல் பண்டிகை.

வடதுருவமான மேருவின் சிகரத்திற்கு நேரேயுள்ள வானுலகிற்கு ‘உத்தராயண’ தினம் தான் உதய தினம்.

அன்று மனித வர்க்கத்திற்குப் பொங்கல். மறுநாள் ஆனினத்திற்குப் (மாட்டு) பொங்கல்.

பீடையை ஹரிக்கும் பீடாஹாரி தெய்வத்திற்கு முந்திய நாள் பொங்கல். சேஷத்தால் ‘கனுப்பிடி’ என்னும் பலியையிடுகிறோம். பெண்கள், சுமங்கலிகள் ‘கொப்பி’ எனப்படும் கும்மி அடிப்பார்கள்.

தட்சிணாயன இரவு கழிந்த பின் உடை, மண்கலம், பாய் போன்றவைகளைப் பழையன கழித்துப் புதியன மாற்றுகிறோம். பீடை கழித்து விடுகிறோம்.

புதுமைப் பெருவாழ்வு வாழ்வதற்கு வீட்டைச் சுத்தம் செய்து கொண்டாடும் முதல் திருநாளே ‘போகி’ என்று கொண்டாடப்பட்டு வருகிறது. போகி என்பது இந்திர பகவானுக்குள்ள பெயர்.

மார்கழி மாதத்தோடு மழைக்காலம் முடிவு பெறுகிறது. இது மழைக்கு நன்றி செலுத்தும் நாளாகவும் ‘காரி கழி‘ விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மழைக்குக் கடவுள் இந்திரன் ஆனதால் மழை பெய்து சுபிட்சமாக இருக்க ‘இந்திர பூஜை’ செய்ததாக வரலாறு.

இவ்விழா பற்றி வால்மீகி, காளிதாசர், நச்சினார்க்கினியார் போன்றவர்களும் விளக்கம் தந்துள்ளனர்.

இந்த இந்திர விழா, போகி ஆகியவை சோழவள நாட்டில் ‘செம்பியன்’ என்ற அரசனால் ஆரம்பிக்கப்பட்டதாகவும், காவிரி பூம்பட்டினத்தில் ஆண்டுதோறும் இவ்விழா கொண்டாடியதாகவும் நூல்களிலிருந்து தெரிய வருகிறது.

ஆன்மாவைப் பாவங்களிலிருந்து நீக்கிப் பண்படுத்துவது ‘பண்டிகை’. ஆன்மாவின் பாவங்களைக் கண்டிப்பது ‘கண்டிகை’ ஆகையால் அம்மை சக்தியை வழிபடும் நாள் போகி.

மகர சங்கிரமே சக்தி. சக்தியானவள் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் முடிய தட்சிணாயனம் காலத்தில் மானிட ஜன்மாவுக்கு மூதேவி வடிவமாயும், பசுக்களுக்கு புலி வடிவமாயும், பீடை பிடித்துக் கொண்டிருப்பதாகவும்,

இந்த பீடை நிவர்த்திக்காகவும் மானிட ஜன்மம் நலம் அடையும் பொருட்டும் தை மாதம் முதல் நாள் மகர சங்கராந்தி உத்தராயண புண்ணிய நாளில் சூரிய பகவான் முதல் பிரம்மா, விஷ்ணு முதலானவர்கள் வழிபட்டு, பூஜித்து பாற்பொங்கல் படைத்ததாகவும் வரலாறு.

ஸ்ரீரங்கம் கோயிலில் இதற்கு ‘கூடாரவல்லி நைவேத்தியம்‘ என்று பெயர்.

ஆடி மாதம் முதல் மார்கழி முடிய ஆறு மாதங்களும் நாடும் வீடும் மூதேவியால் ஆளப்பட்டதால் உத்தராயண புண்ணிய தினத்தில் கிராம சாந்தியும் கிரக சாந்தியும் செய்யப்பட்டது.

மறுநாள் காலையில் பசுக்களைக் குளிப்பாட்டி அலங்காரம் செய்து வழிபட்டதின் தாத்பரியம் என்னவென்றால் பசுக்களை இந்த ஆறு மாதங்கள் புலிகள் அடித்துத் தின்று கொண்டிருந்தபடியால், அன்றைய தினம் பரமசிவன் பசுக்களைக் கொண்டு புலிகளைத் துரத்தச் செய்து புலிக் கூட்டங்களை அழித்து, சக்தியையும் அழித்து மானிடருக்கும் பசுக்களுக்கும் நன்மையைத் தந்தருளிய நன்னாள்.

மகர சங்கராந்தி என்பது சூரியன் தென்திசை தட்சிணாயனத்திலிருந்து வடதிசை உத்தராயண பக்கம் திரும்பும் நாள்.

பொங்கல் நாள் விவசாயிகளுக்கும் பொன்னான நாள். நிலத்தில் புதிதாக சாகுபடி செய்யப்பட்ட நெல்லை அரைத்து அந்த அரிசியை பால்விட்டுப் பொங்கச் செய்கிறார்கள்.

