பொது மொழி எது?

பொது மொழி எது? என்ற கட்டுரை, தமிழா ஆங்கிலமா? என்ற தலைப்பில் ‘செங்கோல்’ வார இதழில், பெருமதிப்பிற்குரிய‌ ம.பொ.சிவஞானம் அவர்கள் எழுதிய தொடர் கட்டுரைகளின் ஒரு பகுதி ஆகும்.

இந்தியாவில் அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப் பெற்ற பதினான்கு மொழிகளில், உருது மற்றும் சமஸ்கிருதம் நீங்கலாக ‘அரசு மொழி’ என்ற சிறப்புக்குரியவை பன்னிரண்டு மொழிகளாகும்.

அவற்றில் ஒவ்வொரு மொழிக்குரிய மக்களும், தத்தம் மொழியைத் தாய்மொழியாகக் கருதி அதன்பால் பக்தி அல்லது பற்றுச் செலுத்தி வருகின்றனர்.

அந்தப் பக்திக்கு அல்லது பற்றுக்குக் கேடு சூழாத வகையில் பொது மொழியைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது.

ஒருசில குடும்பங்களுக்கே ஆங்கிலம்

கற்பதற்குக் கஷ்டமான மொழியாக இருப்பதால், கல்லூரி மட்டத்தில் உயர்தரக் கல்வி கற்றவர்கள் மட்டுமே, ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் திறமை பெற முடிகின்றது. அதுவும் ஓரளவுக்குத் தான்.

இது காரணமாக, ஆங்கிலத்தில் உயர்தரக் கல்வி பெறுவதற்கான வசதியும் வாய்ப்பும் மக்கள் எல்லோருக்கும் சமமாக இல்லை. ஒரு சில குடும்பங்களுக்கே இருக்கின்றன.

இனியும், எவ்வளவுதான் வசதிகளும் வாய்ப்புகளும் ஏற்படுத்திக் கொடுத்தாலும், உயர்தரக் கல்வி கற்றவர்கள் சிலராகத்தான் இருக்க முடியும்.

இப்போது ஆங்கிலம் கற்றவர் தொகை நூற்றுக்கு 1 சதவிகிதம் என்றால், எதிர்காலத்தில் 10 சதவிகிதமாக உயரலாம் என்றே வைத்துக் கொள்வோம்.

அதற்குமேல் நூற்றுக்கு நூறு பேரும் உயர்தரக் கல்வி கற்பதென்பது என்றைக்குமே சாத்தியமாகாது.

கடந்த ஒன்றரை நூற்றாண்டுகளாக இந்தியாவில் ஆங்கிலமே பொது மொழியாக இருந்து வருவதால், இனியும் அதுவே நீடிக்க வேண்டும் என்றும் ஆங்கிலம் படித்த மேதைகள் சிலர் சொல்லக் கேட்கிறோம்.

இந்திய மக்களில் நூற்றுக்கு ஒன்றரை சதவிகிதத்தினரே பயின்றுள்ள, இனியும் பத்து சதவிகிதத்தினருக்கு மேல் பேசவும் எழுதவும் ஆற்றல் பெற முடியாத ஆங்கில மொழியை, இந்தியாவின் பொது மொழி என்று சொல்வது ஏமாற்றுப் பேச்சு!

ஆம். மக்கள் எல்லோரும் பயில்வதற்கு ஏற்றதல்லாத பரங்கி மொழி, இந்திய மக்களிடையே உறவு மொழியாக இருக்க முடியும் என்பதும் மூடநம்பிக்கை!

உறவுக்கு இந்திமொழி, மத்திய அரசில் உத்தியோகம் பெற ஆங்கில மொழி என இரண்டு மொழிகளை ஏற்பதும் சாத்தியமில்லை.

புதிய சாதி வேற்றுமை

ஆங்கிலேயர் காலத்திலும், ஆங்கில மொழியானது சமுதாயத்தின் மேல் தளத்திலுள்ள மக்களின் நலனைக் கருதியே பள்ளிகளில் திணிக்கப்பட்டது.

