பொதுக் கரைப்பான்- நீருடன் ஓர் உரையாடல்- 20

பொதுக் கரைப்பான் – நீருடன் ஓர் உரையாடல்- 20

சில எலுமிச்சை பழங்கள் இருந்தன. அவற்றுள் இரண்டு மிகவும் பழுத்திருந்தன. ஆங்காங்கே பழுப்பு நிறத்தில் புள்ளிகளும் இருந்தன. அப்படியே வைத்திருந்தால், அவை அழுகிவிடும்.

“என்ன செய்யலாம், எலுமிச்சை சாதம் செய்யலாமா?” என்று யோசித்தேன். ஆனால், காலையில் சமைத்திருந்த சாம்பார் அதிகமாகவே இருக்கிறது. ‘சாம்பார் வீணாயிடுமே?’ என்றும் தோன்றியது.

‘சரி சாறு போட்டிடலாம்’ என்று முடிவு செய்தேன்.

கண்ணாடி குடுவையில் முக்கால் பங்கு குடிநீரை எடுத்தேன். அந்த இரண்டு எலுமிச்சை பழங்களையும் இரண்டாக வெட்டி ஒவ்வொன்றாக பிழிந்தேன். எலுமிச்சை சாறு நீரில் சொட்டியவுடன் சட்டென‌ கரைந்தது.

அடுத்து சர்க்கரை சேர்த்து, கரண்டியால் நன்றாக கலக்கினேன். சர்க்கரை அளவு போதுமா என தெரியவில்லை. எனவே, சிறிதளவு சாற்றை எடுத்து சுவைத்தேன். இனிப்புச் சுவை சற்று குறைவாகவே இருந்தது. அதனால், இன்னும் கொஞ்சம் சர்க்கரை சேர்த்தேன்.

‘இதுல உப்பு சேர்த்தா என்ன?’ என்று தோன்றியது. ‘சரி சேர்த்து பார்ப்போம்’ என்று முடிவு செய்தேன்.

அதன்படி, சிறிதளவு உப்பும் சேர்த்து நன்றாக கலக்கினேன். மீண்டும் சிறிதளவு சாற்றை எடுத்துச் சுவைத்தேன். இப்பொழுது எலுமிச்சை சாற்றின் சுவை மேலும் கூடியிருந்தது போல் உணர்ந்தேன்.

“என்ன சார், சர்க்கர உப்புன்னு எல்லாத்தையும் எனக்குள்ல போட்டு கரைக்கிறீங்க. என்ன செய்யறீங்க?” – நீர் சத்தமாக கேட்டது.

“நீயா! நான் எலுமிச்சை சாறு செஞ்சிருக்கேன்.”

பொதுக் கரைப்பான்

“எலுமிச்சை சாறுக்கு, எலுமிச்சை மட்டும் போதாதா. எதுக்கு நீர் வேணும்?”

“இம்…ம்… வெறும் எலுமிச்சை சாறு மட்டும் குடிச்சா ரொம்ப புளிக்கும். குடிக்கவே முடியாது. அத நீருல கலந்துதான் சாறு தயாரிப்பாங்க.”

“எலுமிச்சை சாறு ஏன் புளிக்குது? என்னோட கலந்தா புளிக்காதோ?”

“சொல்றேன். எலுமிச்சை சாறு புளிப்புக்கு காரணம், அதுல இருக்கும் சிட்ரிக் அமிலம் தான். அதிக அளவு நீருல சாறு கரையும் பொழுது, அதோட செறிவு நீர்த்து போகுது. அதனால, தண்ணில கலந்த எலுமிச்சை சாறு ரொம்ப புளிக்கிறதில்ல.”

“ஓ! அப்படியா? சரி இதோட சர்க்கரைய சேர்த்தீங்களே?”

“ஆமாம். சர்க்கரை நீருல கரைஞ்சதால, சாறு இனிப்பு சுவையோடும் இருக்கும்.”

“இது சரி, உப்ப வேற சேர்த்தீங்களே. எதுக்கு?”

“பொதுவாக உப்பு உணவின் ஒட்டுமொத்த சுவையையும் கூட்டும் தன்மை கொண்டது. அதனால், புளிப்பும் இனிப்பும் கலந்த சாற்றின் சுவை இன்னும் கூடுமுன்னு தான் உப்பையும் சேர்த்தேன்.”

“ஆக மொத்தத்துல, எலுமிச்சை சாறுல இருக்கும் சிட்ரிக் அமிலம், அப்புறம் சர்க்கரை, உப்பு இவை என்னுள்ல கரைவதால, உங்களுக்கு சுவையான எலுமிச்சை சாறு கிடைக்குது. சரிதானே?”

