பொருந்தாத இரக்கம் – சிந்திக்க வைக்கும் சிறுகதை

“ஐயா, எங்காத்துகார‌ருக்கு நாகமல முருகன் கோவில் பூசை முறைய, ரகு பட்டர்ட்ட இருந்து வாங்கிக் கொடுங்க” என்றபடி தர்மகர்த்தா முன்பு மங்களம் பவ்யமாக நின்றாள்.

“ஏம்மா, என்னாச்சு?” என்று தர்மகர்த்தா மிடுக்காக் கேட்டார்.

“பெத்தா கோவில் மடப்பள்ளியில பார்க்கற வேலைக்கு தர்ற வருமானம் குடும்பத்துக்குப் பத்தல. அதனால நாகமல முருகன் கோவில் கார்த்திகைப் பூசை முறைய மட்டும் எங்காத்துகாரருக்கு கொடுத்தா, எங்களுக்கும் கொஞ்சம் வருமானம் வரும்.” என்றாள் தர்மகர்த்தாவிடமிருந்து சாதகமான பதிலை எதிர்நோக்கி.

“அப்படியா, நான் ரகு பட்டர்கிட்ட கலந்து பேசிட்டுச் சொல்றேன்.” என்றபடி வீட்டிற்குள் சென்றார் தர்மகர்த்தா.

பெத்தா கோவில் சோலையூருக்கு மேற்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இயற்கை எழில் சூழ‌ இருந்தது. மார்கழி மாதத்தின் காலை பஜனை பெத்தா கோவிலிருந்து தொடங்கும்.

கண்மாய்கள் நிறைந்து இருக்கும் காலங்களில், கோவிலுக்குச் செல்லும் மாட்டுவண்டிப் பாதையில் நடந்து, மார்கழி மாத பஜனை பாடுவது மிகவும் ரம்மியமாக இருக்கும்.

நாகமலை சோலையூரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில், பெத்தா கோவிலுக்குச் செல்லும் வழியில் மலையின் மீது இருந்தது.

பெத்தா கோவிலில் தினசரி பூசையும், நாகமலையின் முருகனுக்கு மாதக் கார்த்திகைப் பூசையும் நடைபெறும்.

ரகு பட்டர் பெத்தா கோவிலின் தலைமை அர்ச்சகர். பெத்தா கோவிலுக்கும், நாகமலை முருகன் கோவிலுக்கும் ஒரே தர்மகர்த்தா.

முத்து பெத்தா கோவிலின் மடப்பள்ளியில் வேலை செய்யும் மடப்பள்ளி ஐயர். பெத்தா கோவிலில் உள்ள விளக்குகள் அனைத்திற்கும் திரி, எண்ணெய் விட்டு விளக்குகளை ஏற்றுவதும் முத்துவின் பொறுப்பு.

பெத்தா கோவிலின் இறைவனார் சிவபெருமானையும் உடனுறை நாயகியையும் அபிசேகித்து அலங்காரம் செய்து பூசை செய்வதில் ரகு பட்டருக்கு நிகர் ரகு பட்டரே.

ரகு பட்டரின் சுறுசுறுப்பு, கணீர் குரல் கோவிலுக்கு வழிபட வருவோரை தாமாகவே அர்ச்சனை செய்யத் தூண்டும்.

நாகமலை முருகன் கோவிலின் ஒவ்வொரு மாதக் கார்த்திகைப் பூசையையும் ரகு பட்டரே நடத்துவார்.

கார்த்திகை அன்று அபிசேகம் செய்து, சந்தனக் காப்பு சாத்தி, ரோஜா அல்லது செவ்வந்தி மாலை அலங்காரத்தில் இருக்கும் முருகனைக் காண்பவர், உள்ளம் உருகும்.

தீபாராதனை முடிந்து ரகு பட்டர் கணீர் குரலில் உச்சரிக்கும் மந்திரங்களும், பாடல்களும் காதிற்கு இனிமையையும், மனதிற்கு அமைதியையும் தரும்.