ஆங்கிலேயர் வகுத்த கல்வித் திட்டமானது, சாதாரணப் பாமர மக்களிடமிருந்து படித்த மக்களைப் பிரித்துவிட்டது. ஆம் அந்த இரு சாராரையும் ஏற்றத் தாழ்வுள்ள இழிவு சிறப்புக்குரிய இருவேறு சாதிகளாக்கிவிட்டது.

அதன் விளைவாக, உத்தியோகங்களும் பதவிகளும், உயர்ந்து விளங்கும் ஒரு சில குடும்பங்களுக்கே உரிமையாகிவிட்டன.

“அரசாங்க நிர்வாகம் ஆங்கிலத்திலேயே நடைபெற வேண்டுமென்று
கூறுபவர்கள், முன்னேறிவிட்ட சாதிகளைச் சார்ந்தவர்களே.

ஆங்கிலம் தெரியாதவர்கள், கல்வி கற்க வசதியில்லாத பின் தங்கிவிட்ட சாதிகளைச் சார்ந்தவர்களே.

அவர்கள் ஆங்கிலம் கற்பதற்காக உபகாரச் சம்பளம் என்னும் ‘லஞ்சம்’ வழங்கப்படுகிறது.

ஆங்கிலம் கற்றவர்களின் நிரந்தர, அடிமைகளாக மக்கள் வாழ வேண்டும் என்பதுதான் இந்த ஏற்பாட்டின் நோக்கம்.

பின் தங்கிவிட்ட சாதியினர் கல்வி கற்பதற்கு ஊக்கமளிக்கப்படுகின்றனர்.

அவர்களும் சுகஜீவிகளான, முன்னேறிவிட்ட சாதிகளோடு சேர்ந்துவிட வேண்டுமாம். இது அபாயகரமான போக்காகும்.”

இது, காந்தியடிகளின் சீடர்களில் தலைசிறந்தவரான காகா கலேல்கர் என்பவர், 6-5-55 இல் அப்போது ஆந்திரத் தலைநகராக இருந்த கர்நூல் நகரில் பத்திரிகைப் பிரதிநிதிகளிடம் தெரிவித்த கருத்தாகும்.

பொதுமொழி இந்தியே!

இந்தியாவில் நாம் ஏற்கக் கூடிய பொது மொழி, இந்திய மொழிகளில் ஒன்றாக, இந்தியர் அனைவருமே கற்பதற்கு வாய்ப்புடைய எளிய மொழியாக இருத்தல் வேண்டும்.

அப்போதுதான், அந்தப் பொதுமொழி மூலம் முன்னேறுவதற்கு மக்கள் எல்லோருக்கும் சமசந்தர்ப்பம் கிடைக்கும். அத்தகைய பொதுமொழி இந்தி மொழிதான் என்பது அரசியல் சட்டப்படி உறுதிப்பட்டு விட்டது.

இதுவரை ‘இந்தி ஒழிக’ என்று குரல் கொடுத்தவர்கள்கூட, “ஒரு இடைக்காலத்திற்கு மத்திய அரசில் ஆங்கிலமும் துணை மொழியாக இருக்க வேண்டும்” என்ற நிபந்தனையோடு, இந்திதான் இந்தியாவின் பொதுமொழி என்பதை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு விட்டனர்.

“என்றென்றும் ஆங்கிலம்”, என்று குரல் கொடுக்கும் அறிஞர் ராஜாஜிகூட, மத்திய ஆட்சியின் நிர்வாகத்திற்காக அல்லாமல், இந்திய மக்களிடையே உறவையும், தேசிய ஒற்றுமையையும் வளர்ப்பதற்கான பொதுமொழியாக இந்தியை ஏற்றுக் கொண்டுள்ளார்.

இவர்களுக்கு அப்பாலும் “இந்தி எதிர்ப்பாளர்” இருப்பார்களானால் அவர்கள்கூட, தமிழ் மக்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் இந்தி பயில்வதை எதிர்க்கமாட்டார்கள்.

ஆகவே, தமிழகத்துப் பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தில் இந்தி மொழிக்கும் இடம் அளித்தாக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

ஆட்சி மொழியாவதெப்படி?

