தனி சிறையிலிருந்து,
காலா பானி, அந்தமான் சிறைக்காக,
கொடுமைக்காக உருவாக்கப்பட்ட தீவு.
அதில் நான்…
அந்த சிலந்தி தன் கோட்டையை பின்னியவாறே
ஆர்வமுடன் என் கதைகளை கேட்டுக் கொண்டு இருக்கிறான்.
ஆனால் இன்னும் இரண்டு நாட்களுக்குள்
கோட்டையின் இறுதி கட்ட வேலை முடிகிறது.
பரவாயில்லை; ஒரு கட்டெறும்பு வந்துள்ளான்.
எல்லோரும் தம் அறையின் வாயிலுக்கு வாருங்கள்!
அந்த அணில் துள்ளி குதித்து ஓடும் காட்சி.
ஏன் இவ்வளவு ஆர்வம்?
அவன் மட்டும் சிறைக்குள் வந்து
நிமிடத்தில் சென்று விட்டானே!
நாங்கள் வருடத்திற்கு ஒருமுறை மட்டும்
பார்க்கும் பெண், எங்கள் டாக்டர் அம்மா.
இம்முறை அவர் கையைத் தொட்டு
ஸ்பரிசம் பெற்றேன்.
தாழ்வாரத்தின் காவலாளி
காலணி மாற்றியிருக்கிறார்.
சப்தம் மாறிவிட்டது.
தமிழின் எழுத்துக்கள் மறந்து விடும்
என்று ஐயப்பட்டேன்.
நகங்கள் வைத்தே சுவரில்
எழுதி பார்த்துக் கொண்டேன்.
என் குழந்தையின் (இப்பொழுது
பெரியவள்) குரல் மறந்து போய்விட்டேன்.
எப்போதோ கேட்ட மழலை மட்டும் அசரீரி.
என் முகத்தை மறந்து விட்டேன்;
என்றோ மெஸ் தட்டில் ஒருமுறை பார்த்தேன்;
இனி பார்க்க வேண்டாம் என்று முடிவெடுத்தேன்.
பொன்னுதாயி நீ வைக்கும் ரசத்தின்
சுவை மட்டும் நாக்கில் மிச்சமுண்டு;
இன்னும் சிறிது நாட்களுக்கு மட்டும்.
அன்பு, காதல், அழகு, அசிங்கம், அவமானம்,
வெட்கம், சோகம், சந்தோஷம், நறுமணம்,
பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என ஏதுமற்று இருக்கிறேன்.
அவ்வப்போது பசியையும், தாகத்தையும் தவிர!
க.சஞ்ஜெய்
சென்னை
கைபேசி: 7904308768