நிலம் ஸ்ரீ பூமாதேவியின் அம்சமானதால் பூமாதேவியை வழிபட்டு ஸ்தோத்திரம் சொல்லி விவசாயத்தை விருத்தி அடையச் செய்து சகல மங்களங்களும் உண்டாக பூஜிக்கிறார்கள்.

மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கலன்று மாட்டுக் கொட்டிலை நன்றாக அலம்பி, சுத்தம் செய்து கோலமிட்டு தோரணங்களால் அலங்கரிக்கின்றனர்.

மாலை பசுக்களையும் எருதுகளையும் கன்றுகளையும் நன்கு குளிப்பாட்டி மஞ்சள் குங்குமமிட்டு கொம்புகளுக்கு வர்ணங்கள் தடவி புஷ்பங்களாலும் மாங்கொத்துக்களாலும் அலங்காரம் செய்கிறார்கள். கொம்புகளுக்குப் புதுவஸ்திரங்களையும் அணிவிப்பதுண்டு.

மாலை நல்ல வேளையில் மாட்டுக் கொட்டிலில் அடுப்பு மூட்டி புதுப்பானை வைத்து ஜலத்துடன் கொஞ்சம் பால் சேர்த்து உலை வைக்கிறார்கள்.

பிறகு புதுஅரிசி களைந்து பானையிலிட்டு பொங்கும்போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று ஆரவாரம் செய்கிறார்கள்.

சாதம் பக்குவமானதும் பானையை அடுப்பிலிருந்து இறக்கி மஞ்சள் கொத்து முதலியவைகளால் அலங்காரம் செய்கிறார்கள். அதில் வாழைப்பழங்கள் உரித்துப் போட்டு வெல்லம் சேர்க்கிறார்கள்.

மாடுகளையும் கன்றுகளையும் கொட்டிலுக்கு அழைத்து வந்து நிறைய சாம்பிராணி தூபம் போட்டு மாடுகளுக்கு காண்பிக்கிறார்கள்.

பிறகு கற்பூரம் ஏற்றி மாடுகளை பிரதட்சணம் வருகிறார்கள். எருதுகளை நந்திகேஸ்வரராகப் பாவிக்கிறார்கள். பசுக்களை கோமாதாவாக தியானிக்கிறார்கள்.

பிறகு பழத்துடனும் வெல்லத்துடனும் சேர்க்கப்பட்ட பால் அன்னத்தை எல்லா மாடுகளுக்கும் தருகிறார்கள்.

நான்காம் நாள் கன்னிப் பொங்கல்! நம் நாட்டில் எல்லாப் பெண்களும் தம் உடன் பிறந்தாரின் ஷேமத்தைக் கருதி நோற்கும் நோன்பு கனு நோன்பு.

அன்று எல்லாப் பெண்களுக்கும் உடன் பிறந்தார் பொருளனுப்பித் தங்களுக்காக அவர்கள் செய்யும் நோன்பைத் தங்கள் பொருளாலேயே நடத்தி வைக்கின்றனர்.

கனி நாள் என்பது உவப்புறு நாள். வழிபாடு விழாவினால் உண்டான உவப்பின் காரணமாகத் திருக்கோவில் சென்று இறைவனை வழிபடுகிறார்கள். இதையே காணும் பொங்கல் என்கிறார்கள்.

சில இனத்துப் பெண்கள் கூட்டமாகக் கூடி கும்மி, கோலாட்டம் போட்டுக் கொண்டு ஆற்றங்கரையில் கூட்டுப் பொங்கல் செய்து, நவ கன்னிகைகளான கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, நர்மதை, துங்கபத்ரி, சரபு ஆகியோரை வழிபட்டு மாலைப்பொழுதில் வீடு திரும்புகிறார்கள்.

அன்று காலை சுமங்கலிகள் பெரிய சுமங்கலிகளிடம் புதிய மஞ்சளைக் கொடுத்து ஆசீர்வாதம் பெற்று மஞ்சளன்னம் முதலிய சித்ர அன்னத்தைத் தீர்த்தக் கரையில் அல்லது வீட்டு முற்றம், மாடி, திறந்த வெளியில் மஞ்சள் இலையின் மீது அன்னத்தைப் பிடிபிடியாக வைத்துத் தனது சகோதரர் குடும்பம் நன்கு வாழ வேண்டும் எனப் பிராத்திப்பார்கள்.

எமதர்மராஜன் காக்கை வேஷம் தரித்ததால் காக்கைக்கு அன்னமிட்டால் அவர் சந்தோஷமடைந்து அருள் புரிவார்.

எனவே தான் பிரதி தினமும் வைஸ்வதேவம் என்ற கர்மாவிலும், சிரார்த்தத்திலும் காக்கைக்கு அன்னமிடப்படுகிறது.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.