“ஆமா, பொருட்கள கரைக்கும் பண்பு உனக்கு இருப்பதால தான் இது நிகழுது. அதனால தான், உன்ன ‘பொதுக் கரைப்பான்’-னு அழைக்கிறோம். ஆங்கிலத்துல Universal solvent-ன்னு சொல்லுவாங்க.”

“இது என்னா புதுசா இருக்கு?”

“அறிவியல்ல நீர, பொதுக் கரைப்பான் அப்படீன்னு சொல்றது வழக்கம் தான்.”

“பொதுக் கரைப்பான் என்றால் என்ன அர்த்தம்?”

“ஒரு திரவம் எல்லாப் பொருட்களையும் கரைச்சா, அதுக்கு பேரு பொதுக் கரைப்பான்.”

“ஆனா, நான் எல்லாப் பொருட்களையும் கரைப்பதில்லையே! உதாரணத்துக்கு, மண், கண்ணாடி, இப்படி எத்தனையோ பொருட்கள் என்னுள்ல கரைவதில்லையே?”

“நீ சொல்றது சரிதான். ஆனா, இருக்கிற மற்ற திரவங்களவிட, நீ தான் பெரும்பாலான பொருட்கள கரைக்கிற. அதனால் தான் உனக்கு இந்த பெயரு”

“மகிழ்ச்சி சார். நான் கரைப்பானாக செயல்படுவதால, உங்களுக்கு சுவையான சாறு கிடைக்குதே.”

“சாறு மட்டும் இல்ல, நீ பொதுக் கரைப்பானாக செயல்படுவதால தான் உயிர்களும் வாழ முடியுது.”

“என்ன சொல்றீங்க?”

பொதுக் கரைப்பானின் பயன்கள்

“ஆமாம், மனித உடல்ல 60-75% நீர் இருக்கு. உடம்புல நடக்கும் பல உயிர்வேதிவினைகள் நீர் மூலமாகத்தான் நடக்குது. உணவு செரிக்கப்பட்டு வெளியாகும் பொருட்களும் நீருல கரைவதாலத்தான், உடலால எளிதா அவற்ற உறிஞ்ச முடியுது.

மொத்தத்துல மனித உடலுக்கு தேவையான சர்க்கரை, வைட்டமின்கள், மின்பகுளிகள் முதலிய எல்லா ஊட்டச்சத்துக்களும் நீருல கரைவதாலத்தான் உடலின் எல்லாப் பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.

இதுமட்டுமில்ல, உடற்செயலியல் வினைகளால் உண்டாகும் கழிவுகளும் நீரில் கரைஞ்சுதான் வெளியேறுது.”

“ஆச்சரியமா இருக்கே!”

“இம்…ம்… அதனால் தான் சொன்னேன். நீ பொதுக் கரைப்பானாக இருப்பதால உயிர்கள் இருக்குன்னு.”

“சரி சார். நீர்வாழ் உயிரினங்களும் இருக்கு. தாவரமும் உயிரினம் தானே? அவற்றுக்கெல்லாம், எப்படி என்னோட கரைக்கும் பண்பு பயன்படுது?”

“நல்ல கேள்வி கேட்ட?”

“நீர்வாழ் உயிரினங்களுக்கும் உன்னோட கரைக்கும் பண்பு மிகமுக்கியம். குறிப்பா சொல்லனும்னா, அந்த உயிரினங்களுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜனும் நீரில் கரைவதாலத் தான் கிடைக்கிற‌து.”

“ஓ! ஆக்சிஜனையும் நான் கரைக்கிறேனா?”

“ஆமாம். நீரில் கரைந்த ஆக்சிஜனுக்கு ‘Dissolved oxygen-ன்னு பெயரு. அப்புறம் தாவரங்கள பற்றி கேட்டல?”

“ஆமாம்.”

“இம். மண்ணிலிருக்கும் தாதுக்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களை நீர் கரைச்சி, வேர்கள் மூலம் தாவரங்களின் எல்லா பாகங்களுக்கும் எடுத்துச் செல்வதன் மூலமாத்தான் தாவரங்களும் வாழுது.”

“நல்லது சார்.”

“உனக்கு மிக்க நன்றிகள்.”

“இருக்கட்டும் சார். நான் புறப்படுறேன்.”

“சரி நாம் அப்புறம் சந்திப்போம்” என்று கூறி, ஒரு லோட்டாவில் எலுமிச்சை சாற்றை ஊற்றி பருகத் தொடங்கினேன்.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

நீரின் ஒட்டுந்தன்மை – நீருடன் ஓர் உரையாடல் – 19

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.