பலநூறு பேர் கூடியிருக்கும் அவ்விடத்தில், பட்டரின் மந்திர ஒலி கேட்டதும் வேறு எந்த சத்தமும் எழும்பாது.

பூசை முடிந்ததும் நடைபெறும் அன்னதானத்திற்கு பலபேர் சென்றாலும், சிலபேர் வரிசையில் நின்று கொண்டு ஒருவர் பின் ஒருவராக ரகு பட்டரிடம் குடும்பத்தாரின் பெயரினைக் கூறி முருகனிடம் அர்ச்சிக்கச் சொல்லுவர்.

கார்த்திகை வழிபாட்டிற்கு நாகமலைக்கு வருவோர், ரகு பட்டரின் பூசையால் மனதினையும், அன்னதானத்தால் வயிற்றினையும் நிரப்பிச் செல்வர்.

செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கு ரகு பட்டர் உதாரணம் என்று சோலையூர் மக்கள் கூறுவர்.

முத்து, பெத்தா கோவில் மடப்பள்ளியில் சமைத்துக் கொண்டிருக்கும்போது, கையில் பீடியை வைத்துக் கொண்டிருப்பதை, தர்மகர்த்தா பலமுறை பார்த்து சத்தம் போட்டுள்ளார்.

அதே போல் விளக்குகளுக்கு எண்ணெய் இடும் போதும், கவனக்குறைவாக கீழே எண்ணெயைச் சிந்துவதும், விளக்குகளுக்கு அதிகமாக எண்ணெய் ஊற்றுவதும், சில சமயங்களில் குறைவாக ஊற்றுவதும் என கவனக் குறைவாகவே செய்வார். அதனையும் தர்மகர்த்தா கவனிக்க தவறியதில்லை.

ஆதலால் நாகமலை முருகன் கோவில் பூசை முறையை முத்துவிற்கு மாற்றுவதில் தர்மகர்த்தாவிற்கு தயக்கம் இருந்தது. மறுநாள் காலையில் தற்செயலாக ரகு பட்டர் தர்மகர்த்தாவைப் பார்க்க வந்தார்.


“ஐயா, ரெண்டு நாளா மங்களம் எங்காத்து வாசல்ல நின்னு, நாகமலை முருகன் கோவில் பூசை முறைய கேட்டு சண்ட போடுறா. முத்துவோட வருமானம் குடும்பச் செலவுக்கு பத்த மாட்டேங்குதாம். பிள்ளைங்கள வைச்சிட்டு ரொம்ப கஷ்டமாயிருக்காம். அதனால நாகமலை முருகன் கோவில் பூசை முறைய, நான் முத்துவுக்கு விட்டுக் கொடுத்திடனுமாம்.” என்றார் ரகு பட்டர்.

‘நாம பேச நினைச்ச விசயத்த, ரகு பட்டரே பேசுறாரே’ என்று எண்ணியபடி ரகு பட்டரையே தர்மகர்த்தா பார்த்துக் கொண்டிருந்தார்.

“ஆனா நான் இதெல்லாம் பெரிசா எடுத்துகில்ல. ஒண்டிக் கட்டையா இருக்குற நோக்கு ரெண்டு கோவில்ல பூஜை முறையா?ன்னு மங்களம் கேக்கறா. அதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு. இருந்தாலும் நா உங்ககிட்ட ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நாகமலை முருகன் கோவில் பூசை முறைய முத்துவுக்கே கொடுத்திடுங்க.” என்றார் சலனமில்லாமல்.

பாவம்; வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்த சிரமப்பட்டுத்தானே மங்களம் இப்படிப் பேசுகிறாள். ஒரு குடும்பத்தின் வருமானத்திற்கு உதவி செய்ததாக இருக்கட்டுமே என்று தர்மகர்த்தா இரக்கம் கொண்டார். ரகு பட்டரும் விலகிக் கொண்டதால், தர்மகர்த்தா நாகமலை முருகன் கோவில் பூசை முறையை முத்துவிடம் கொடுத்தார்.