ஒரு விஷயத்தை இங்கு தெளிவுபடுத்துவது, அவசியம்.

அதாவது, இந்தியைப் பொது மொழியாக ஏற்பது வேறு; இந்திய நடுவிடத்தன் ஆட்சிமொழியாக ஏற்பது வேறு. இரண்டையும் ஒன்றாக்கிக் குழப்புவது. அறிவுடைமையல்ல.

‘இந்திதான் இந்தியாவின் ஆட்சிமொழி’ என்ற கொள்கை அரசியல் சட்டப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டு விட்டதாலேயே, ஆட்சி மொழிக்குரிய தகுதி இந்திக்கு வந்துவிடவில்லை.

இன்றைய நிலையில், இந்தியும் மாநில மொழிகளில் ஒன்றுதான். இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களெல்லாம் அம்மொழியைப் பயின்ற பின்னரே, அது பொது மொழிக்கான அந்தஸ்தைப் பெறுகின்றது.

அதன் பிறகே, மத்தியில் ஆட்சி மொழியாகவும், மாநிலங்களிடையே தொடர்பு மொழியாகவும் இந்தி வர இயலும். அப்போதும், மொழித் துறையில் தமிழுக்குள்ள தனித்தன்மைக்கேற்ப, இந்தியோடு அதற்கு கலாசாரத் துறையில் சம அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும்.

இந்தியாவின் தேசிய ஐக்கியம் வலுப்பெறுவது இந்தியை ஆட்சி மொழியாக்குவதில் இல்லை; குமரி முதல் இமயம் வரையுள்ள மக்கள் எல்லோரும் இந்தியைப் பயின்று தேர்ச்சி பெறுவதில்தான் இருக்கிறது.

பொது மொழியாக இந்தியை ஏற்குமிடத்தும், ஆரம்பப் பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தில் இந்திக்கு இடமளிப்பதற்கில்லை.

ஆரம்பப் பள்ளியில் ஆங்கிலத்தைத் திணிப்பதற்கு எதிராகச் சொல்லப்பட்ட காரணங்கள் அனைத்தும் இந்தி மொழிக்கும் பொருந்தும். ஆகவே, ஆரம்பப் பள்ளியில் தமிழ் ஒன்று மட்டுமே கட்டாயப் பாடமொழி.

பள்ளிகளில் இந்தி

உயர்நிலைப் பள்ளியில் இந்திக்கு இடமளிப்பது அவசியம். அங்கும், நான்காம் படிவத்திலிருந்து இந்தி பயில்வதே பயனுடையதாக இருக்கும்.

முதல் படிவத்தில் ஆங்கில போதனை துவங்குவதால், அதே படிவத்தில் இந்திக்கும் இடமளிப்பது மாணவர்களைத் துன்புறுத்துவதாகும்.

இப்போது, நான்காம் படிவத்தில்தான் இந்தி போதனை ஆரம்பமாகின்றது. ஆனால், முதல் படிவத்திலிருந்து மூன்றாம் படிவம் வரை இந்தி, பயிற்றுவிக்கப்படுவதையே அரசாங்கம் இன்னமும் விரும்புவதாகத் தெரிகின்றது.

அதற்கு வசதி செய்வதற்காகத்தான், ஆரம்பப் பள்ளியிலேயே ஆங்கில போதனையை ஆரம்பிக்கிறார்களோ என்றும் ஐயுற வேண்டியிருக்கிறது.

இது எப்படியாயினும், நான்காம் படிவம் தொடங்கி ஆறாம் படிவம் வரை இந்தி போதிக்கப்படும் தற்போதைய நடைமுறையை நாம் ஆதரிக்கலாம்.

மாறாக, முதல் படிவத்திலேயே இந்திப் பயிற்சி துவங்க வேண்டுமானால், முன்னரே யான் கூறியதுபோல, உயர்நிலைப் பள்ளியிலிருந்து ஆங்கிலம் வெளியேற்றப்படும்போதுதான் அது சாத்தியமாகும்.

ம.பொ.சிவஞானம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.