முத்து பொறுப்பேற்ற முதல் மாதக் கார்த்திகையன்று, வேக வேகமாக அபிசேகித்து, அலங்காரம் செய்து, பூசையை முடித்துவிட்டு முதல் ஆளாக அன்னதானத்தில் அமர்ந்து சாப்பிட்டார். பின்னர் கோவிலின் பின்புறம் சென்று பீடியைப் பற்ற வைத்து உறிஞ்சிக் கொண்டிருந்தார்.

கருவறையில் அர்ச்சகரைக் காணாது வழிபாட்டிற்கு வந்திருந்தோர், ரகு பட்டர் பூசைக்கு வந்திருந்தால் பூசையால் மனம் குளிர்ந்திருக்கும்; முத்து பட்டர் அவருடைய வேலையைக் காட்டிவிட்டாரே என்று புலம்பினர்.

இந்தச் செய்தி தர்மகர்த்தாவை எட்டியது. கோவிலுக்கு பின்புறம் சென்று போது முத்து பீடியை சுவாரஸ்யமாக புகைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், தர்மகர்த்தாவிற்கு ஆத்திரமாக இருந்தது.

“முத்து, செய்யும் தொழிலே தெய்வம் அப்படின்னு உனக்குப் புரியல. உன்னோட தொழிலே தெய்வத்துக்கு தொண்டு செய்யிறதுதான். ஆனா நீ அத சரியா செய்ய மாட்டேங்குற‌.

நாம எப்பவுமே செய்ற வேலைய கண்ணும் கருத்துமா அர்ப்பணிப்பு உணர்வோட செய்யணும். ஆனா உங்கிட்ட அது இல்ல. உன்னோட குடும்பத்தையும் பிள்ளைகளையும் நினைச்சிப் பாரு. இனியாவது புரிஞ்சு நடந்துக்கோ” என்று கூறிவிட்டு நடந்தார்.

‘அப்படி நான் என்ன செஞ்சுட்டேன்னு இப்படி பேசிட்டுப் போறாரு. இதுல செய்யும் தொழிலே தெய்வம் அப்படின்னு வேற சொல்லாரு’ என்று எண்ணியபடி விழித்தார் முத்து.

முத்து திருந்தவில்லை; அப்படியே தொடர்ந்தார். பொதுமக்களிடம் அதிருப்தி வர ஆரம்பித்தது.

அடுத்த மூன்று மாதத்தில் வயது மூப்பின் காரணமாக தர்மகர்த்தா இயற்கை எய்தினார். கோவில் நிர்வாகம் தவறான ஆட்கள் கைகளில் சென்று சேர்ந்தது.

மாதம் தோறும் நடைபெறும் கார்த்திகை வழிபாட்டிற்கு, மக்கள் கூட்டம் குறையத் தொடங்கியது; ஒரு வருடத்தில் மொத்தமாக நின்று போனது.

இப்போதும் ஒவ்வொரு மாதமும் பூஜை நடைபெறுகிறது. ஒரு சிலர் வருவார்கள்; அவ்வளவுதான்.

பொறுப்பற்ற ஒரு பட்டர் ஆயிரக்கணக்கான மக்களின் ஆலய வழிபாட்டை சிதைத்து விட்டார். கோயிலும் இப்போது களையிழந்து போனது.

ஒரு குடும்பம் நன்றாக இருக்கட்டுமே என்று இரக்கப்பட்டுத்தான் தர்மகர்த்தா முத்து பட்டருக்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் முத்து பட்டர் பொறுப்பின்றி கோவில் பெருமையைச் சிதைத்து விட்டார்.

இரக்கப்படும் முன்பு எச்சரிக்கையாக இருங்கள் என்று பாடம் சொல்கிறது, இந்த பொருந்தாத இரக்கம்.‌

வ.முனீஸ்வரன்

2 Replies to “பொருந்தாத இரக்கம் – சிந்திக்க வைக்கும் சிறுகதை”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.